இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்று நம் தாய் திருச்சபையானது குருக்கள் மற்றும் பங்குத் தந்தைகளின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் நினைவு நாளைக் கொண்டாடுகிறது.

குருக்கள் ஆன்மீக வாழ்வில் தளர்வுற்ற தருணங்களில் புனித மரிய வியான்னியின் வாழ்க்கையை நினைத்து நம்பிக்கைக் கொண்டு புத்துணர்ச்சியுடன் இறைப்பணியினை தொடர்ந்து ஆற்றிட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும்போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.” என மோசேயிடம் ஆண்டவர் கூறுவதாக வாசித்தோம்.

இன்று நமது வருமானத்தில் திருச்சபைக்கு தரும் காணிக்கையில் முழு மனதோடு கொடுக்கின்றோமா? அல்லது முகச் சுழிப்போடு கொடுக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

நம்பிக்கை இல்லாத இடங்களில் ஆண்டவர் அற்புதங்களை நிறைவேற்றுவதில்லை என்ற உண்மையை உணர இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.