ஆகஸ்ட் 2 : நற்செய்தி வாசகம்
தமக்குள்ள யாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————————-
“இழக்காமல் இறையாட்சியில் இடமில்லை”
பொதுக்காலம் பதினேழாம் வாரம் புதன்கிழமை
I விடுதலைப் பயணம் 34: 29-35
II மத்தேயு 13: 44-46
“இழக்காமல் இறையாட்சியில் இடமில்லை”
இழக்கும்போது இன்பம் கண்ட விவசாயி:
ஊருக்கு ஓரமாக இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்த துறவியிடம் வேகமாக வந்த விவசாயி, “சுவாமி! வணக்கம்!” என்று சொல்லி அவரை வணங்கிவிட்டு, “நேற்றிரவு ஒரு தேவதை என் கனவில் வந்து, ‘ஊருக்கு வெளியே உள்ள மரத்தடியில் ஒரு துறவி இருக்கின்றார். அவரிடம் ஒரு வைரக்கல் இருக்கின்றது. அதை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாக இரு’ என்றது. அதனால் அந்த வைரக்கல்லை என்னிடம் கொடுக்க முடியுமா?” என்றார். துறவி அதற்கு மறுபேச்சுப் பேசாமல், தான் வைத்திருந்த ஒரு பையிலிருந்து வைரக்கல்லை எடுத்து அவரிடம் கொடுத்தார்.
துறவியிடமிருந்து பெற்றுக்கொண்ட வைரக்கல்லைக் கொண்டு பலவிதமான கற்பனைகளில் மூழ்கினார் விவசாயி. ‘இந்த வைரக்கல்லை விற்று பெரியதொரு வீடு கட்டவேண்டும். ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கவேண்டும். இன்னும் வேண்டியதை வாங்கி மனைவி, பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும்’ என்ற கற்பனைகளுடன் வீட்டை அடைந்தார் விவசாயி. இரவு நேரம் வந்தபொழுது, வைரக்கல்லை யாரும் எடுத்துக்கொண்டு போய்விடக்கூடாது என்பதற்காக அதைத் தலையணைக்குக் கீழே வைத்துத் தூங்கினார்; சரியாகத் தூக்கம் வரவில்லை. ‘யாராவது வந்து என்னைக் கொன்றுபோட்டு இந்த வைரக்கல்லை எடுத்துக்கொண்டு போய்விடுவாரோ, ஒருவேளை இந்த வைரக்கல்லை விற்கும்போது, ‘இது எங்கே கிடைத்தது?’ என்று வைர வியாபாரி என்னைக் காவல்துறையினரிடம் மாட்டிவிட்டால், என் வாழ்க்கை என்னாவது?’ என்று பலவிதமான எண்ணங்கள் விவசாயியின் மனத்தில் எழுந்தன.
இதனால் நிம்மதியிழந்த விவசாயி மறுநாள் காலையில், துறவியிடம் சென்று முந்தைய நாளில் நடந்தது அனைத்தையும் சொல்லிவிட்டு, “நான் வைரக்கல்லைக் கேட்டதும் என்னிடம் கொடுத்துவிட்டீர்களே! அப்படியெனில், இதைவிடப் பெரியது ஒன்று உங்களிடம் நிச்சயம் இருக்கவேண்டும். அதை எனக்குத் தாருங்கள்” என்றார். “ஓ! அதைக் கேட்கின்றாயா? அது உனக்கு வேண்டுமானால், உன் கையில் உள்ள இந்த வைரக்கல்லைத் தூக்கி ஏறி” என்று துறவி சொன்னதற்கு இணங்க விவசாயி, தன்னிடம் இருந்த வைரக்கல்லைத் தூக்கி எறிந்ததும், அவருடைய உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி
ஆம், இந்தக் கதையில் வரும் விவசாயி தன்னிடம் இருந்த வைரக்கல்லை இழந்தததும், அவருடைய உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்றவர்கள் தங்களிடம் உள்ள எல்லாவற்றையும் விற்றுப் புதையலையும் நல்முத்தையும் அடைகிறார்கள்.. அது குறித்து நாம் சிந்திப்போம்.ம
திருவிவிலியப் பின்னணி:
விண்ணரசை அடைவது என்பது மிகப்பெரிய பேறு. அத்தகைய பேற்றினை பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் இழப்பதற்குத் தயாராக வேண்டும். இழக்காமல் ஒருவர் இறையரசை அல்லது விண்ணரசை அடைய முடியாது. நற்செய்தியில் இயேசு விண்ணரசை புதையலுக்கும் நல்முத்துக்கும் ஒப்பிடுகின்றார். இந்த இரண்டையும் கண்டவர்கள் தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று, அவற்றை அடைகின்றார்கள். நாமும் இறையரசை அடைவதற்கு எதையும் இழப்பதற்குத் தயாராவோம்.
Comments are closed.