ஜூலை 29 : நற்செய்தி வாசகம்

நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27

அக்காலத்தில்

சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.

மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————-

மறையுரைச் சிந்தனை

புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர்

ஜூலை 29

இன்றைக்குத் திருச்சபையானது தூய மார்த்தாவினுடைய விழாவைக் கொண்டாடுகிறது. இவர் பெத்தானியா ஊரைச் சார்ந்த லாசர், மரியா இவர்களுடைய சகோதரி. ஆண்டவர் இயேசு இவர்(கள்) மட்டில் தனிப்பட்ட அன்பும், கரிசனையும் கொண்டிருந்தார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுகொள்ளலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக மார்த்தா விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு மார்த்தா, மரியாவினுடைய வீட்டிற்குச் சென்றபோது மரியாள் ஆண்டவருடைய பாதத்திலே அமர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள், ஆனால் மார்த்தாவோ ஆண்டவர் இயேசுவுக்கு சிறப்பானதொரு விருந்து கொடுக்கவேண்டும், அவரை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மும்முரமாக வேலைபார்க்கிறார். இவ்வாறு மார்த்தா விருந்தோம்பலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

பழைய ஏற்பாட்டிலே தொடக்க நூல் 18 ஆம் அதிகாரத்தில் ஆப்ரகாம் மம்ரே என்று இடத்திலே இருக்கின்றபோது மூன்று மனிதர்கள் – இறைதூதர்கள் – அங்கே வருகிறார்கள். அப்போது ஆபிரகாம் அவர்களுக்கு விருந்துகொடுத்து, அவர்களை சிறப்பாகக் கவனித்துக் கொள்கிறார். இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த அம்மூவரும் ஆபிரகாம் மற்றும் சாராள் தம்பதியினருக்கு குழந்தை வரம் தருகிறார்கள். தன்னை அண்டி வருகிறவர்களை கவனித்துக் கொள்கிறபோது கடவுளும் நம்மை கவனித்துக் கொள்வார் என்பதை ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மார்த்தா தன்னுடைய வீட்டிற்கு வந்த இயேசுவை சிறப்பாகக் கவனித்துக் கொண்டதால் கடவுளின் ஆசி பெறுகிறார்.

இன்றைக்கு நமது இல்லத்தை நாடி வரும் மக்களுக்கு நாம் இன்முகத்தைக் காட்டி விருந்தோம்புகிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்திய மரபிலே நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் கடவுளுக்கு இணையானவர்களாக உருவகப்படுத்தப் படுகிறார்கள். அவர்களை கடவுளைக் கவனித்துக் கொள்வதுபோன்று கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதே இங்கே சொல்லப்படுகிற செய்தி. ஆனால் உண்மையிலே நம்முடைய அன்றாட வாழ்வில் அப்படிச் செயல்படுகிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தென்கச்சி கோ. சாமிநாதன் அவர்களுடைய கதை ஒன்று.

ஒருவர் தன்னுடைய நண்பருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே அவரை நண்பருடைய வீட்டினர் சிறப்பாக உபசரித்தனர். பின்னர் அவரை தங்களுடைய வீட்டிலே கட்டாயம் உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுகொண்டனர். அவர்களுடைய கட்டாயத்தின் பேரில் அவரும் அங்கே உணவு உண்டார்.

அப்போது வீட்டில் இருந்த நாய்க்குட்டி ஒன்று அவரைப் பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தது. இதைக் கவனித்த அந்த விருந்தாளி, “ஏன் இந்த நாய்க்குட்டி என்னைப் பார்த்து இப்படி முறைத்துக்கொண்டிருக்கிறது” என்று கேட்க அதற்கு அவ்வீட்டார், “அந்த நாய்க்குட்டி சாப்பிடுகிற தட்டில்தான் நீங்கள் இப்போது சாப்பிடுகிறீர்கள்” என்றார். இதைக் கேட்ட அவர் தட்டைத் தூர எறிந்துவிட்டு, அங்கிருந்து தலை தெறிக்க ஓடினார்.

வேடிக்கையான கதையாக இருந்தாலும் இன்றைக்கு விருந்து உபசரிப்பு எந்தளவுக்கு குறைந்து போய்விட்டது என்பதை இக்கதை எடுத்து இயம்புகிறது. ஆதலால் போலித்தனமாக அல்லாமல் உண்மையான அன்போடு, தூய மார்த்தாவைப் போன்று விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோம்.

இரண்டாவதாக தூய மார்த்தா இயேசுவின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவள். தன்னுடைய சகோதரன் லாசர் இறந்தபோது, அவரைப் பார்க்க வந்த இயேசுவிடம் அவர், “நீர் எங்களோடு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்கிறார். தொடர்ந்து அவர் இயேசுவிடம், “நீரே மெசியா, இறைமகன், உலகிற்கு வரவிருந்தவர்” என்று அறிக்கை இடுகிறார்.

இயேசுவை முழுமையாக நம்பியதால் தான் மார்த்தாவால் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை அறிக்கையை வெளியிட முடிந்தது. நாமும் மார்த்தாவைப் போன்று இயேசுவை இறைமகன் என்று நம்பி வாழ்ந்தால் கடவுளின் ஆசியை நிறைவாய்ப் பெறலாம்.

ஆகையால் தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோம். இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து அவர் அன்புக்கு சாட்சிகளாக விளங்குவோம்.

Comments are closed.