ஜூலை 3 : நற்செய்தி வாசகம்

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.

பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————-

திருத்தூதரான தூய தோமா (ஜூலை 03)

நிகழ்வு

தோமாவைக் குறித்து சொல்லப்படும் தொன்மம்.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தோமாவிற்கு இந்தியாவிற்குப் போகுமாறு சீட்டு விழுந்தது. எனவே அவர் இந்தியாவிற்கு வந்தார். அப்போது குண்டபோரஸ் என்னும் மன்னன் அழகு மிளிர்ந்த ஒரு மாளிகை கட்ட நினைத்தான். இந்தப் பொறுப்பை அவன் தன்னுடைய ஆலோசகராகிய ஹப்பான்ஸ் என்பவரிடம் ஒப்படைத்தான். ஹப்பான்ஸ் யாரிடம் இந்த வேலையைக் கொடுப்பது என நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவருக்குக் கனவில், தோமா என்னும் ஒருவர் இருக்கிறார், அவர் கட்டடக் கலையில் வல்லுநர் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது. எனவே அவர் தோமாவை அணுகிச் சென்று, மாளிகை கட்டும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். மன்னர் தோமாவிடம் மாளிகை கட்டுவதற்கான போதிய பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் சென்றார்.

தோமாவோ, மன்னன் மாளிகை கட்டக் கொடுத்த பணத்தை அதற்காகப் பயன்படுத்தாமல், ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, மன்னர் தோமாவை அழைத்து, “மாளிகை எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர், “மாளிகை இங்கே இல்லை. விண்ணகத்திலே கட்டப்பட்டிருக்கிறது” என்றார். இதைக் கேட்டு சினமடைந்த மன்னன், தோமாவை சிறையில் அடைத்தான். இதற்கிடையில் மன்னனின் சகோதரன் காத் என்பவன் இறந்துபோனான். ஒருநாள் அவன் மன்னருக்குக் கனவில் தோன்றி, “சகோதரனே! விண்ணகத்தில் உனக்காக ஓர் அழகு மிளிர்ந்த மாளிகை கட்டப்பட்டிருக்கிறது, மேலும் நீ சிறையில் அடைத்து வைத்திருக்கும் மனிதர் சாதாரண மனிதர் அல்ல, அவர் கடவுளின் தூதர்” என்று உரைத்தான். இதை அறிந்த மன்னன் சிறையில் இருந்த தோமாவை விடுதலைசெய்து அனுப்பினான். அதோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்து திருமுழுக்குப் பெற்று உண்மைக் கிறிஸ்தவனாக வாழத் தொடங்கினான்.

Comments are closed.