அமைதி என்பது, உண்மையிலும், பிறரன்பு பணிகளிலும்தான் உள்ளது
உண்மையிலும், பிறரன்பு பணிகளிலும்தான் அமைதிக்கான வழி அமைந்துள்ளது என்றும் பிறரன்புப் பணிகளில் உண்மையைத் தேடுவதுதான் ஓர் அமைதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்னும் உறுதியான அடித்தளத்தை அமைக்கும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியிலுள்ள Teramo நகரில் ஜூன் 30 முதல் ஜூலை 01 வரை ‘அமைதிக்கான அறிவியல்’ என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது அனைத்துலகக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘அமைதிக்கான அறிவியல்’ என்ற தலைப்பு இன்றையச் சூழலுக்கேற்ற தலைப்பு என்று பாராட்டியுள்ள திருத்தந்தை, அறிவியலின் ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்பது, உண்மையில், ஒரு குறிப்பிட்ட வகையான பணி என்றும், அதுவும் அதுவொரு அறிவுசார் பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், அறிவின் பல்வேறு துறைகளில் தங்களின் அர்ப்பணிப்பின் வரலாற்றுப் பொறுப்பைக் கண்டறிவது, ஒரு புதிய அறிவுப் பண்பாட்டை ஊக்குவிப்பதற்காகக் குறிப்பிட்ட துறைகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் சோதனையை முறியடிப்பது அவசரமானது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
‘அனைவரும் உடன்பிறந்தோரே’ (காண்க எண். 3-4) என்ற எனது திருமடலில் நான் குறிப்பிட்டுள்ளபடி மாறிவரும் காலச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், அறிவார்ந்த பிறரன்புப் பணிகள் என்பது, ஆராய்ச்சி மையங்களுக்குள் அடங்கிப்போய்விடக் கூடாது என்பதையும், மாறாக, அது புதுப்பிக்கப்பட்ட புதியதொரு அமைப்பை உயிர்ப்பித்து நிலைநிறுத்த வேண்டும் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.
“இன்று, அறிவார்ந்த பணிகள் என்பது மனிதரை உயரிய சிந்தனைகளிக்குத் தூண்ட வேண்டும். அறிவு மற்றும் அன்பு, நம்பிக்கை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் இணக்கமான ஒன்றிப்பில், அவர் தனது தேடலில் அமைதியைக் காண்கிறார், மேலும் அவரது தேவைகளுக்கு உண்மையிலேயே பதிலளிக்கக் கூடிய கலாச்சார மற்றும் சமூக மாதிரிகளை உணர முடியும்” என்று திருத்தந்தை ஆறாம் பவுல் 1954-ஆம் ஆண்டு மிலான் நகரில் பேராயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டபோது, அத்தகைய சவாலைப் பற்றி பேசியதாக எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.