ஜூலை 1 : நற்செய்தி வாசகம்
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.
நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.
இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.
இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.
பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————–
நம்பிக்கையே துன்பத்தில் சிறந்த மருத்துவர்!
பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் சனிக்கிழமை
I தொடக்கநூல் 18: 1-15
II மத்தேயு 8: 5-17
நம்பிக்கையே துன்பத்தில் சிறந்த மருத்துவர்!
நம்பிக்கையினால் நலம்:
பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கேரியிலிருந்து (Hungary) ஒரு குடும்பம் நியூயார்க்கில் குடியேறியது. இக்குடும்பம் நியூயார்க்கில் குடியேறினாலும், அங்கேரியில் உள்ள தங்களுடைய உறவினரான லாஸ்லோவிற்கு அடிக்கடி கடிதம் எழுதுவதுண்டு. லாஸ்லோவும் இந்தக் குடும்பத்திற்குக் கடிதம் எழுதுவதுண்டு. இப்படியிருக்கையில் ஒருசில ஆண்டுகளாகவே அங்கேரியில் இருந்த லாஸ்லோவிடமிருந்து நியூயார்க்கில் இருந்தவர்களுக்குக் கடிதம் எதுவும் வரவே இல்லை. இதனால் அவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்று பதறிப்போன நியூயார்க்கிலிருந்த குடும்பம், ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தது. ஒருசில மாதங்கள் கழித்து லாஸ்லோவிடமிருந்து பதில் கடிதம் வந்தது. கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது சரியாகப் புரியாததால், நியூயார்க்கில் இருந்த குடும்பம், ‘லாஸ்லோவின் குடும்பம் ஏதோ நெருக்கடியில் இருக்கிறது’ என நினைத்துக்கொண்டு மூன்று பெட்டிகளில் எழுது பொருள்கள், துணிமணிகள், கூடவே சாக்லேட்களையும் அனுப்பி வைத்தது.
நியூயார்க்கில் இருந்த குடும்பம் லாஸ்லோவின் குடும்பத்திற்கு இவற்றை அனுப்பி வைத்த ஒரு மாதம் கழித்து, அங்கிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், “நீங்கள் அனுப்பிய பொருள்களைப் பெற்றுக்கொண்டோம். அதிலும் குறிப்பாக, நீங்கள் அனுப்பி வைத்த மருந்து, என்னுடைய முதுகுவலியையும், என் மனைவியின் மூட்டுவலியையும், என் மகளுடைய தலைவலியையும் போக்கிற்று. அதை மீண்டுமாக எங்களுக்கு அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி” என்று இருந்தது. இதைப் படித்துப் பார்த்துவிட்டு, நியூயார்க்கில் இருந்த குடும்பம், “நாம் எங்கே மருந்து அனுப்பினோம்! ஒருவேளை தவறுதலாக அனுப்பி விட்டோமோ’ என்று நினைத்து, “அந்த மருந்தின் பெயரை எழுதி அனுப்புங்கள்” என்று கடிதம் போட்டது.
சில நாள்களில் அங்கிருந்து கடிதம் வந்தது, அதில் “Life Saver” எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் நியூயார்க்கில் இருந்த குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி. ஏனெனில் Life Saver என்பது மருந்து கிடையாது. அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய சாக்லேட். இதை அறியாமல் லாஸ்லோவின் குடும்பம் அதை மருந்து என நினைத்துக்கொண்டு உண்டிருக்கின்றது; நலமும் பெற்றிருக்கின்றது.
ஆம், நம்பிக்கையோடு ஒரு செயலைச் செய்தால் அது நடந்தே தீரும். அதற்கு இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் சான்றாக இருக்கின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
Comments are closed.