பொதுக் காலத்தின் பன்னிரண்டாம் வாரம்
சனிக்கிழமை
(ஜூலை 01)
நோயாளர்களிடம் இரக்கம்
இன்றைய உலகில் எத்தனையோ மனிதர்கள் உடல் நோயாலும், உள்ள நோயாலும் பாதிக்கப்பட்டு, அடையும் துன்பங்களைச் சொல்லிமாளாது. இவர்களிடம் நாம் இயேசுவைப் போன்று இரக்கம் காட்ட வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையைத் தருகின்றது இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட இறைவாக்குப் பகுதியில் மரியா, “ஆண்டவர் தம் இரக்கத்தை என்றும் நினைவில் கொண்டுள்ளார்” என்று பாடுகின்றார். ஆண்டவர் எப்படித் தம் இரக்கத்தை நினைவில் கொண்டுள்ளார் என்பதை இன்றைய இறைவார்த்தையை நாம் கருத்தூன்றி வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடியும்.
முதல் வாசகத்தில் தன்னிடம் வருகின்ற மூன்று மனிதர்களுக்கு – ஆண்டவருக்கு – ஆபிரகாம் நல்ல முறையில் விருந்து உபசரிக்கும்போது, ஆண்டவர் அவரிடம், “நான் இளவேனில் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்கிறார். ஏனெனில், சாரா குழந்தையின்றி இருந்தார். அதனைக் கண்ணுற்ற ஆண்டவர் அவருக்கு ஒரு மகனைத் தருகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு நூற்றுவத் தலைவருடைய பையனுக்கும், சீமோனுடைய மாமியாருக்கும், இன்னும் பலருக்கும் நலமளிப்பதைப் பற்றி வாசிக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு மக்கள்மீது இரக்கம் கொண்டதாலேயே அவர்களுக்கு நலவாழ்வினைத் தர முடிகின்றது. இயேசு இப்படி நோயாளர்களுக்கு நலம் தருவதை மத்தேயு நற்செய்தியாளர், “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; தம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்” (எசா 53:4) என்ற இறைவார்த்தையோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்.
இயேசு மக்கள்மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு நலமளித்தது போல, நாமும் நம் நடுவில் வாழும் நோயாளர்களிடம் இரக்கம் கொண்டு, அவர்களுக்கு நம்முடைய உடனிருப்பை வெளிப்படுத்த வேண்டும். அது மிகவும் முக்கியம்.
நோயாளர்களுக்காக ஒரு துறவற அவை
ஒவ்வொரு வார இறுதியிலும் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த நோயாளர்களைச் சந்தித்துப் பேசுவதையும் அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதையும் ஒருவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் மருத்துவமனைக்குச் செல்லும்போது தனது பத்து வயது மகளையும் கூட்டிச் சென்றார்.
ஒருநாள் அவர் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த நோயாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, படுக்கையில் கிடந்த ஒரு பெண்மணி அவரிடம், “என்னைத் தூக்கி உட்கார வைக்க முடியுமா? படுத்தே கிடப்பதே எனக்கு மிகவும் வலிக்கிறது” என்றார். உடனே அவர் அந்தப் பெண்மணியை வாஞ்சையோடு தூக்கிப் படுக்கையில் உட்கார வைத்தார். இத்தனைக்கும் அந்தப் பெண்மணியின் உடலிலிருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தபோதும்!
இதெல்லாம் அந்த மனிதருடைய பத்து வயது மகள் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னாளில் அவள் வளரும்போது, ‘நாம் ஏன் நோயாளர்களைக் கவனித்துக் கொள்ள ஒரு துறவற அவையைத் தொடங்கக் கூடாது?’ என்ற எண்ணம் அவரது உள்ளத்தில் ஏற்பட்டது. அப்படி உதயமானதுதான் ‘Sisters of Howthron’ என்ற துறவற அவை. அதனை நிறுவியவர் அருள்சகோதரி மதர் மேரி அல்போன்சா. அத்துறவற அவையை நிறுவுவதற்கு அவருக்கு உத்வேகத்தைத் தந்த அவரது தந்தையின் பெயர் நத்தனியேல் ஹொவ்த்ரோன். இவர் ஒரு பிரபல நாவலாசிரியரும் கூட.
நம் நடுவில் வாழும் நோயாளர்களைத் தேடிச் சென்று, அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். இதனை நாம் உணர்ந்து வாழ வேண்டும்..
Comments are closed.