ஜூன் 10 : நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
____________________________________________
பொதுக்காலத்தின் ஒன்பதாம் வாரம் சனிக்கிழமை
I தோபித்து 12: 1, 5-15, 20
தோபித்து 13: 2, 6, 7, 8 (2a)
II மாற்கு 12: 38-44
உண்மையான மன்றாட்டை விடச் சிறந்தது எது?
முகமலர்ச்சியோடு கொடு
தோபியாயோடு வழித்துணையாகச் செல்லும் முதன்மை வானதூதரான இரபேல், அவரைப் பத்திரமாக அவரது தந்தையின் வீட்டிற்குக் கொண்டு வந்தபிறகு தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, ஒருசில அறிவுரைகளை அவர்களுக்குத் தருகின்றார். அவற்றுள் முதன்மையான அறிவுரைதான், “அநீதியாகச் சேர்த்த செல்வத்தை விட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால், நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது” என்பதாகும்.
உண்மையான மன்றாட்டே சிறந்ததாக இருக்கும்போது, அதைவிடச் சிறந்தது நீதியுடன் இணைந்த தருமம் என்றால், அது எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இந்தப் பின்னணியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை அணுகினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
எருசலேம் திருக்கோயிலில் பல்வேறு தேவைகளுக்காகப் பதின்மூன்று வகையான காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் வசதி படைத்த பலர் மிகுதியாகக் காணிக்கை செலுத்தியபோது, வறிய நிலையில் இருந்த, அதுவும் மறைநூல் அறிஞர்களால் வஞ்சிக்கப்பட்ட ஏழை கைம்பெண் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் காணிக்கையாகச் செலுத்தினார் இதனால் இயேசு அவரை மற்ற எல்லாரையும் விட மிகுதியாகக் காணிக்கை செலுத்தினார் என்று பாராட்டுகின்றார்.
ஏழை கைம்பெண் மறைநூல் அறிஞரைப் போன்று யாருக்கும் அநீதி இழைக்கவில்லை. மாறாக, அவர் நீதியுடன் காணிக்கை அல்லது தருமம் செலுத்துகின்றார். நாமும் நீதியுடன் கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும், ஏழைகளுக்குத் தருமம் கொடுக்க வேண்டும். தவிர, அவ்வாறு நம்மைச் செயல் படத் தூண்டும் ஆண்டவரை பதிலுரைப்பாடலில் பாடக்கேட்டது போன்று போற்றிப் புகழ வேண்டும்.
ஊன்றுகோலையே தந்தவர்
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு பகுதியில் திருப்பலியின்போது காணிக்கை செலுத்தக் கையில் பணம் இல்லாதவர்கள் வெறும் கையைக் காணிக்கைத் தட்டில் வைத்து எடுத்தால் போதுமானது என்றொரு வழக்கம் இருந்தது.
ஒருநாள் அங்கே கால் ஊனமுற்ற பெண்மணி ஒருவர் திருப்பலி காணச் சென்றார். காணிக்கை நேரத்தில் காணிக்கைத் தட்டு ஒவ்வொருவரையும் கடந்து வரும்போது, கையில் பணம் இல்லாதவர்கள் வெறுங்கையை வைத்து எடுப்பதை இவர் பார்த்தார். இவருக்குக் கோயிலுக்கு மிகுதியாகக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், கையில் எதுவுமே இல்லாததால், தனக்குப் பெரிய துணையாக இருந்த ஊன்றுகோலை எடுத்துக் காணிக்கைத் தட்டில் வைத்தார். அதைக் கண்டு எல்லாரும் வியந்தனர்.
Comments are closed.