பொதுக் காலத்தின் ஒன்பதாம் வாரம்

வியாழக்கிழமை

(ஜூன் 08)

ஆண்டவரை அன்பு செய்வோம்

இயேசு எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்த செயல் அதிகாரத்தில் இருந்த அத்தனை பேரையும் அசைத்துப் பார்த்தது. இதனால் யூத சமூகத்தில் அதிகாரத்தில் இருந்த அத்தனை பேரும் அவரிடம் வந்து அவரைப் பேச்சில் சிக்க வைக்க முயல்கின்றார்கள். இன்றைய நற்செய்தியிலோ மறைநூல் அறிஞர் இயேசுவிடம் வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்.

மறைநூல் அறிஞருக்கு அனைத்திலும் முதன்மையான கட்டளை எது என்று நன்றாகவே தெரிந்திருக்கும். எனினும் அவர் இயேசுவிடம் உள்நோக்கத்தோடு இக்கேள்வியைக் கேட்கின்றார். இயேசு அவரிடம், இணைச்சட்ட நூல் 6: 5, லேவியர் 19: 18 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளையும் இணைத்து, பதிலாகத் தருகின்றார்.

கடவுளை அன்பு செய்வதும், அதற்கு இணையாக அடுத்திருப்பவரை அன்பு செய்வதும்தான் முதன்மையான கட்டளை என்றால், இந்தக் கட்டளையின்படி வாழ்கின்றார்கள் இன்றைய முதல் வாசகத்தில் வரும் தோபியாவும் சாராவும். இவர்கள் இருவரும் தங்கள் இல்லற வாழ்க்கையைத் தொடங்கும் முன்பாக, கடவுள் தங்களைக் காத்திடுமாறு மன்றாடுகின்றார்கள். கடவுளும் அவர்களை ஆபத்திலிருந்து காக்கின்றார்.

கடவுளை அன்பு செய்யவேண்டும் என்றால், பெயரளவில் நின்று விடாமல் அதனைச் செயலில் காட்ட வேண்டும் (1 யோவா 3: 18). தோபியாவும் சாராவும் கடவுள்மீது கொண்டிருந்த அன்பைத் தங்கள் செயலில் காட்டினார்கள். இதனால் இன்றைய நாளில் நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 128 இல் சொல்லப்படும் எல்லா ஆசிகளையும் பெற்றார்கள்.

கடவுளை நாம் அன்பு செய்யவேண்டும்; அவருக்கு அஞ்சி வாழ வேண்டும். அப்போது அவர் நம்மை எல்லாத் தீமையிலிருந்து காத்து, நமக்கு அருள் பாலிப்பார்.

நிலநடுக்கத்திலும் புன்னகை

1906 ஆம் ஆண்டு சான் பிரான்சிகோ நகரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான வீடுகளும் பாலங்களும் இடிந்து தரைமட்டமாயின.

இதையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கியவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெரியவர் ஒருவரை உயிரோடு மீட்டனர். இதில் வியப்பு என்னவென்றால், மீட்புக் குழுவினர் அவரை இடிபாடுகளிலிருந்து வெளியே கொண்டு வந்தபோது, அவர் சிரித்துக் கொண்டே இருந்தார்.

அப்போது மீட்புக் குழுவில் இருந்த ஒருவர் அவரைப் பார்த்து, “எப்படி உங்களால் இந்த நிலையிலும் சிரித்துக் கொண்டிருக்க முடிகின்றது?” என்றார். அதற்குப் பெரியவர், “இந்த உலகையே அசைத்துப் போடும் கடவுளால் என்னைக் காக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதனால்தான் சிரித்துக்கொண்டிருக்கின்றேன்” என்றார்.

கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழும் அவரது அடியார்களை அவர் கைவிடாமல் காத்திருவார் என்பதையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

கடவுள் நம்மைக் காக்கின்றவர். அதனால் நாம் அவரை அன்பு செய்து வாழ்வோம்.

Comments are closed.