பொதுக் காலத்தின் ஒன்பதாம் வாரம்

புதன்கிழமை

I தோபித்து 3: 1-11, 16-17

திருப்பாடல் 25: 2-3, 4-5ab, 6-7c, 8-9 (1)

II மாற்கு 12: 18-27

மன்றாட்டைக் கேட்கும் ஆண்டவர்

வாழும் கடவுளிடம் நம்மைக் கைவிடார்

எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை இயேசு விரட்டியடித்த பின், அவரைப் பேச்சில் சிக்க வைக்கவேண்டும் என்பதற்காக மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள், எரோதியர் என்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் வருகின்றார்கள். இன்றைய நற்செய்தியில் அவரிடம், உயிர்ப்பின்மீது நம்பிக்கையில்லாத சதுசேயர்கள் வருகின்றார்கள். அவர்கள் இயேசுவிடம் உயிர்ப்பு தொடர்பான குதர்க்கமான ஒரு கேள்வியைக் கேட்கும்போது, அவர் அவர்களிடம், “கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்” என்று சொல்லி, அவர்களின் வாயை அடைக்கின்றார்.

கடவுள் வாழ்வோரின் கடவுள் என்றால், அவரிடம் நாம் நம்பிக்கையோடு மன்றாடும்போது, அவர் நமது மன்றாட்டிற்குச் செவிசாய்க்கின்றார். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 25 இல் அதன் ஆசிரியர், “ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்” என்கிறார். கடவுள் தனது மன்றாட்டைக் கேட்டதாலேயே திருப்பாடல் ஆசிரியர் தம் உள்ளத்தைக் கடவுளை நோக்கி எழுப்புகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், தங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடிக்கும் பழிச்சொல்லுக்கும் உள்ளான இருவர் ஆண்டவரிடம் மன்றாடும்போது, ஆண்டவர் அவர்கள் மன்றாட்டைக் கேட்பதைப் பற்றி வாசிக்கின்றோம். ஒருவர் தோபித்து, இன்னொருவர் சாரா.

தோபித்து தன் மனைவியின் பழிச்சொல்லைத் தாங்கிக் கொள்ளாமல் கடவுளிடம் மனம் வெதுங்கி மன்றாடுகின்றார். சாராவும் பழிச்சொல்லைத் தாங்க முடியாமல், தற்கொலை செய்யலாம் என்று நினைக்கும்போது, கடவுளிடம் மன்றாடுகின்றார். இவ்வாறு இருவரும் கடவுளிடம் மன்றாடும்போது கடவுள் அவர்களின் வேண்டுதலைக் கேட்டு, அவர்களுக்கு விடுதலை அளிக்கத் தம் தூதரை அனுப்பி வைக்கின்றார்.

ஆகையால், நாம் எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல், ஆண்டவரிடம் நம்பிக்கையோடு மன்றாடுவோம். ஏனெனில், அவர் வாழ்வோரின் கடவுள், இறந்தோரின் கடவுள் அல்ல.

கடவுளுக்கு பிரச்சனைகளும்

ஒரு பெண்மணி தன்னுடைய பங்குப் பணியாளரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, “நானெல்லாம் சிறிய சிறிய பிரச்சனைகளையெல்லாம் கடவுளிடம் எடுத்துச் சொல்லி, அவரைத் தொந்தரவு செய்ய மாட்டேன்; பெரிய பிரச்சனைகளைத்தான் அவரிடம் எடுத்துச் சொல்லி, அவற்றிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் மன்றாடுவேன்” என்றார்.

அப்போது பங்குப் பணியாளர் அவரிடம், “கடவுளுக்கு எதுவும் பெரிய பிரச்சனை கிடையாது. அவருக்கு எல்லாமே சிறிய பிரச்சனைதான்” என்று விளக்கம் அளித்தார்.

கடவுளைப் பொறுத்தவரையில் எல்லாமே சிறிய பிரச்சனைதான். அதனால் நம்முடைய மன்றாட்டைக் கேட்கும் வாழும் கடவுளான ஆண்டவரிடம் நம்பிக்கையுடன் மன்றாடி, அவரது ஆசியைப் பெறுவோம்.

ஆண்டவரின் வார்த்தை

“இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்” (திபா 34:6).

Comments are closed.