திருமணம் கடவுளிடமிருந்து வரும் பரிசு – திருத்தந்தை

திருமணம் என்பது எப்போதும் கடவுளிடமிருந்து வரும் பரிசு என்றும் திருஅவையின்  மேய்ப்புப்பணியின் பிரதிபலிப்பாகவும், நற்செய்தியை அறிவிப்பதற்கான முக்கியமாக தளமாகவும் குடும்பம் செயல்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 27 வெள்ளிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான,  திருஅவையின் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றுபவர்கள் ஏறக்குறைய 250 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமணம் எப்போதும் ஒரு பரிசு! அதன் நம்பகத்தன்மை தெய்வீக நம்பகத்தன்மையின் மீது தங்கியுள்ளது,தெய்வீக பலனை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றும் ஆணும் பெண்ணும் இந்தப் பரிசை வரவேற்கவும், சுதந்திரமாக ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும் இதன் வழியாக அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் மேய்ப்புப்பணியில், நீதிபதிகளின் பணி முக்கியமானது என்றும், குடும்பம், கிறிஸ்தவ திருமணம் ஆகியவற்றில் கவனமும் அக்கறையும் காட்டுவதில் நாம் மனந்தளரக் கூடாது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதிபதிகளின் ஒவ்வொரு தீர்ப்பிலும் செயல்படும் தூய ஆவியார், பிள்ளைகளின் நலன், அவர்களின் மனஅமைதி, திருமண முறிவால் ஏற்படும் மகிழ்வின்மை ஆகியவற்றை தீர்ப்பின்போது மறக்காமல் இருப்பதற்கு உதவுவாராக என்றும் கூறினார்.

Comments are closed.