இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது.” என யோவான் திருவெளிப்பாட்டில் கூறுகிறார்.
கடவுளுக்கு உகந்த வழியில் நடந்து, அவரது முத்திரையைத் தங்கள் நெற்றியில் பொறிக்கப்பட்டவர்கள், அவரது திருமுன் நின்றுகொண்டு அவரை வழிபடுவார்கள் அவரது திருமுகத்தைக் காண்பார்கள். ஏனெனில்
“தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என நற்செய்தி (மத் 5: 😎 கூறுகிறது. இவ்வாறு தூய்மையான உள்ளத்தினராய் இருந்து இறைவனைக் காண இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
“நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்’ (கொலோ 3:1)” என்பார் புனித பவுல். ஆகையால், இவ்வுலகு சார்ந்தவற்றை அல்ல, மேலுலகு சார்ந்தவற்றையே நாம் நாடுவோம். அதன்மூலம் மானிட மகன் முன்னிலையில் நாம் நிற்க வல்லவராகிட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
திருவருகைக் காலத்தை எதிர் கொள்ள இருக்கும் நாம், நமது உள்ளத்திலும் இல்லத்திலும் இயேசு பாலன் பிறந்திட நம்மை முழுமையாக தயார்படுத்திட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நம்மையே நாம், முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.