இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
“ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்கள் தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக் காத்துக் கொண்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.”* என யோவான், திருவெளிப்பாட்டில் கூறுகிறார்.
விண்ணுலகில் ஆண்டவரின் அரியணையின் முன் நின்று அவரைப் போற்றி பாட மாசற்ற, கறைபடாத, பொய் உரைக்காத நாவினைக் கொண்டவர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறார். ஆண்டவரின் வார்த்தையை வாசிக்கும், அவரைப் போற்றித் துதிக்கும் நம் நாவும் உண்மையை மட்டுமே உரைக்க. வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 24:3,4
“ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்.” என கூறுகிறது.
இறைவனை விசுவசிக்காமல் நாம் மற்றவற்றை/மற்றவரை நம்பும் அனைத்தும் பொய்த் தெய்வங்களே.
ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் பார்ப்பது ஆகிய பொய்த் தெய்வங்களை நம்பி அவற்றில் உள்ளத்தை திருப்பிய நாம் ஆண்டவரது மலை மேல் ஏறத் தகுதியுள்ளவர்களா? என சிந்திக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
“இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என நமதாண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறுகிறார்.
இயேசு, மக்கள் எவ்வளவு காணிக்கையை செலுத்தினார்கள் என்று பார்க்கவில்லை. காணிக்கை செலுத்திய பின் அவர்களிடம் எவ்வளவு இருந்தது என்பதைப் பார்த்தார். கைம்பெண் தன் பிழைப்பிற்காக வைத்திருந்தவற்றிலிருந்தும் காணிக்கை செலுத்தியதால், அவர் காணிக்கை செலுத்திய பின் அவரிடம் ஒன்றும் இல்லை. இறைவனை முழுமையாக நம்பிய அப்பெண்மணியை போல நாமும் விசுவாசத்தில் முழுமை பெற இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.