இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
““இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்” என்று நல்ல கள்வன் கூறியதைக் கேட்டோம்.
நாமும் நமது இம்மை வாழ்விற்கு பின்னர் இறைவனுடன் பேரின்ப வீட்டில் இருக்க வேண்டி இறைவனிடம் மன்றாட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
கிறிஸ்து அரசரின் பெருவிழாவினைக் கொண்டாடும் நாம் நாட்டுத் தலைவர்கள் ஞானத்தோடும், நேர்மையோடும், நீதியோடும் ஆட்சி புரிந்திட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து
இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெறவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
திருஅவையின் மறுமலர்ச்சிக்காக தற்போது பல்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் தூய ஆவியானவரின் தூண்டுதல் நன்கு செயல்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.