இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
“உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. ஆகையால் நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம் மாறு.” என இன்றைய முதல் வாசகமான யோவான் எழுதிய திருவெளிப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
நாம் ஆண்டவரை விட்டு விலகிய தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என பார்வையற்றவர் இயேசுவை நோக்கிக் கூக்குரலிட்டு பார்வையை மீண்டும் பெற்றது போல நாமும் ஆண்டவரிடம் ‘இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்.’ என மனமுருகி வேண்டி நமது வேண்டுதல்களை ஆண்டவர் திருப்பாதம் வைப்போம். நம்முடைய வேண்டுதல்கள் கேட்கப்பெற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்று குழந்தைகள் தினத்தில், நாம் நமது குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதித்து ஞானத்துடன் வளர்க்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.