இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“நம் தந்தை விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.” என புனித பவுலடியார் கூறுகிறார். நம் மீது அளவிட முடியாத அன்பினை வைத்திருக்கும் நம்மை படைத்தவருக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். இறைத்திட்டம் நிறைவேறுவதற்காக இரத்தம் சிந்தி தங்கள்இன்னுயிரை ஈந்த அனைத்து தூய ஆன்மாக்களும் விண்ணகத்திலிருந்து நமக்காக வேண்டிட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
கத்தோலிக்க திருச்சபை அக்டோபர் மாதத்தை ஜெபமாலை மாதமாக அனுசரித்து வருகிறது. அக்டோபர் மாதம் ஜெபமாலை அன்னைக்குரிய மாதமாகும். அலகையை அகற்றிட அன்னை அளித்த செபமாலையை இந்த மாதம் முழுவதும் செபிப்போம். தினமும் நான்கு செபமாலையாவது செபிக்க உறுதி கொண்டு இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
மக்கள் நலனில் அக்கறையும், மனிதநேய மிகுந்த இரக்க செயல்களிலும் ஈடுபட்ட இங்கிலாந்தை ஆண்ட அரசர் இன்றைய புனிதர் புனித எட்வர்ட் போன்ற சிறந்த ஆட்சியாளர்கள் நமது நாட்டிற்கும் கிடைக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.