இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இந்த மாதம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இறை வார்த்தைகளுக்கு செவிமடுக்காமல் நம் ஆண்டவர் இயேசுவைப் புறக்கணிக்கும் மக்களுக்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
குருவும், சிறந்த மறையியல் வல்லுநரும், இன்றைய புனிதருமான புனித ஜெரோம் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் விவிலிய அறிஞர்களின் பாதுகாவலராவார்.
இறையியல் பயிலும் அனைத்து மாணவர்களுக்காகவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.