இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்று திருஅவையானது தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்களின் விழாவினைக் கொண்டாடுகிறது.
எபிரேயத்தில் ‘மிக்கேல்’ என்பதற்கு ‘கடவுளுக்கு நிகர் யார்?’ என்பது பொருள்.
கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலரான அதிதூதர் புனித மிக்கேல், நமது திருஅவையை அலகையின் இடையூறுகளிலிருந்து பாதுகாத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
அதிதூதர் புனித ‘ரஃபேல்’ என்ற பெயருக்கு எபிரேயத்தில் ‘கடவுள் குணமளிக்கின்றார்’ என்பது பொருள்.
இவ்வுலகில் உள்ள எண்ணற்ற நோயாளிகளை குணப்படுத்த புனித ரஃபேல் இறைவனிடம் பரிந்து பேச வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
அதிதூதர் புனித ‘கபிரியேல்’ என்ற பெயருக்கு எபிரேயத்தில் ‘இறைவன் என் பலம்’ என்பது பொருள்.
கடவுளின் செய்திகளை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் அதிதூதரான புனித கபிரியேல், நம்மை பற்றிய இறைவனின் திட்டங்களை நமக்கு உணர்த்த வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
‘காவல் தூதர்களை நம்மை வழிநடத்த விட்டுவிட்டால் நாம் அச்சமின்றி வாழலாம்’ என்ற நம்பிக்கையோடு தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய அதிதூதர்களின் ஆசீரை இன்று நாம் பெற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.