வாசக மறையுரை (செப்டம்பர் 30)
பொதுக் காலத்தின் இருபத்து ஆறாம் வாரம்
வெள்ளிக்கிழமை
I யோபு 38: 1, 12-21, 40: 3-4
II லூக்கா 10: 13-16
கடவுளையே புறக்கணிப்பவர்கள்
எது பெரிய பாவம்?:
அமெரிக்காவைச் சேர்ந்த பன்முகக் கலைஞர் ஜார்ஜ் பெர்னாட்சா. ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அவரிடம், “உலகிலேயே மிகப்பெரிய பாவம் எது?” என்று கேட்டார். உடனே ஜார்ஜ் பெர்னாட்சா தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்.
அவர் தீவிரமாக யோசிப்பதைப் பார்த்த செய்தியாளர், “உலகிலேயே மிகப்பெரிய பாவம் வெறுப்பா?” என்றார். “இல்லை” என்று அவர் சொன்னதும், “விபசாரமா?” என்று செய்தியாளர் கேட்டார். அதற்கும் அவர், “இல்லை” என்றதும், “அப்படியானால் மன்னிக்க மனமின்மையா?” என்று செய்தியாளர் ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.
“நீங்கள் சொன்ன எதுவுமே இல்லை. ஆனால், நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பாவம் கண்டுகொள்ளாமை” என்று தெளிவாகப் பதிலளித்தார் ஜார்ஜ் பெர்னாட்சா.
ஆம், கண்டுகொள்ளாமையே மிகப்பெரிய பாவம். இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் தன்னைக் கண்டுகொள்ளாமல், தன்னைப் புறக்கணித்ததற்காக அவர்களைக் கடுமையாகச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
திருவிவிலியம் வரலாற்றில் அல்லது இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த யாவற்றையும் தொகுத்து வைத்திருக்கும் ஒரு வரலாற்று ஏடு அல்ல. மாறாக, அது தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்ட ஒரு நம்பிக்கை ஏடு. இதில் இயேசுவின் வாழ்வில் நடந்த எல்லாமும் இடம்பெற்றிருக்கும் எனச் சொல்ல முடியாது. அவர் வேறு பல வல்ல செயல்களைச் செய்தார். அவையெல்லாம் திருவிவிலியத்தில் இடம் பெறவில்லை (யோவா 20:30). இந்தப் பின்னணியில் நாம் இன்றைய இறைவார்த்தையை அணுகினால் மிகச் சிறப்பாக இருக்கும்.
நற்செய்தியில் இயேசு கொராசின், பெத்சாய்தா ஆகிய இரு நகர்களைக் கடுமையாகச் சாடுவதைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசு இந்த இரு நகர்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்துப் பல வல்ல செயல்களைச் செய்திருந்தார். அதையெல்லாம் அவர்கள் கண்டும், கேட்டும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்கள். இயேசுவின் விருப்பமெல்லாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனி தரவேண்டும் என்பதையே ஆகும் (யோவா 15:8) இந்த இரண்டு நகர்களிலும் இருந்தவர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டும் அவரது வல்ல செயல்களைக் கண்டும் கனிதராமல் இருந்ததால் இயேசு அவர்களைச் சாடுகின்றார்.
இன்றைய முதல் வாசகம் ஆண்டவருக்கும் யோபுக்கும் இடையே நடக்கும் முதல் உரையாடலைப் பதிவு செய்கின்றது. யோபு நேர்மையாய் நடந்தாலும் ஆண்டவரைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாமல் பேசுகின்றார். இறுதியில் அவர், “என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்” என்று தன் தவற்றை உணர்ந்து பேசுகின்றார்.
கடவுளைப் பற்றி அறிவது இன்றியமையாதது; அதைவிடவும் அவரது போதனையின் படி நடப்பது. நாம் கடவுளை முழுமையாக அறிந்து, அவரது போதனையின் படி நடந்து, மிகுந்த கனிதருவோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவரைப் பற்றி அறிவதும் அவரது வழியில் நடப்பதும் நம்மை வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.
ஆண்டவரைப் பற்றிய அறியாமையே அழிவுக்குக் காரணம்.
இறைவார்த்தையைக் கேட்பதும் அதன்படி நடப்பதும் மிகவும் அவசியம்.
இறைவாக்கு:
‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5:16) என்பார் இயேசு. எனவே, நம் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, உலகிற்கு ஒளியாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.