இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
புதிதாக பிறந்த இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் இறைவன் நம்மைக் காத்து வழி நடத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.” எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது.” என திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.” என அப்போஸ்தலர்களைக் குறித்து வாசித்தோம்.
உலகப் பற்றுதல்களை உதறினால் மட்டுமே கடவுளை இறுகப் பற்றிக் கொள்ள முடியும் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோரின் பாதுகாவலரும், இன்றைய புனிதருமான புனித கைல்ஸ் வழியாக உடல் ஊனமுற்றோருக்காக வேண்டுவோம்.
வாழ்க்கையில் அவர்கள் நல்ல முன்னேற்றம் காணவும், அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமையப் பெறவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.