ஆகஸ்ட் 23 : நற்செய்தி வாசகம்
தி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26
அக்காலத்தில்
இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
“நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவாராக!”
பொதுக் காலத்தின் இருபத்து ஒன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I 2 தெசலோனிக்கர் 2: 1-3a, 14-17
II மத்தேயு 23: 23-26
“நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவாராக!”
தலையில் ஏன் தண்ணீர் ஊற்றுகின்றார்கள்?
தன் தம்பிக்குக் கோயிலில் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுமி ஜெசி, திருமுழுக்கு வழிபாடு முடிந்ததும், தன் தாயிடம், “அம்மா! எதற்காகத் தம்பியின் தலையில் அருள்பணியாளர் தண்ணீர் ஊற்றினார்?” என்றாள். அப்போது ஜெசியின் தாயால் அவளுக்குப் பதிலளிக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்த பின்னரே அவர் அவளுக்குப் பொறுமையாக இப்படி விளக்கம் தந்தார்:
“இதோ பார் ஜெசி! முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்தோடுதான் ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணுலகில் பிறக்கின்றது. இதற்குப் பெயர் பிறப்பு நிலைப் பாவம் (ஜென்மப் பாவம்). இவ்வாறு பாவத்தோடு பிறந்த உன் தம்பியை ஆண்டவர் இயேசு கழுவி, நல்லது செய்ய அழைக்கின்றார் என்பதன் அடையாளமாகத்தான் அவனுடைய தலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது.”
தன்னுடைய தாய் கொடுத்த இந்த விளக்கத்தைக் கேட்டு சிறுமி ஜெசி மிகவும் உற்சாகமடைந்தாள்.
ஆம், திருமுழுக்குப் பெற்ற அனைவரும் நல்லது செய்ய அழைக்கப்படுகின்றனர். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் நல்லதைச் சொல்லவும் செய்யவும் அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தெசலோனிக்கர் நடுவில் பவுல் கடவுளின் வார்த்தையை அறிவித்து விட்டுத் திரும்பிய பின், அவர்கள் நடுவில் புகுந்த ஒருசில போலி இறைவாக்கினர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக, ஆண்டவரின் நாளைப் பற்றிப் போலி இறைவாக்கினர்கள் கொடுத்த விளக்கத்தைக் கேட்ட தெசலோனிக்க மக்கள் நிலைகுலையவும் திகிலுறவும் செய்தார்கள். இந்நிலையில் பவுல் அவர்களிடம், “எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு, அவற்றில் நிலையாயிருங்கள்” என்கிறார். தொடர்ந்து, அவர் அவர்களிடம், “இயேசு கிறிஸ்துவும் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக” என்கிறார்.
நாம் ஒவ்வொருவரும் நல்லதையே சொல்லவும் செய்யவும் அழைக்கப்படுகின்றோம். ஏனெனில், ஆண்டவர் தான் சென்ற இடங்களில் எல்லாம் நல்லதையே சொன்னார், நல்லதையே செய்தார் (திப 10:38). ஆனால், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயரும் மறைநூல் அறிஞர்கள் மக்கள் பார்க்கவேண்டும் என்று புதினா, சோம்பு, சீராகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைத்துவிட்டு, திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டார்கள். சிறியவற்றை மிக நுணுக்கமாகக் கடைப்பிடித்த அவர்கள் முக்கியமானவற்றை கடைப்பிடியாமல், அல்லது நல்லது செய்யாமல் இருந்தது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.
உள்ளத்தில் நல்லதை என்னவேண்டும், அப்போதுதான் நாம் நல்லவற்றைச் சொல்லவும் செய்யவும் முடியும். இதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர் நல்லதை மட்டுமே சொல்வார், நல்லதை மட்டுமே செய்வார்.
நல்லது எனத் தெரிந்தும் அதைச் செய்யாமல் இருப்பது குற்றம்.
உள்ளத்தினை நிறைவையே வாய் பேசும்.
இறைவாக்கு:
‘ஆண்டவரைப் பின்தொடர்வது நல்லது என்பதை இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் இதனால் அறிவர்’ (சீஞா 46: 10) என்கிறது சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவரைப் பின்தொடர்ந்து நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.