ஜூலை 28 : நற்செய்தி வாசகம்

நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53
அக்காலத்தில்
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”
“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“குயவன் கையில் களிமண்”
பொதுக் காலத்தின் பதினேழாம் வாரம் வியாழக்கிழமை
I எரேமியா 18: 1-6
II மத்தேயு 13: 47-53
“குயவன் கையில் களிமண்”
உங்களால் எப்படி விண்ணகத்திற்கு வழிசொல்ல முடியும்?
பேராயர் புல்டன் ஷீன், தான் எழுதிய, ‘Treasure in Clay’ என்ற தன்வரலாற்று நூலில் பகர்ந்து கொள்ளும் அனுபவம் இது .
ஒருமுறை அவர் நகரில் இருந்த ஒரு பெரிய அரங்கினில் போதிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அவரும் அங்கே போதிப்பதற்காகக் கிளம்பிச் சென்றார். நடுவில், அவருக்கு அரங்கிற்குச் செல்வதற்கான வழி தெரியவில்லை. அவர் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக ஒருசில சிறுவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் அவர், அரங்கின் பெயரைச் சொல்லி, “அரங்கத்திற்கு எப்படிப் போவது?” என்று கேட்டார். உடனே ஒரு சிறுவன், “அந்த அரங்கிற்கு எதற்காகப் போகிறீர்கள்?’ என்று பதில் கேள்வியைக் கேட்டான். “விண்ணகத்திற்கு எப்படிச் செல்வது என்பதைப் பற்றிப் போதிக்கப் போகிறேன்” என்று புல்டன் ஷீன் சொல்லி முடித்ததும், சிறுவன் அவரிடம், “உங்களுக்கு அரங்கத்திற்குச் செல்வதற்கே வழி தெரியவில்லை. அப்படியிருக்கையில் நீங்கள் எப்படி விண்ணகம் செல்வதற்கான வழியை மக்களுக்குச் சொல்லித் தரப் போகிறீர்கள்?” என்றான். இதற்குப் புல்டன் ஷீனால் எதுவும் பேச முடியவில்லை.
பேராயர் புல்டன் ஷீனுக்கு வேண்டுமானால் குறிப்பிட்ட அரங்கத்திற்குச் செல்வதற்கான வழியோ, அல்லது விண்ணகம் செல்வதற்கான வழியோ தெரியாமல் இருக்கலாம்; ஆனால், இன்றைய இறைவார்த்தை நாம் விண்ணகம் செல்வதற்கான வழியைத் தெளிவாகச் சொல்லித் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைவாக்கினர் எரேமியா நூலில் இடம்பெறும் பல நிகழ்வுகள் உருவகம் வாயிலாகவே ஓர் உண்மையை வெளிப்படுத்தும். அந்த வரிசையில் இடம்பெறும் ஓர் உருவகம்தான் குயவன், களிமண் உருவகமாகும்.
ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியாவிடம் குயவனின் வீட்டிற்குப் போகச் சொல்கின்றார். அவரும் அங்கே போகின்றபோது, குயவன் தன் கையில் களிமண்ணை எடுத்துத், தன் விருப்பம் போல மண் கலம் செய்கின்றார். இக்காட்சியை எரேமியாவிடம் சுட்டிக்காட்டும் ஆண்டவர், “இந்தக் குயவன் செய்வது போல நானும் உனக்குச் செய்ய முடியாதா?” என்கிறார்.
குயவன் கையில் உள்ள களிமண் அவரது விருப்பம் போல வளைந்து கொடுக்கும். கடவுளுடைய கையில் களிமண்ணாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரது விருப்பத்தின் படி நடக்க வேண்டும். அப்படி நடந்தால், நாம் விண்ணகத்தை அடையலாம்.
நற்செய்தியில் இயேசு, இறுதித் தீர்ப்பில் என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் கடலில் வீசப்பட்ட வலை உவமையைப் பற்றி பேசுகின்றார். வலையானது எல்லா வகையான மீன்களையும் இழுத்துக்கொண்டு வரும். கரைக்கு வந்த பின்னர் மீனவர் வலையிலிருந்து நல்லவற்றைக் கூடையில் சேர்த்து வைத்து, கெட்டவற்றை வெளியேயும் எறிவார். உலக முடிவின்போது, கடவுளின் திருவுளத்தின்படி நடந்தவர் விண்ணகத்தையும், அவ்வாறு நடவாதவர் பாதாளத்தையும் அடைவர்.
எனவே, நாம் கடவுளின் கையில் களிமண் என்பதை உணர்ந்தவர்களாய், அவரது விருப்பத்தின்படி நடப்போம்.
இறைவாக்கு:
 கடவுளின் கையில் கருவிகளாய் இருக்கும் நாம் அவரது விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற வேண்டும்.
 கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு தருவார்.
 ஆண்டவருக்கு ஊழியம் புரிபவர் அதற்குரிய வெகுமதியைப் பெறுவார்.
இறைவாக்கு:
‘என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்’ (திபா 40: 😎 என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Comments are closed.