வாசக மறையுரை (ஜூன் 04)

பாஸ்கா காலத்தின் ஏழாம் வாரம்
சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 28: 16-20, 30-31
II யோவான் 21: 20-25
“இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றுங்கள்”
இப்படியும் ஒரு நற்செய்திப் பணியாளர்!:
கிறிஸ்டியனா சாய் (Chiristina Tsai) என்றொரு பெண்மணி இருந்தார். இவர் தான் வசித்து வந்த பகுதியில், மாலை வேளையில் நற்செய்தி அறிவித்து வந்தார். மக்களும் அவரது போதனையைக் கேட்டு ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டார்கள்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடுகையில் அவர் திடீரெனப் பார்வை இழந்தார். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு அறிமுகமான எல்லாரும், ‘இனிமேல் கிறிஸ்டியனா சாயால் நற்செய்தி அறிவிக்க முடியாது’ என்று நினைத்தார்கள். ஆனால், அவர் கடவுள் தனக்குக் கொடுத்த எழுத்தாற்றலைக் கொண்டு நற்செய்தி அறிவித்தார். இதன்மூலம் அவர் முன்பைவிடவும் பல மக்களையும் சென்றடைந்தார்.
ஆம், கடவுளின் வார்த்தையை அறிவித்து வந்த கிறிஸ்டியனா சாய் பார்வையை இழந்தபோதும், கடவுள் தனக்குக் கொடுத்த எழுத்தாற்றலைக் கொண்டு கடவுளின் வார்த்தையை அறிவித்து வந்தார். இன்றைய இறைவார்த்தை நாம் எந்த நிலையில் இருந்தாலும் கடவுளின் வார்த்தையை அறிவிக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
உரோமையில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பவுல், யூதர்களின் முதன்மைக் குடிமக்களை அழைத்து, அவர்களிடம் தான் மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ செயல்படவில்லை என்கிறார். பின்னர் அவர் தன்னிடம் வந்தவர்களையெல்லாம் வரவேற்று, அவர்களிடம் இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.
ஒரு காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்த பவுல், தமஸ்கு நகர் நோக்கிய பயணத்தில் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். அதன்பிறகு அவர் பிறவினத்தாருக்கு ஒளியாய் இருந்து, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்.
நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம் யோவானுக்கு என்ன ஆகும் என்று கேட்கின்றபோது, இயேசு அவரிடம், “…..நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்கிறார். இதன்மூலம் இயேசு பேதுருவுக்கும், இன்றும் நமக்கும் சொல்லும் செய்தி, மற்றவருக்கு என்ன ஆகும் என்று கவலைப்படத் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியது, இயேசுவை பின்தொடர்வதுதான்.
எனவே, நாம் பேதுருவைப் போன்று, பவுலைப் போன்று, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்ந்வோம்.
சிந்தனைக்கு:
இயேசுவைப் பின்தொடர்வதை விடவும் மேலான செயல் வேறு எதுவும் இல்லை.
இயேசுவைப் பின்தொடர்வதால் என்ன கைம்மாறு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர் அவரது உண்மையான சீடராய் இருக்க முடியாது.
இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்போம், அவருக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம்.
இறைவாக்கு:
‘என்னைப் பின்தொடர்ந்து வா’ (யோவா 1: 43) என்று இயேசு பிலிப்பைப் பார்த்துக் கூறுவார். இயேசுவின் இந்தக் கட்டளையை அவர் நமக்கும் தருகின்றார் என்ற உணர்வோடு அவரைப் பின்தொடர்ந்து நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.