மே 26 : நற்செய்தி வாசகம்

நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20
அக்காலத்தில்
இயேசு தம் சீடரிடம்: “இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்றார். அப்போது அவருடைய சீடருள் சிலர், “ ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்றும் ‘நான் தந்தையிடம் செல்கிறேன்’ என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். “இந்தச் ‘சிறிது காலம்’ என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே” என்றும் பேசிக்கொண்டனர்.
அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: “ ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————–
“உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் வியாழக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 18: 1-8
II யோவான் 16: 16-20
“உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”
உண்மையான மகிழ்ச்சி:
ஒருநாள் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ் தன்னுடைய சகோதரர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம், “எது உண்மையான மகிழ்ச்சி?” என்றார். அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அப்போது பிரான்சிஸ் அவரிடம், “இறந்த ஒருவரை உயிர்த்தெழச் செய்வதா? இறைவாக்கை வல்லமையோடு அறிவிப்பதா? அல்லது கிறிஸ்துவின் மீது நம்பிக்கையில்லாத ஒருவர் அவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வதா? அதுவல்ல உண்மையான மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார். “கடவுளுடைய வார்த்தையை மக்களிடம் அறிவிக்கையில், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் போகும்போது, அதனால் ஏற்படும் வலியையும் வேதனையையும் அவமானத்தையும் கிறிஸ்துவின் பொருட்டுப் பொறுமையாக ஏற்றுக்கொண்டால், அதுதான் உண்மையான மகிழ்ச்சி.”
ஆம், கிறிஸ்துவின் பொருட்டு நாம் படும் துன்பங்களையும் அவமானங்களையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டால் அதுவே உண்மையான மகிழ்ச்சி என்று அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ் சொல்லும் செய்தி மிகவும் கவனத்திற்குரியது. இன்றைய முதல் வாசகத்தில் பவுல் யூதர்களிடமிருந்து புறக்கணிப்பைச் சந்தித்தாலும், அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கொரிந்து நகருக்குச் செல்லும் பவுல், அங்கு யாருக்கும் சுமையாய் இராமல், தனது பிழைப்பிற்காகக் கூடாரத் தொழிலைச் செய்துகொண்டே, யூதர்களின் தொழுகைக்கூடங்களில், “இயேசுவே மெசியா” என்று அறிவித்தார். அவர்களோ அவர் அறிவித்த நற்செய்தியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதற்காகப் பவுல் வருந்தவில்லை. மாறாக, அவர் மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்கின்றார்.
பணிவாழ்வில் பவுல் கிறிஸ்துவின் பொருட்டு அடைந்த துன்பங்களும் வேதனைகளும் அவமானங்களும் பல. ஆனாலும் அவர் அவற்றைக் கிறிஸ்துவுக்காகப் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பணிசெய்து வந்தார். “துன்பங்களைத் தாங்கிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்” (உரோ 15:1) என்ற பவுலின் வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.
நற்செய்தியில் இயேசு, “உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்கிறார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளை இரண்டு விதங்களில் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, இயேசு இவ்வுலகைவிட்டுச் சென்று தூய ஆவியார் வரும்வரை, அவரது சீடர்கள் துயரலாம். தூய ஆவியார் வந்தபிறகு சீடர்களின் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்று புரிந்துகொள்ளலாம். இரண்டாவதாக, இயேசுவுக்காக நாம் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தால், கடவுள் அந்தத் துன்ப துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
எனவே, நாம் புனித பவுலைப் போன்று கிறிஸ்துவுக்காகத் துன்ப துயரங்களைத் தாங்கிக் கொள்ள முன்வருவோம்.
சிந்தனைக்கு:
 துன்பங்கள் இன்பமான வாழ்விற்கான நுழைவாயில்
 நற்செய்திப் பணிகள் எதிர்ப்புகள் வந்தாலும், இயேசு நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை.
 ஆண்டவரின் அடியாருக்கு ஆயிரம் துன்பங்கள் வரலாம். ஆண்டவரோ அவற்றை ஒன்றுமில்லை செய்துவிடுவார்.
இறைவாக்கு:
‘இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியவற்றை என நான் எண்ணுகிறேன்’ (உரோ 8:18) என்பார் புனித பவுல். எனவே, நாம் கிறிஸ்துவுக்காகத் துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.