வாசக மறையுரை (மே 23)
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் திங்கட்கிழமை
I திருத்தூதர் பணிகள் 16: 11-15
II யோவான் 15: 26- 16: 4
“நீங்களும் சான்று பகர்வீர்கள்”
அமெரிக்கா செய்த மிகப்பெரிய உதவி!
லெபனான் நாட்டின் அமெரிக்கத் தூதராக இருந்தவர் சார்லஸ் மாலிக். இவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மக்களிடம், “அமெரிக்கா ஐக்கிய நாடுகள் இந்த உலகிற்குச் செய்த மிகப்பெரிய உதவி பண உதவியோ, மருத்துவ உதவியோ அல்ல; மாறாக, தன் நாட்டு மக்களை உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கச் செய்ததுதான். அதுதான் அந்த நாடு இந்த உலகிற்கு செய்த மிகப்பெரிய உதவி” என்றார்.
நன்றாக யோசித்துப் பார்த்துப் சார்லஸ் மாலிக்கின் கூற்று உண்மையென நமக்குப் புரியும். நற்செய்தியில் இயேசு, “தூய ஆவியார் வரும்போது, அவர் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு தனது இறுதி இராவுணவில், துணையாளாராம் தூய ஆவியாரைப் பற்றிப் பேசுகின்றார். அப்படி அவர் பேசும்போது, தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துபவராகவும், சான்று பகர்கிறவராகவும், சீடர்கள் சான்று பகர்வதற்கான ஆற்றலைத் தருபவராகவும் இருப்பார் என்று கூறுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளை இன்றைய முதல் வாசகத்தோடு பொருத்திப் பார்த்தால் அவை எவ்வளவு உண்மை என நமக்குப் புரியும்.
ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதன்மூலம் கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர் பவுல். அப்படிப்பட்டவர் தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். மட்டுமல்லாமல், தூய ஆவியால் நிரப்பப்படுகின்றார். அதன்பிறகு அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியது தவறு என்பதை உணர்ந்தவராய், கிறிஸ்துவுக்காகத் தம் உயிரையும் இழக்கத் துணிகின்றார். இது உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரால்தான் சாத்தியமானது.
இன்றைய முதல் வாகத்தில் பவுல், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதைக் கேட்டு, தியத்திரா நகரைச் சேர்ந்த லீதியா என்ற கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்கின்றார். இது நற்செய்தியில் இயேசு சொல்லும், “நீங்களும் சான்று பக்ரவீர்கள்” என்ற வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன. திருமுழுக்கின் வழியாக நாம் தூய ஆவியாரைப் பெற்றிருக்கின்றோம். அவர் நாம் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆற்றலைத் தந்திருக்கின்றார். அந்த ஆற்றலைக் கொண்டு நாம் இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதே நமது தலையாய கடமை.
தூய ஆவியார் நமக்கு உண்மையை வெளிப்படுத்தும்போது, பொய்மையில் நாம் சிக்கித் தவிப்பதை என்னவென்று சொல்வது?
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாம் கிறிஸ்துவைப் பற்றி மக்களுக்கு அறிவிப்போம்.
இறைவாக்கு:
‘நாம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத் தேவை இல்லை” (2திமொ 1:8) என்பார் புனித பவுல். எனவே, நாம் துணிவோடு இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.