வாசக மறையுரை (ஏப்ரல் 08)

தவக் காலத்தின் ஐந்தாம் வாரம்
வெள்ளிக்கிழமை
I எரேமியா 20: 10-13
II யோவான் 10: 31-42
“ஆண்டவர் என்னோடு இருக்கிறார்”
ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அதிகாரி:
அந்த நகரில் இரவுடிகளின் அட்டகாசம் எல்லை மீறிப்போனதால், அவர்களின் கொட்டத்தை அடக்க, காவல்துறை அதிகாரி ஒருவர் இதற்காகவே நியமிக்கப்பட்டார். அவர் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு கிறிஸ்தவர்.
தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினைச் சிறப்பாகச் செய்துகொண்டிருந்த அந்தக் காவல்துறை அதிகாரிக்கு இரவுடிகளிடமிருந்து எதிர்த் தாக்குதல் வராமல் இல்லை. ஒருநாள் இரவு வேளையில் அவர் இரவுடிகளைப் பிடிக்கும் பணியில் இருந்தபோது, இரவுடி ஒருவன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அவரது மார்பை நோக்கிச் சுட்டான்.
இதைச் சற்று எதிர்பார்த்திராத காவல்துறை அதிகாரி, குண்டு தன்னுடைய மார்பைத் துளைத்து, எப்படியும் தான் சாகப்போகிறோம் என்றுதான் நினைத்தார். ஆனால், குண்டு, அவரது மார்பில் இருந்த ‘காவல்துறை அதிகாரிகள் அணியும் முத்திரையில் (Badge) பட்டதால், அவருக்கு எதுவுமே ஆகவில்லை. அப்போது அவர், ‘எதிரியிடமிருந்து பாய்ந்து வந்த குண்டு கொஞ்சம் மேலேயோ அல்லது கொஞ்சம் கீழேயோ பட்டிருந்தாலும் உயிருக்கு ஆபத்துதான். நல்லவேளை குண்டு முத்திரையில் பட்டதால், உயிருக்கு எந்தவோர் ஆபத்தும் இல்லை; கடவுள்தான் என்னைக் காப்பாற்றியிருக்கின்றார்’ என்று கடவுளுக்கு நன்றி சொன்னார்.
ஆம், கடவுள்மீது மிகுந்த நம்பிக்கையோடு இருந்த அந்தக் காவல்துறை அதிகாரியைக் கடவுள் அவரோடு இருந்து, ஆபத்திலிருந்து காப்பாற்றினார். இன்றைய இறைவார்த்தை கடவுள் தன் அடியார்களோடு இருந்து, அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றார் என்ற செய்தியை உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடவுளின் வார்த்தையைத் தன் சொந்த மக்களிடம் அறிவித்தவர் இறைவாக்கினர் எரேமியா. ஆனாலும் அவர்கள் அவர் அறிவித்த செய்தியைக் கேளாமல், அவரை வீழ்த்த அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அப்போதுதான் இறைவாக்கினர் எரேமியா, “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கடவுள் தன்னோடு இருப்பதை நன்கு உணர்ந்தார்.
நற்செய்தியில், இயேசு தன்னை இறைமகன் ஆக்கிக் கொண்டார் என்பதற்காக யூதர்கள் அவர்மீது கல்லெறியப் பார்க்கின்றார்கள். முன்னதாக அவர்கள் இயேசுவின்மீது இரண்டு முறை கல்லெறியப் பார்த்தார்கள் (யோவா 5:18; 8:59). இது மூன்றாவது முறை. யூதர்கள் இயேசுவின் மீது கல்லெறிய முடியவில்லை. ஏனெனில், அவரது நேரம் இன்னும் வரவில்லை. அதைவிடவும் கடவுள் அவரோடு உடனிருந்தார்.
கடவுளுடைய வழியில் நடக்கும்போது இறைவாக்கினர் எரேமியாவிற்கும் இயேசுவுக்கும் வந்த ஆபத்துகள் போன்று நமக்கும் வரலாம். அத்தகைய வேளையில், நாம் கலங்கிடாமல், கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு அவரது பணியைச் செய்வோம்.
சிந்தனைக்கு:
 இறைப்பணிக்கு என்று வந்து விட்டால், எதிர்ப்புகளைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
 கடவுளின் அடியார்களுக்கு மலைபோல் துன்பம் வந்தாலும் கடவுள் அவற்றைப் பனிபோல் மாற்றிடுவார்.
 ஆண்டவரைப் பற்றிக் கொண்டு வாழ்வோரை ஆண்டவர் காத்திடுவார்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையின்றும் பாதுகாப்பார்; அவர் தம் உயிரைக் காத்திடுவார்’ (திபா 121:7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, ஆண்டவரின் பாதுகாப்பை உணர்ந்தவர்களாய் அவரது பணியைத் திறம்படச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.