நலவாழ்வுப் பணியாளர்களுக்கு ஆதரவளியுங்கள்
நோயாளிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோருக்கு, குறிப்பாக, மிக ஏழை நாடுகளில் அவர்களுக்குத் தொண்டாற்றும் நலவாழ்வுப் பணியாளர்கள், அரசுகள் மற்றும், உள்ளூர் சமுதாயங்களின் ஆதரவை, போதுமானஅளவு பெறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 05, இச்செவ்வாயன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் மாத செபக் கருத்தை நலவாழ்வுப் பணியாளர்களுக்காக அர்ப்பணித்து, அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, அக்கருத்தை மையப்படுத்தி வெளியிட்டுள்ள காணொளியில், கோவிட்-19 பெருந்தொற்றுச்சூழல், நலவாழ்வு அமைப்புகளைப் பலவீனப்படுத்தியுள்ளது மற்றும், தரமான சிகிச்சைகள் பெறுவதிலும் சமத்துவமற்ற நிலையை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
அரசுகளுக்கு அழைப்பு
இந்நிலையில், இவ்வுலகில் அனைவரும் போதுமான மருத்துவப் பராமரிப்புகளைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் சிறப்பான முயற்சிகள், இதற்குத் தீர்வாக அமைய முடியாது, ஆனால், தரமான மருத்துவப் பராமரிப்பு, அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்பதை, அரசுகள் மறக்கக் கூடாது என்று கூற விரும்புகிறேன் என, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இதுவரை இடம்பெறவில்லையென்றால், அதற்கு, பலநேரங்களில், வளங்கள் மோசமாக மேலாண்மை செய்யப்படுவதும், அரசியல் தளத்தில் உண்மையான அர்ப்பணம் இல்லாதிருப்பதுமே காரணம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
உலகெங்கும் கடும் முயற்சி
ஏப்ரல் மாதச் செபக் கருத்தை மையப்படுத்தி திருத்தந்தை வெளியிட்டுள்ள காணொளியில், தரமான மருத்துவப் பராமரிப்பு, அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்வதற்கு, முயற்சிகளை மேற்கொள்ளும் பல்வேறு நாடுகளின் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
“நமக்கு ஒரு தடுப்பூசி”, “அன்னையர் மற்றும், சிறார் முதலில்” என்ற தலைப்பில் ஆப்ரிக்க மருத்துவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், மோட்டார் வாகனத்தில் கர்ப்பிணிப் பெண்களை அழைத்துவரும் உகாண்டா நாட்டு AVSI திட்டம், பல்வேறு நாடுகளில் புனித இறையோவான் மருத்துவ சபையின் பணி, தாய்லாந்து மற்றும், பிரேசிலில் புனித கமில் சபையினர் நோயாளிகளுக்கு ஆற்றிவரும் பணிகள், COE அமைப்பு பங்களாதேஷ் மற்றும், பெரு நாடுகளில் ஆற்றிவரும் நலப்பணிகள் போன்றவை, இக்காணொளியில் இடம்பெற்றுள்ளன.
நோயுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், சிறப்பாக ஏழை நாடுகளில் அவர்களுக்குத் தொண்டுபுரியும் நலவாழ்வுப் பணியாளர்கள், போதிய அளவில், அரசுகள் மற்றும், உள்ளூர் சமுதாயங்களால் ஆதரிக்கப்பட நாம் மன்றாடுவோம் என்பது, திருத்தந்தையின் ஏப்ரல் மாத செபக் கருத்தாகும்.
Comments are closed.