Ta’ Pinu அன்னை மரியா தேசிய திருத்தலத்தில் திருத்தந்தை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, மால்ட்டா நாட்டில், ஏப்ரல் 02, 03, அதாவது இச்சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மேற்கொண்டார். மத்தியதரைக் கடலின் மத்தியில், ஐந்து தீவுகளைக் கொண்டுள்ள மால்ட்டா குடியரசில், மால்ட்டா, கோசோ, கொமினோ ஆகிய மூன்று தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். ஏப்ரல் 02, இச்சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில், தலைநகர் வலேட்டாவின் பெரிய துறைமுகத்திலிருந்து, அந்நாட்டின் இரண்டாவது பெரிய தீவாகிய கோசோவுக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மால்ட்டா குடியரசில் பெரிய தீவாக அமைந்துள்ள மால்ட்டாவின் சகோதரித் தீவு எனப்படும், கோசோவில், கி.மு. ஐந்தாயிரமாம் ஆண்டிலிருந்து மக்கள் வாழத்தொடங்கியுள்ளனர். நாட்டுப்புறப் பண்பைக் கொண்டுள்ள கோசோ தீவிற்கு, ஒருகாலத்தில், இத்தாலியின் சிசிலித் தீவிலிருந்து விவசாயிகள் சென்று, பயிர்த்தொழில் செய்துள்ளனர். கோசோ தீவு, மால்ட்டா தீவு போன்று, அவ்வளவாக வளர்ச்சியடையவில்லை என்று கூறப்பட்டாலும், அத்தீவில் Ta’ Pinu அன்னை மரியா தேசிய திருத்தலம் உட்பட, உலகின் மிகப் பழமையான கோவில்கள் அமைந்துள்ளன.
இச்சனிக்கிழமை மாலையில் இவ்வன்னை மரியா திருத்தலத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மால்ட்டா தீவிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கோசோ தீவிற்கு, கட்டுமரத்தில், ஒரு மணி பத்து நிமிடங்கள் பயணம் மேற்கொண்டு, அத்தீவின் Mgarr துறைமுகத்தை அடைந்த திருத்தந்தை, அங்கிருந்து, பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Ta’ Pinu அன்னை மரியா தேசியத் திருத்தலத்திற்கு முதலில் காரிலும், பின்னர் குண்டுதுளைக்காத திறந்த காரிலும் சென்றார். சாலையெங்கும் காத்திருந்த ஏராளமான மக்களை ஆசிர்வதித்துக்கொண்டே சென்ற திருத்தந்தை, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரெக், மால்ட்டா பேராயர், கோசோ ஆயர் போன்றேருடன் இணைந்து, இத்திருத்தலத்திற்குச் சென்று, அன்னை மரியாவிடம் செபித்து, அவ்வன்னையின் பொற்பாதங்களில், தங்க மலர்க்கொத்து ஒன்றை அர்ப்பணித்தார். அதற்குப் பின்னர், அத்திருத்தலத்தில் அமர்ந்திருந்த நோயாளிகளை ஆசிர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருத்தல வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு, திருவழிபாடு ஒன்றையும் தலைமையேற்று நிறைவேற்றினார். இத்திருவழிபாட்டில் நான்கு பேர் கூறிய சாட்சியங்களுக்குச் செவிமடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறையுரையும் ஆற்றினார்.
அன்பு ஆட்சிசெய்யும் இடத்தில் கடவுள் பிரசன்னமாய் இருக்கிறார், கடவுளன்பு நம் மகிழ்ச்சியை இயக்குகிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியதரைக் கடலின் மத்தியில் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் மால்ட்டா நாடு, திருஅவையின் கருவூலம் என்று, அத்தலத்திருஅவையைப் பாராட்டினார். இத்திருவழிபாட்டை நிறைவுசெய்து, கோசோ தீவிலிருந்து மீண்டும் கட்டுமரத்தில் மால்ட்டா தீவு வந்து, வலேட்டா திருப்பீடத் தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுற்றன
Comments are closed.