நோயாளிக் குழந்தைகளின் குடும்பங்களுக்கு புதிய இல்லிடம்
இத்தாலியின் மிலான் மாநகரின் மருத்துவமனைகளில் தங்களின் நோயாளிக் குழந்தைகளின் சிகிச்சைக்காக வருகின்ற ஏழைக் குடும்பங்களுக்கு, கட்டணம் ஏதுமின்றி தங்கும் வசதிகளை அமைத்துக்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திட்டத்திற்கு தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நோயாளிக் குழந்தைகளின் பெற்றோர் இலவசமாகத் தங்குவதற்கென்று, மிலான் நகரின் வடக்கே புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு, மார்ச் 29, இச்செவ்வாயன்று அடிக்கல் நாட்டப்பட்டதையொட்டி, இத்தாலிய தேசிய UNITALSI அமைப்பின் லொம்பார்தியா கிளையின் தலைவர் வித்தோரே தெ கார்லி அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் தான் ஆசிர்வதித்த அடிக்கல் ஒன்றுடன், தன் நல்வாழ்த்து மடலை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதிய கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரோடும் தன் உடனிருப்பையும், ஆசிரையும் தெரிவித்துள்ளார்.
இந்த அடிக்கல் குறித்து தன் மடலில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் தான் அறிவித்த கருத்துக்களை எடுத்துரைத்து, எல்லாச் சூழல்களிலும் இயேசு இரக்கமுள்ளவராய் இருந்தார் என்றும், உண்மையிலேயே தேவையில் இருப்போருக்கு உதவிசெய்வதற்குத் தாமதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
Fabrizio Frizzi புதிய கட்டடம்
இத்தாலியில் புகழ்பெற்ற நிகழ்ச்சித்தொகுப்பாளர், ஊடகவியலாளர், நடிகர், மற்றும், Unitalsi அமைப்பின் மிகப்பெரும் நண்பருமாகிய Fabrizio Frizzi அவர்கள், 2018ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார். அவரது பெயரால் இப்புதிய கட்டடம் அமைக்கப்படுகின்றது.
இப்புதிய கட்டடத்திற்கு அடிக்கல் பதித்த நிகழ்வில், மிலான் பேராயர் Mario Delpini அவர்களும், அந்நகர மேயர் Giuseppe Sala அவர்களும் கலந்துகொண்டனர். இத்தாலிய தேசிய UNITALSI அமைப்பு, பிரான்சின் லூர்து அன்னை திருத்தலம் மற்றும், உலகளாவியத் திருத்தலங்களுக்கு, நோயாளிகளை அழைத்துச் செல்கின்றது. இதன் லொம்பார்தியா கிளை அமைப்பு, நோயாளிக் குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர் தங்குவதற்கு இப்புதிய கட்டடத்தை அமைக்கின்றது.
இம்மாதம் 17ம் தேதி புதன் பொது மறைக்கல்வியுரையின்போது லொம்பார்தியாவின் Unitalsi அமைப்பின் பிரிதிநிதிகள் குழு, இப்புதிய கட்டடத்தின் வரைபடத்தை திருத்தந்தையிடம் சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.