ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு (மார்ச் 25)
வரலாற்றில் இயேசுவின் பிறப்பு மட்டுமே
முன்னறிவிக்கப்பட்டது:
இன்று அன்னையாம் திருஅவை ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் அறிவிப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது.
இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி இருக்கிறார்கள்; எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள்; ஆனால், அவர்களின் பிறப்பு முன்னறிவிக்கப்படவில்லை; அவர்களின் பிறப்பைக் குறித்து யாருக்கும் முன்னதாகச் சொல்லப்படவில்லை. இயேசுவின் பிறப்புதான் முன்னறிவிக்கப்பட்டது; அவரது பிறப்பைக் குறித்துத்தான் இறைவாக்காகச் சொல்லப்பட்டது.
அப்படிப் பார்க்கும்போது இயேசு எந்தளவுக்கு மற்ற எல்லாரையும்விட பெரியவர்; உயர்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசுவின் பிறப்பைப் குறித்து பல இடங்களில் இறைவாக்கின் வாயிலாக முன்னறிவிக்கப்பட்டாலும், அதில் ஒருசில இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. எனவே நாம் அவற்றைக் குறித்துச் சிறிது ஆழமாகச் சிந்தித்துப் பார்த்து, இன்றைய இறைவார்த்தை நமக்குக் கூறும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் பிறப்பைக் குறித்துத் தொடக்க நூலில்:
இயேசுவின் பிறப்பைப் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, தொடக்க நூல் 3:15. இப்பகுதியில் கடவுள், தன்னுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்காமல், விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ட முதல் பெற்றோரான ஆதாமையும் ஏவாளையும், அதற்குக் காரணமாக இருந்த பாம்பையும் தண்டிக்கிறார். அப்படித் தண்டிக்கும்போது, அவர் வாயிலிந்து வரக்கூடிய ஓர் இறைவாக்குதான், “உனக்கும் பெண்ணுக்கும், உன்வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன், அவள் வித்து உன் தலையை காயப்படுத்தும், நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்பதாகும்.
இப்பகுதி இயேசுவின் பிறப்பைப் பற்றி நேரடியாகச் சொல்லாவிட்டாலும், இயேசுவின் பிறப்பால் தீமைகள், பாவங்கள் வேரோடு அழிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது.
இயேசுவின் பிறப்பைக் குறித்து இறைவாக்கினர் எசாயா:
இயேசுவின் பிறப்பைப் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதியில் இரண்டாவது முக்கியமான பகுதி, எசாயா புத்தகம் 7:14 (இன்றைய முதல் வாசகம்). இப்பகுதியில் எசாயா இறைவாக்கினர் ஆகாசு மன்னனிடம், கடவுளைப் பார்த்து அடையாளம் ஒன்றைக் கேள் என்று கேட்கச் சொல்கிறார். அதற்கு அவன் அடையாளம் கேட்பது கடவுளைச் சோதிப்பதற்குச் சமம் என்று நினைத்து, கேட்க மறுத்துவிடுகிறான். இறுதியில் கடவுளே அவனுக்கு ஓர் அடையாளத்தைத் தருகிறார். அதுதான், “கருவுற்றிருக்கும் இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவர்” என்பதாகும். இங்கே இயேசு யாரிடம் பிறப்பார் என்பது பற்றிச் சொல்லப்படுகிறது.
இயேசுவின் பிறப்பைக் குறித்து மீக்கா இறைவாக்கினர்:
இயேசுவின் பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது பகுதி, மீக்கா புத்தகம் 5:2. அதில் “நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே, யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய், ஆயினும் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்” என்று சொல்லப்படுகிறது. இதில், இயேசு எந்த இடத்தில் பிறப்பால் என்று சொல்லப்படுகின்றது. ஆகையால், மேலே சொல்லப்பட்ட இந்த மூன்று இறைவாக்குப் பகுதிகளும் இயேசு என்பவர் யார்? அவர் எங்கே? யாரிடம் பிறப்பார்? என்ன செய்யப்போகிறார்? என்பன முதற்கொண்டு எல்லாவற்றையும் மிகத் தெளிவாகச் சொல்கின்றன.
Comments are closed.