உக்ரைன் தலைவர் மற்றும் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இத்தாலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மார்ச் 22, இச்செவ்வாய்கிழமை காலை இத்தாலிய நாடாளுமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றிய உக்ரைன் நாட்டு அரசுத் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தான் நடத்திய தொலைபேசி உரையாடலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 20 ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைனில் நடைபெற்றுவரும் போரை ‘மனிதாபிமானமற்றது’ மற்றும் ‘தெய்வகுற்றமானச் செயல்’ என வரையறுத்த நிலையில் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
இத்தாலிய நாடாளுமன்றத்துடன் காணொளித் தொடர்பில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, தனது நாடு இரஷ்யாவுடனான போரில் தப்பிப்பிழைக்கும் விளிம்பில் இருப்பதாகவும், மேலும் கிரெம்ளின்மீது அதிகமான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
தன்னைப் பொறுத்தவரை, தீமையைக் கண்டு அதனை எதிர்க்கும் நோக்கில் உக்ரேனிய மக்கள் ஒரு இராணுவமாகவே மாறிவிட்டனர் எனவும், உக்ரைனில் நிலவிவரும் தற்போதையச் சூழல் பற்றியும், இரஷ்யாவின் தாக்குதல்களிலிருந்து தங்களை எப்படித் தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் திருத்தந்தையிடம் தொலைப்பேசியில் உரையாடியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
மனிதத் துயரங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் திருத்தந்தையின் இடைநிலையாளர் பங்கு மிகவும் பாராட்டத்தக்கதாய் உள்ளதாகவும், உக்ரைனின் அமைதிக்காக அவர் எழுப்பிவரும் இறைவேண்டல்களுக்காகத் தான் நன்றி கூறியதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
Comments are closed.