வாசகமறையுரை (மார்ச் 22)

தவக் காலத்தின் மூன்றாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I தானியேல் (இ) 1: 2, 11-19
II மத்தேயு 18: 21-35
“எழுபது தடவை ஏழு முறை”
மன்னித்ததால் நலம்:
ஒருசில நாள்களாகவே படுக்கையில் கிடைந்த அந்தப் பெண்மணியைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், அவருக்குப் புற்று நோய் இருப்பதாகவும், இன்னும் ஆறு மாதங்கள்தான் அவர் உயிரோடு இருக்கப் போவதாகவும் சொல்லிப் போனார்.
இச்செய்தி அந்தப் பெண்மணிக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. இதை அவர் தன் இரண்டு மகன்களிடம் சொன்னபோது மூத்தமகன் அவரிடம், மாற்கு நற்செய்தி 11:24 இல் இடம்பெறும் இறைவார்த்தையை வாசிக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். இதையடுத்து அவர் அந்த இறைவார்த்தைப் பகுதியை எடுத்து வாசித்தார். அதில், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்” என்கிற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. அவர் திருவிவிலியத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது, “நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது, நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்து விடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்” என்ற வார்த்தைகளைக் கவனித்தார்.
இந்த இரண்டு இறைவார்த்தையையும் அவர் வாசித்து முடித்தபோது, ‘ஒரு கிறிஸ்தவளாக இருந்துகொண்டு, இத்தனை நாள்களும் இந்த இரண்டு இறைவார்த்தையும் நான் அறியாமல் இருந்திருக்கின்றேனே!’ என்று வருந்தினார். பின்னர் அவர் தனக்குத் துரோகம் செய்த உறவினர்களையெல்லாம் மனதார மன்னித்துவிட்டு, தனக்கு நோயிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் நம்பிக்கையோடு மன்றாடிவிட்டுத் தூங்கிவிட்டார்.
அன்று இரவு அவர் நன்றாகத் தூங்கினார். மறுநாள் காலையில் அவர் படுங்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அதை வியப்போடு பார்த்த அவரது மூத்தமகன் மருத்துவரை அழைத்து, அவரைப் பரிசோதித்துப் பார்க்கச் சொன்னான். பரிசோதனையின் முடிவில் அந்தப் பெண்மணியிடமிருந்த புற்று நோயானது முற்றிலுமாக நீங்கியிருந்தது தெரிய வந்தது.
ஆம், இந்த நிகழ்வில் வரும் பெண்மணி தனக்குத் துரோகம் செய்தவர்களை மனதார மன்னித்ததால் நோயிலிருந்து நலம்பெற்றார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளைப் போன்று நிபந்தனை இன்றி நாம் மன்னிக்க வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்கள் நடுவில் கடவுள் மும்முறை மன்னிப்பார் என்ற நம்பிக்கை இருந்தது (ஆமோ 1: 1, 3, 6, 9, 11, 13). இதைப் பேதுரு நன்றாகவே அறிந்திருப்பார். அவர் இயேசுவிடம் தான் பெருந்தன்மையானவன் எனக் காட்ட விரும்பி, மூன்றோடு மூன்றைக் கூட்டி, அத்தோடு ஒன்றைக் கூட்டி, “….ஏழுமுறை மட்டுமா?” என்று கேட்கின்றார். இயேசுவோ அவரிடம், “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை” என்கிறார்.
இயேசு இவ்வார்த்தைகளைப் பேதுருவிடம் சொல்லிவிட்டு, ஓர் உவமையைச் சொல்கின்றார். அந்த உவமையின் வாயிலாக, இயேசு பேதுருவிடம் கடவுளைப் போன்று நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும் என்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் அசாரியா என்ற இளைஞன், இஸ்ரயேல் மக்கள் சார்பாக ஆண்டவராகிய கடவுளிடம் பாவ அறிக்கை செய்வது குறித்தும், ஆண்டவர் அவர்களது குற்றத்தை மன்னிக்க வேண்டுவது குறித்தும் வாசிக்கின்றோம். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள் மீண்டும் மீண்டுமாகத் தவறு செய்தபோது, அவர்களை மன்னித்தார். ஆதலால், நம்மோடு வாழ்கின்றவர்கள் நமக்கெதிராகத் தவறு செய்யும்போது, நாம் அவர்களை நிபந்தனையின்றி மன்னித்து, கடவுளை நமது வாழ்வால் பிரதிபலிப்போம்.
சிந்தனைக்கு:
 இவ்வுலகில் மன்னிக்க முடியாத குற்றம் என்று எதுவுமே இல்லை
 கடவுள் மன்னிப்பதில் கடல் என்றால், நாம் அதில் சிறு துளியளவாவது இருக்க வேண்டாமா?
 மன்னிப்பதால் மட்டுமே மனத்திற்கு நிம்மதி கிடைக்கும்
இறைவாக்கு:
‘ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது’ (சீஞா 17:29) என்கிறது சீராக்கின் ஞான நூல். எனவே, கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெற்றவர்களாய் நாம் அதை மற்றவர்களுக்கும் வழங்கி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.