மார்ச் 14 : நற்செய்தி வாசகம்

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
“மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்”
தவக் காலத்தின் இரண்டாம் வாரம் திங்கட்கிழமை
I தானியேல் 9: 4b-11a
II லூக்கா 6: 36-38
“மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்”
தன்னைச் சுட்டவரை மன்னித்த காவலர்:
ஸ்டீவன் மக்டொனால்டு என்றொரு காவல்துறை அதிகாரி இருந்தார். அவரைப் பதின் வயதில் இருந்த ஒருவன் முன்விரோதம் காரணமாகத் துப்பாக்கியால் சுட்டான். அவரது நல்ல நேரம், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனாலும் இச்சம்பவம் அவரை முடக்கிப் போட்டது. அவரால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை.
தன்னைச் சுட்டு, தன்னுடைய வாழ்வையே முடக்கிப் போட்டவனை ஸ்டீவன் மக்டொனால்டு மனதார மன்னித்தார். இதைக் கேள்விப்பட்ட அவருக்கு நெருக்கமான ஒருசிலர் அவரிடம், “அது எப்படி உங்களுடைய வாழ்வையே முடக்கிப் போட்டவனை உங்களால் மன்னிக்க முடிந்தது?” என்று கேட்டதற்கு, “துப்பாக்கியால் சுட்டதால் என்னுடைய உடல்தான் முடங்கிப் போனது, ஒருவேளை நான் அவனை மன்னிக்காவிட்டால், என்னுடைய மூளையும் முடங்கிப் போய்விடும்!” என்றார் அவர்.
இப்படிச் சொன்ன ஸ்டீவன் மக்டொனால்டு தன் வாழ்நாள் முழுக்க மன்னிப்பின் அவசியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே வந்தார்.
ஆம், நாம் நமக்கு எதிராகத் தீமை செய்தவர்களை மன்னிக்காவிட்டால், நமது மூளை முடங்கிப் போவிடும். இன்றைய இறைவார்த்தை மன்னிப்பின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்தியம்புகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைக்குப் பலர் தங்களுக்கு எதிராக மற்றவர் செய்த குற்றத்தை மனத்தில் தேக்கி வைத்துக்கொண்டு, சமயம் கிடைக்கும்போது அதற்குப் பழிக்குப் பழி வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். பிறர் செய்த குற்றத்தை நாம் மனத்தில் தேக்கி வைத்திருந்தால் அதனால் எதிராளி பாதிக்கப்படுவதை விடவும், நாம்தான் மிகுதியாகப் பாதிக்கப்படுவோம். இத்தகைய சூழ்நிலையில்தான் நற்செய்தியில் இயேசு, “மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்” என்கிறார்.
நாம் ஏன் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் நற்செய்தியில் இயேசு கூறுகின்றார். அதுதான் கடவுள் நம்மீது இரக்கம் கொண்டு, நாம் செய்த குற்றங்களை மன்னிப்பது.
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் சார்பாக தானியேல் ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்கின்றார். இஸ்ரயேல் மக்கள் கடவுள் கொடுத்த கட்டளையைக் கடைப்பிடிக்காததால் பலவிதமான துன்பங்களை அனுபவித்தார்கள். இதையெல்லாம் நினைவுகூர்ந்து தானியேல் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கின்றார். கடவுளும் அவர்களது குற்றங்களை மன்னிக்கின்றார்.
எனவே, கடவுள் நம் குற்றங்களை மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்வதால், நாமும் ஒருவர் மற்றவர் செய்த குற்றத்தை மன்னித்து, அவர்களை ஏற்றுக்கொள்வோம்.
சிந்தனைக்கு:
 மன்னிப்பதால் யாரும் குறைந்துவிடுவதில்லை. மாறாக, அவர் கடவுளுக்கு நெருக்கமாகின்றார்; அவரது மக்களுக்கும் நெருக்கமாகின்றார்.
 உண்மையான அன்பு இருப்பவர்களால் மட்டுமே மன்னிக்க முடியும்.
 மன்னிப்பு என்பது இருவழிப் பாதை. மன்னிப்பைப் பெற மன்னிக்க வேண்டியது அவசியம்.
இறைவாக்கு:
‘’ஆண்டவர் உங்களை மன்னித்து போல நீங்களும் மன்னிக்க வேண்டும்’ (கொலோ 3:13) என்பார் புனித பவுல். எனவே, நாம் இயேசு காட்டிய முன்மாதிரியைப் பின்பற்றி ஒருவர் மற்றவரை மன்னித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.