ஆற்றல் மிக்க செயல்களைச் செய்ய துணிவுடன் இருங்கள்
சீடர்கள் நாள் முழுவதும் இயேசுவோடு இருந்தது போல தனிசெபம், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழியாக அவரோடு எப்போதும் நெருக்கமாக இருங்கள் என்றும், அவரது உடனிருப்பை அன்றாட வாழ்வில் உணர்வதன் வழியாக, ஆற்றல் மிக்க செயல்களைச் செய்ய துணிவுடன் இருங்கள் என்றும் இயேசு சபை உயர்தலைவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 24வெள்ளி காலை வத்திக்கானில் இயேசு சபையின் தலைவர்களுக்கான மூன்றாம் கூட்டத்தில் பங்கேற்பாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
உண்மையை எடுத்துரைத்தல், ஒப்புரவு அளித்தல் குணமளித்தல் நீதிக்கான செயல்களில் ஈடுபடுதல், சிறையிலிருப்பவர்களுக்கு விடுதலை அளித்தல் போன்ற செயல்களில் துணிவுடன் ஈடுபட வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவோடு நாம் உடன் நடந்தால் எந்த எல்லையும் நமது எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்காது என்றும் வலியுறுத்தினார்.
கலாச்சாரம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அரசியலில் விரைவான மாற்றங்கள் நிறைந்த இக்காலத்திலும் கிறிஸ்து தொடர்ந்து தனது சீடர்களை பணிக்குத் தொடர்ந்து அனுப்புகிறார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசு சபை நீண்ட காலமாக மனிதகுலத்தின் தேவைகள் கடவுளின் மீட்பு மற்றும் அன்பைப் பூர்த்தி செய்யும் இடத்தில் இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.