வாசக மறையுரை (மார்ச் 08)

தவக் காலத்தின் முதல் வாரம்
செவ்வாய்க்கிழமை
I எசாயா 55: 10-11
II மத்தேயு 6: 7-15
“தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்”
இறைவேண்டலுக்காக நாவு துண்டிக்கப்படல்:
1950 களின் பிற்பகுதியில் வியட்நாமில் மருத்துவப் பணியோடு மறைப்பணியையும் செய்தவர் தாமஸ் தூலே (Dr. Thomas Dooley). இவர் அங்குப் பணியாற்றிய காலக்கட்டத்தில் மூன்று நூல்களை எழுதினார். அதில் ஒன்றுதான் Deliver us from Evil. இந்த நூலில் இவர் குறிப்பிடும் ஓர் உண்மை நிகழ்வு.
வியட்நாமில் கம்யூனிச ஆட்சி நடந்ததால், நற்செய்தி அறிவிக்கவும், கிறிஸ்தவராக வாழ்வதற்கும் பல கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் இருந்தன. இவற்றையும் மீறித் தான் தாமஸ் தூலே நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொண்ட மூன்று சிறுவர்கள் படைவீரர்களால் இழுத்துச் செல்லப்பட்டு நாவு துண்டிக்கப்பட்ட செய்தியை தாமஸ் தூலே கேள்விப்பட்டார். உடனே இவர் அவர்களிடம் சென்று, “எதற்காக இந்த மூன்று சிறுவர்களுடைய நாவைத் துண்டித்தீர்கள். இவர்கள் அப்படியென்ன தவறு செய்துவிட்டார்கள்?’ என்று கேட்டார். அதற்கு படைவீரர்களில் ஒருவர், “இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டலைக் கொஞ்சம் சொல்லுங்கள்” என்றார். இவரும் இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டலை நிறுத்தி நிதானமாகச் சொல்லிக் கொண்டு வருகையில், “தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்” என்ற வார்த்தைகளைச் சொன்னதும், இவரைத் தடுத்து நிறுத்திய படைவீரர், “இப்போது சொன்னீர்களே! இதற்காகத்தான் நாங்கள் இந்த மூன்று சிறுவர்களின் நாவைத் துண்டித்தோம். ஏனெனில், இவர்கள் எங்களைத் தீயோர் என்று குறிப்பிடுகின்றார்கள்” என்றார். இதைக் கேட்டு தாமஸ் தூலே அதிர்ந்து போனார்.
இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல் எதிரிகளை பதற்றமடையச் செய்தது என்பது வியப்பாகவே இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒருசிலருக்கு இறைவேண்டல் என்றால், வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவது என்ற எண்ணம் இருக்கும். இயேசுவின் காலத்தில் இருந்தவர்களுக்கும் இத்தகைய எண்ணம் இருந்தது. மேலும் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் பொது வெளியில் இறைவேண்டல் செய்து, மக்களுடைய கவனத்தைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள்.
இந்நிலையில் இயேசு தம் சீடரிடம் கடவுளிடம் எப்படி வேண்ட வேண்டும் என்று கற்றுத் தருகின்றார். இயேசு தம் சீடருக்குக் கற்றுத்தரும் இறைவேண்டலில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதியில் அவர் கடவுளைப் போற்றிப் புகழவேண்டும் என்றும், இரண்டாவது பகுதியில் நம்முடைய தேவைகளுக்காக மன்றாட வேண்டும் என்றும் கற்பிக்கின்றார். கடவுளைத் தந்தை என அழைப்பதும், கடவுளுடைய ஆட்சியை நாடினால், நம்முடைய தேவைகள் நிறைவேறும் என்று இயேசு சொல்வதும் இறைவேண்டலில் உள்ள தனிச் சிறப்புகள் ஆகும்.
தவிர, “தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்” என்று இயேசு தம் சீடருக்குக் கற்றுத் தருவது, கடவுள் தம் மக்களைத் தீயோனாக சாத்தானிடமிருந்து நிச்சயம் விடுவிப்பார் என்ற நம்பிக்கையை நமக்கு வெளிப்படுத்துகின்றது. எனவே, நாம் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்த இறைவேண்டலைப் பொருள் உணர்ந்து, நம்பிக்கையோடு சொல்லி, அவரது அருளைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவதல்ல, வாழ்வுதரும் இறைவார்த்தையை வாழ்வாக்குவதே உண்மையான இறைவேண்டல்.
 இறைவேண்டலை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவோர் ஒருநாளும் அதற்குரிய பலனைப் பெறார்.
 இறைவனிடம் எப்படி மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசுவே நமக்கு முன்மாதிரி.
இறைவாக்கு:
‘நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் நலமாவார்’ (யாக் 5:15) என்பார் புனித யாக்கோபு. எனவே, நாம் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.