அமைதியின் அரசியாம் மரியாவிடம் உக்ரைனுக்காக வேண்டுவோம்
கடுமையாய்ப் போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து செபிப்போம் என்று, மார்ச் 05, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச்சனிக்கிழமையன்று பத்தாவது நாளாக, போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டிற்காக, ஒன்றிணைந்து செபிப்போம், உக்ரைனில் அமைதி என்ற ஹாஷ்டாக்குகளுடன் (#PrayTogether #Ukraine #Peace), தன் டுவிட்டர் செய்தி வழியாக, அன்னை மரியாவிடம் மன்றாடியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“அமைதியின் அரசியாம் அன்னை மரியா, தன் மேற்போர்வையை நம்மீது விரிக்குமாறு அவரிடம் மன்றாடுவோம். அன்னையே, உமது பாதுகாவலில் நாங்கள் அடைக்கலம் தேடுகிறோம். இறைவனின் புனித அன்னையே, எம் தேவைகளில் எம்மைக் கைவிடாதேயும். மகிமைநிறைந்த ஓ புனித கன்னி மரியே! எம்மை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றும்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
உக்ரைனுக்காக உலகளாவிய உதவி
மேலும், உக்ரைனில் மார்ச் 05 இச்சனிக்கிழமை நிலவரம் குறித்து, வத்திக்கான் செய்தித்துறைக்கு தகவல் அனுப்பியுள்ள, உக்ரைன் கிரேக்க கத்தோலிக்கச் செயலகம், ஏறக்குறைய இருபது செ.மீ. அளவிற்குப் பனிபொழிந்துள்ள கார்கீவ் நகரத்தில், இவ்வெள்ளி இரவில் குண்டுகள் வீசப்பட்ட சப்தத்தைக் கேட்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளது.
எதிரிகளின் கொடும்கரங்களிலுள்ள நகரங்களைவிட்டு மக்கள் வெளியேற இயலாமல் உள்ளனர் என்றுரைத்துள்ள அவ்வலுவலகம், அந்நகரங்களுக்கு மனிதாபிமான உதவிகளாவது சென்றடைவதற்கு உலகளாவிய சமுதாயம், தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்றுமாறும், உக்ரைன் விவகாரத்தில் மௌனமாய் இருக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
Comments are closed.