மார்ச் 5 : நற்செய்தி வாசகம்

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32
அக்காலத்தில்
இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள். பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————
குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்துவோம்
திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் சனிக்கிழமை
I எசாயா 58: 9b-14
II லூக்கா 5: 27-32
குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்துவோம்
குற்றஞ்சாட்டிக்கொண்டே இருந்தால் அன்புசெலுத்த நேரமிருக்காது:
மிகவும் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்த பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் அவ்வாறு வாழ்ந்ததாலேயே அவருக்குக் கொடிய நோய் வந்தது. இதனால் அவருடைய வீட்டில் இருந்தவர்கள் அவரைத் தெருவில் தூக்கி எறிந்தனர்.
தெருவில் தூக்கி எறியப்பட்ட அந்தப் பெண்மணியை யாருமே கண்டுகொள்ளவில்லை; ஆனால் அன்னைத் தெரசா அவரைக் கண்டுகொண்டார். அவர் அந்தப் பெண்மணியை அள்ளியெடுத்துத் தன் இல்லத்திற்குக் கொண்டு வந்தார். மட்டுமல்லாமல், அவரிடம் அன்புமொழி பேசினார். இவற்றையெல்லாம் பார்த்த அன்னையின் இல்லத்தில் இருந்த சக பெண்மணிகள், “அன்பு காட்டுகின்ற அளவுக்கு இவள் ஒன்றும் நல்லவள் கிடையாது; பாவி” என்று முணுமுணுத்தனர்; முகம் சுளித்தார். இதைக் கேள்விப்பட்ட அன்னை சக பெண்களிடம், “இப்படியே குற்றஞ்சாட்டிக்கொண்டும் பொல்லாதன பேசிக்கொண்டும் இருந்தால், அன்பு செலுத்த நேரமே இருக்காது” என்றார்.
ஆம், நாம் ஒருவர் மற்றவரைக் குற்றஞ்சாட்டிக்கொண்டும், பொல்லாதன பேசிக்கொண்டும் இருந்தால் அன்பு செலுத்த எங்கே நேரம் இருக்கும்! இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு பசித்தோர் மற்றும் வறியோரின் தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்துச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய முதல் வாசகம், நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, நோன்பிருப்பதாகச் சொல்லிக்கொண்டு தம்மோடு வாழும் வறியவர்களை ஒடுக்கினால் அது நோன்பே அல்ல என்று இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துரைப்பார். இன்றைய முதல் வாசகத்தில் அவர், குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, வறியோரின் தேவையை நிறைவு செய்தால், இருள் நடுவே ஒளி உதிக்கும்; ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார் என்கின்றார்.
நற்செய்தியில் இயேசு லேவியை அழைத்ததும், அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். மேலும் அவர் தன் வீட்டில் இயேசுவுக்கு விருந்தளிக்கின்றார். அவ்விருந்தில் வருதண்டுபவர்கள் கலந்துகொள்கின்றார்கள். இதைப் பார்த்துவிட்டுப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் சீடரிடம், “வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்கின்றார்கள். இவ்வாறு தன்னையும் தன் சீடர்களையும் குற்றஞ்சாட்டிய, தங்களைக் குறித்துப் பொல்லாதன பேசிய பரிசேயர்களைப் பார்த்து இயேசு, “நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்கின்றார், நாமும்கூட இந்தப் பரிசேயர்களைப் போன்று அடுத்தவரை குற்றஞ்சாட்டிக்கொண்டும், பொல்லாதன பேசிக்கொண்டும் அலைகின்றோம். இத்தகைய போக்கினை நாம் நம்மிடமிருந்து தவிர்க்க முயற்சிப்போம்.
சிந்தனைக்கு:
 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
 குறைகளைப் பார்க்காமல், நிறைகளைப் பார்க்கக் கற்றுக்கொண்டால், நமது வாழ்வு நிறைவுள்ளதாக இருக்கும்
 நம்மோடு வாழும் வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், நமது வாழ்வு வளமானதாக மாறும்
,b>ஆன்றோர் வாக்கு:
‘உன்னதமான செயலே உயர்ந்த வழிபாடு’ என்கிறது செர்பியப் பழமொழி. எனவே, நாம் குற்றஞ்சாட்டாமல், உன்னதமான செயல்களைச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.