வாச_மறையுரை (மார்ச் 05)
திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும்
சனிக்கிழமை
I எசாயா 58: 96-14
II லூக்கா 5: 27-32
“அனைத்தையும் விட்டுவிட்ட லேவி”
இதுவன்றோ பெரிய தியாகம்:
பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து மறைப்பணி ஆற்றிக்கொண்டிருந்த மறைப்பணியாளர் ஒருவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுப் பெரிதும் உந்தப்பட்ட இந்து சமயத்தைச் சார்ந்தவரும் சட்டக் கல்லூரி மாணவருமான ஒருவர் திருமுழுக்குப் பெற விரும்பினார். அதே நேரத்தில் அவர், மறைப்பணியாளரிடம், “திருமுழுக்குப் பெறும் நிகழ்வு எல்லாருக்கும் தெரிகிற மாதிரி இல்லாமல், மறைவாக இருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில், நான் திருமுழுக்குப் பெறுவது என் தந்தைக்குத் தெரிந்தால், அவர் என்னுடைய படிப்புச் செலவிற்கு அனுப்பிக் கொண்டிருக்கும் பணத்தை அனுப்புவதை நிறுத்திவிடுவார்” என்றார்.
“திருமுழுக்கு என்பது எல்லாருக்கும் முன்பாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்றேன் என்பதை அறிக்கையிடும் ஒரு புனித நிகழ்வு. அதை யாருக்கும் தெரியாமல் மறைவாக வைத்தால் அவ்வளவாக நன்றாக இருக்காது” என்று மறைப்பணியாளர் சொன்னதும், சரி என்று ஏற்றுக்கொண்டு சட்டக் கல்லூரி மாணவர் எல்லாருக்கும் முன்பாகத் திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். இச்செய்தியை அறிந்த சட்டக் கல்லூரி மாணவரின் தந்தை, அவருடைய படிப்புச் செலவிற்காக அனுப்பிக் கொண்டிருந்த பணத்தை அனுப்புவதை நிறுத்திவிட்டார். இதனால் சட்டக் கல்லூரி மாணவர் பகுதி நேரம் வேலை பார்த்துத்தான் படிக்க வேண்டியிருந்தது.
இதற்கு நடுவில் தன்னுடைய பணிக் காலத்தை முடித்துக் கொண்டு மறைப்பணியாளர் தன்னுடைய சொந்த நாட்டிற்குக் கிளம்பத் தயாரானார். அவரை வழியனுப்பச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர், திருமுழுக்குப் பெற்ற பிறகு நடந்த அனைத்தையும் அவரிடம் ஒன்று விடாமல் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு மறைப்பணியாளர் அவரிடம், “திருமுழுக்குச் சடங்கை மறைவாக நடத்தியிருக்கலாமோ என்று தோன்றுகின்றது” என்றார். அதற்குச் சட்டக் கல்லூரி மாணவர், “அப்படி நினைக்க வேண்டாம் தந்தையே! கிறிஸ்துவுக்காக இந்தவொரு தியாகத்தைக்கூட நான் செய்யாவிட்டால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு என்ன பயன்?” என்று தீர்க்கமாகச் சொன்னார்.
ஆம், இந்தச் சட்டக் கல்லூரி மாணவர் கிறிஸ்துவுக்காக தனக்குக் கிடைத்து வந்த பண உதவியையும் இழந்தார். அதை அவர் பெருமையாகவே கருதினார். நற்செய்தியில் இயேசுவுக்காக அனைத்தையும் விட்டுவிட்ட லேவியைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
வரிதண்டும் ‘வேலை’ என்பது பணம் கொடுத்துப் பெறுகின்ற ஒரு வேலை. லேவி அல்லது மத்தேயு பணம் கொடுத்துத்தான் அந்த வேலையை வாங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் இயேசு அவரைத் தனது பணிக்காக அழைத்ததும், அந்த வேலையைக் கூட விட்டுவிட்டு அவர் இயேசுவைப் பின்தொடர்கின்றார். இதில் இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், இயேசு அழைத்ததும் தங்கள் படகுகளையும் வலைகளையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிய பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா ஆகியோரால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். ஆனால், மத்தேயுவால் தான் செய்து வந்த வேலையைத் திரும்பப் பெற முடியாது. அந்த அடிப்படையில் மத்தேயு, இயேசுவின் மற்ற எல்லாச் சீடர்களை விடவும் அவருக்காக மிகப்பெரிய தியாகம் செய்தார் என்று சொல்லலாம்.
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு வந்தால், ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவர் என்கிறார். மத்தேயு வரிதண்டுதல் என்ற தீய வழியை விட்டுவிட்டு வந்ததால், அவர் ஆண்டவர் இயேசுவுக்கு ஊழியம் செய்யும் மகிழ்ச்சியைப் பெற்றார்.
ஆண்டவருக்கு ஊழியம் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. அந்த மகிழ்ச்சியைப் பெற நாம் தமது தீய வழிகளை விட்டு ஆண்டவரிடம் வருவோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவருக்கு ஊழியம் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை விடவும் வேறு எதில் பெரிய அளவில் மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது!
இயேசுவுக்காக இழப்பது இழப்பே அல்ல, அது மிகப்பெரிய பேறு!
உண்மையான மனமாற்றம் செயலில் வெளிப்பட வேண்டும்.
இறைவாக்கு:
‘எனக்குச் செவி கொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்’ (நீமொ 8:32) என்கிறார் ஆண்டவர். எனவே, நாம் இயேசுவைப் பின்பற்றி, அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.