மார்ச் 4 : நற்செய்தி வாசகம்
மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15
அக்காலத்தில்
யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
“நோன்பும் வாழ்வும்”
திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் வெள்ளிக்கிழமை
I எசாயா 58: 1-9a
II மத்தேயு 9: 14-15
“நோன்பும் வாழ்வும்”
நோன்பிருந்தும் சினத்தைக் கட்டுப்படுத்தமுடியாத துறவி:
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் வருகின்ற நிகழ்வு இது. விருச்சிகர் என்றொரு துறவி இருந்தார். இவர் காட்டில் கடுமையாக நோன்பிருந்து வந்தார். மேலும் இவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் உண்டு வந்தார். அவ்வாறு இவர் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையாக நோன்பிருந்துவிட்டு, உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தார். அப்பொழுது அவருக்கு முன்பாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அதிசய நாவல் கனி கனிந்து தொங்கிக்கொண்டிருந்தது. அந்த நாவல் கனியின் சிறப்பு என்னவெனில், அதை உண்டால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியெடுக்காது என்பதுதான். துறவி அந்த நாவல் கனியைப் பறித்தார். பின்னர் அவர் ‘இதைக் குளித்துவிட்டு உண்டு கொள்ளலாம்’ என நினைத்துக்கொண்டு, ஓர் இலையில் வைத்துவிட்டுக் குளிக்கப்போனார்.
அந்நேரத்தில் காயக்கண்டிகை என்றொரு பெண்மணி அவ்வழியாக வந்தார். அவர் தெரியாமல் துறவி இலையில் வைத்திருந்த நாவல் கனியை மிதித்துவிட, அது நசுங்கியது.. இதைப்பார்த்து வெகுண்டெழுந்த துறவி, பெண்மணியைப் பார்த்து, “பசித்தீயால் வருந்துக” என்று சபித்தார். இதனால் அழுதுபுலம்பிய பெண்மணி துறவியிடம் மன்னிப்புக் கேட்டார். துறவியோ, “நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் உண்பேன். அப்பொழுதுதான் உன் சாபம் நீங்கும். அதுவரைக்கும் நீ பசித்தீயால் வருந்த வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு அகன்றார்.
பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையாக நோன்பிருந்தவரால் அறியாமல் தவறுசெய்த ஒரு பெண்மணியை மன்னிக்க முடியவில்லை. இஸ்ரயேலரும் நோன்பிருந்தனர்; ஆனாலும் அவர்கள் இருந்த நோன்பு அவர்களது வாழ்வில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இன்றைய இறைவார்த்தை உண்மையான நோன்பு எப்படியிருக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்துச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்கள் ஆண்டுக்கொரு முறை பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாளில் நோன்பிருக்கவேண்டும் (லேவி 16: 29- 32); ஆனால், அவர்கள் தாங்கள் நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக நோன்பிருந்தார்கள். மேலும் அவர்கள் நோன்பிருந்த அதே நாளில் தங்களோடு இருந்தவர்களை ஒடுக்கினார்கள். இதனாலேயே முதல் வாசகத்தில் ஆண்டவர் அவர்களிடம், “இன்று போல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது என்கிறார். மேலும் அவர் வறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே நான் விரும்பும் நோன்பு என்கின்றார். நற்செய்தியில் இயேசு எப்பொழுது, எப்படி நோன்பிருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றார்.
இவற்றின் மூலம் நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று, நோன்பு என்பது வெளியடையாளம் அல்ல; அது உள்ளார்ந்தவிதமானது. இரண்டு, நாம் நோன்பிருக்கின்றோம் என்பதற்காக மற்றவர்களும் நோன்பிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.
சிந்தனைக்கு:
மக்கள் புகழவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் நோன்பு நோன்பேயல்ல
நோன்பிருந்து மன்றாடினாள் பேய்களையும் விரட்டமுடியும் (மத் 17: 21)
நாம் நோன்பிருப்பதால் வறியவர்கள் பயன்பெற்றால் அதுவே சிறந்தநோன்பு
ஆன்றோர் வாக்கு:
‘ஆன்மாவிற்கான உணவு நோன்பிருப்பதன் மூலம் கிடைக்கிறது’ என்பார் புனித ஜான் கிறிசோஸ்தம். எனவே, நாம் உன்னார்ந்த விதமாய் நோன்பிருந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.