வாசக மறையுரை (மார்ச் 04)

திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும்
வெள்ளிக்கிழமை
I எசாயா 58: 1-9a
II மத்தேயு 9: 14-15
“பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுங்கள்!”
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான உணவிடும் குடும்பம்:
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, கோவிந்த ராஜன் என்பவர் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தார். அங்கே பலரும் பசியோடு இருப்பதைக் கண்ட அவர், முதலில் அவர்களுக்குத் தண்ணீர் வாங்கிக் கொடுத்தார். பின்னர் அவர் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்து உணவு சமைத்து அவர்களுக்குப் பரிமாறினார். இதையெல்லாம் பார்த்துவிட்டு அங்கிருந்த மக்கள் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
அப்போது அவருக்குள், ‘நாம் ஏன் இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவளிக்கக்கூடாது?’ என்ற எண்ணமானது ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஒவ்வொரு நாளும் வீட்டில் உணவு சமைத்து, அதை எடுத்து வந்து, மருத்துவமனைக்கு முன்பாக இருந்த நோயாளர்கள், அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோருக்குக் கொடுக்கத் தொடங்கினார். இதனால் பசியோடு இருந்த பலர் வயிறார உண்டார்.
இப்படிப்பட்டவர் ஒருநாள் திடீரென இறக்க, இவருடைய பிள்ளைகள் இவர் விட்டுச் சென்ற பணியினை இன்று வரைக்கும் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
ஆம், இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளர்களுக்கும் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உணவளித்துக்கொண்டிருக்கும் திரு. கோவிந்தராஜன் அவர்களுடைய குடும்பம் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. இன்றைய இறைவார்த்தை பசித்தோருக்கு உணவிடுவது உண்மையான நோன்பு என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘நாங்கள் நோன்பிருந்து மன்றாடியும் நீர் எங்கள் மன்றாட்டிற்குச் செவிசாய்க்கவில்லையே!’ என்று இஸ்ரயேல் மக்கள் கடவுளை நோக்கிக் கூக்குரல் எழுப்பினார்கள். அதற்குக் கடவுள் அளிக்கும் மறுமொழிதான் இன்றைய முதல் வாசகம்.
இஸ்ரயேல் மக்கள் நோன்பிருந்தார்கள். பல்வேறு விதமான பொருத்தனைகளைச் செய்தார்கள். அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அவர்கள் நோன்பிருந்து கொண்டே தங்களோடு இருந்தவர்களை ஒடுக்கினார்கள்; மற்றவரை வஞ்சித்தார்கள். இவ்வாறு அவர்கள் போலியாக நோன்பிருந்தார்கள். அப்போதுதான் கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக பசித்தோருக்கு உணவிடுவதும், தங்க இடமில்லாத வறியவருக்கு வீட்டில் இடமளிப்பதும், இது போன்ற இரக்கச் செயல்களைச் செய்வதுதான் உண்மையான நோன்பு என்கிறார்.
நற்செய்தியில், நாங்களும் பரிசேயர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருக்கவில்லை என்று யோவானின் சீடர்கள் இயேசுவிடம் கேட்டபோது, அவர் அவர்களிடம் நோன்பு எப்போது, எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவினைத் தருகின்றார்.
ஆதலால், மேம்போக்காக, அர்த்தம் புரியாமல் நோன்பு இருப்பதை விடுத்து, வறியோரின் தேவையைப் பூர்த்தி செய்து உண்மையான நோன்பிருப்போம்.
சிந்தனைக்கு:
 இறைவனை வழிபடுவதும் பக்தி முயற்சிகளை மேற்கொள்வதும் அவரவர் விருப்பம். அவற்றை மற்றவர்கள் மீதி திணிக்கக் கூடாது.
 அர்த்தம் புரியாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பக்தி முயற்சியும் வெற்றுச் சடங்கே!
 உணவு கொடுக்கும் ஒவ்வொருவரும் உயிர் கொடுப்பவருக்கு இணையாவார்.
இறைவாக்கு:
‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ (மத் 14:16) என்பார் இயேசு. எனவே, நாம் பசியோடு உள்ள மக்களுக்கு உள்ளார்ந்த விதமாய் உணவளித்து, உண்மையான நோன்பிருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.