வாசக மறையுரை (மார்ச் 03)

திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும்
வியாழக்கிழமை
I இணைச்சட்டம் 30: 15-20
II லூக்கா 9: 22-25
“வாழ்வும் சாவும்”
கீழ்ப்படியாத மகன்:
அது ஒரு விடுமுறை நாள். அன்றைய நாளில் தாயானவள் வீட்டு வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருக்க, அவளை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்தான் அவளுடைய எட்டு வயது மகன். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாய், ‘இவனை இப்படியே விட்டால், ஒரு வேலையும் ஓடாது’ என்று அவனைப் பிடித்து ஒரு தனியறையில் அடைத்து வைத்துவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.
பிற்பகல் வேளையில், தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்திருந்த தாய், தனியறையில் அடைத்து வைத்திருந்த தன்னுடைய மகனை வெளியே கூப்பிட்டாள். அவனும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.
“அம்மா! நான் உள்ளே இருந்தபோது, எதற்காக நீங்கள் என்னைத் தனியறையில் அடைத்து வைத்தீர்கள் என்பது பற்றித் தீர யோசித்தேன். பின்னர் கடவுளிடம் உருக்கமாக வேண்டவும் செய்தேன்” என்று தயங்கித் தயங்கிப் பேசினான் மகன். இப்படியெல்லாம் தன் மகன் பேசிப் பார்த்திராத தாய் அவனிடம், “நீ நல்லவனாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினால், நீ நல்லவனாக மாறுவதற்கு அவர் உனக்கு உதவி செய்வார்” என்றாள்.
“நான் அதற்காகக் கடவுளிடம் வேண்டவில்லை” என்று பேச்சை எடுத்த மகன், “என்னுடைய தாய் நான் செய்யும் குற்றங்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வேண்டினேன்” என்றான். இதைக்கேட்டுப் பொங்கி எழுந்த தாய், அவனைத் தாக்குவதற்காகக் கொலைவெறியோடு பாய்ந்தாள்.
வேடிக்கையான நிகழ்வாக இருந்தாலும் இன்றைக்குப் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்குச் சரியாகக் கீழ்ப்படிந்து நடப்பதில்லை என்கிற உண்மையை வேடிக்கையாகப் பதிவு செய்கின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து நடந்தால் வாழ்வும், அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்காவிட்டால் சாவும் வரும் என்கிற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே இணைப்பாளராக இருந்தவர் மோசே. அவர் கடவுள் சொல்வதாக இஸ்ரயேல் மக்களிடம் பேசுகின்ற வார்த்தைகள் இன்றைய முதல் வாசகம்.
இப்பகுதியில் மோசே இஸ்ரயேல் மக்களிடம், கடவுளை அன்பு செய்து, அவரது கட்டளையைக் கடைப்பிடித்தால் கடவுளின் ஆசி அதாவது வாழ்வு உங்களுக்குக் கிடைக்கும் என்கிறார். அதே நேரத்தில் கடவுளை அன்பு செய்யாமல், அவரது கட்டளையைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் சாக வேண்டியதுதான் என்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், மோசே சொன்ன இந்த வார்த்தைகளைக் கடைப்பிடிக்காமல், இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வழியில் நடந்ததுதான் (இச 31:16-18, 27-29).
நற்செய்தியில் இயேசு, என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்கிறார். தன்னலம் துறக்கின்ற ஒருவராலேயே இயேசுவின் சீடராய் இருந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ முடியும். நாம் இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து அவரது உண்மையான சீடராகி, நிலைவாழ்வைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவரை அன்பு செய்ய முடியாது.
 தன்னை இழக்கத் துணிபவரே விண்ணை அடைகிறார்.
 வாழ்வும் சாவும் நம்மைப் பொறுத்ததே!
இறைவாக்கு:
‘ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்’ (ஆமோ 5:6) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். எனவே, நாம் ஆண்டவரை தேடி, அவர் கட்டளையின்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.