கிறித்தவக் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ்க் கிறித்தவ இலக்கியம் மேலைநாட்டுத் திருத்தொண்டர்களால் தோற்றுவிக்கப்பட்டு, நம்மவர்களால் வளர்ந்துகொண்டே வருகின்றது. காப்பியம், சிற்றிலக்கியம், கீர்த்தனை, உரைநடை, மொழிபெயர்ப்பு, நாடகம், புதுக்கவிதை, நாட்டார் வழக்காற்றியல் எனப் பல்வேறு வடிவங்களில் கிறித்தவ இலக்கியத்தின் எல்லை பரந்து விரிந்து சென்று கொண்டிருக்கின்றது. இதில் கிறித்தவர்களின் பங்குடன் கிறித்தவரல்லாதாரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. கிறித்தவ இலக்கியம் இயேசு கிறிஸ்துவை மட்டுமே மையமாகக் கொள்ளாமல், அவரின் சீடர், அவரின் கொள்கைகளைப் பின்பற்றியோர், இன்றைய கிறித்தவ சமூகம் முதலிய பல்வேறு கருப்பொருள்களையும் மையமாகக் கொண்டு விளங்குகின்றது.

இயேசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையரால் தமிழகத்தில் கிறித்தவம் வேரூன்றத் தொடங்கியது. புனித தோமையருக்குப் பின் வாஸ்கோட காமாவின் வருகைக்கு முன் சுமார் ௧௫ நூற்றாண்டுகளாக கிறித்தவம் பண்டைத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இதற்குப் பலவிதமான சான்றுகள் உள்ளன. ௧௪௯௮ ஆம் ஆண்டில் வாஸ்கோட காமாவின் வருகைக்குப் பின்னர், மேலை நாடுகளிலிருந்து இறைத் தொண்டர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்து இறைச் செய்தியைப் பரப்பியும், மனிதநேயத் தொண்டுகள் புரிந்தும் வந்தனர். ஆரம்ப நிலையில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் பணிகளையும் அவரைத் தொடர்ந்து வந்த இயேசு சபையினரின் பணிகளையும் குறிப்பிட வேண்டும்.

இயேசு சபையினரைத் தொடர்ந்து ௧௭0௬ ஆம் ஆண்டு சீர்திருத்தச் சபையின் இறைப்பணியாளர் அருள்திரு. பர்த்தலோமியோ சீகன்பால்கு தரங்கம்பாடியில் வந்து தங்கி, தமிழ் மொழியைக் கற்று விவிலியத்தையும் ஆங்கில மற்றும் செர்மானிய வழிபாட்டுப் பாடல்களையும் தமிழாக்கம் செய்து அச்சிட்டு வெளியிட்டார். இம்மொழிபெயர்ப்பு மற்றும் நூல் வெளியீட்டுப் பணி தமிழகக் கிறித்தவ மக்களின் வாழ்விலும் கிறித்தவ இலக்கியத்தின் தோற்றத்திலும் ஒரு தொடக்கமாக விளங்கியது எனலாம். காரணம் என்னவெனில், கிறித்தவ இலக்கியங்களுக்கு விவிலியமே அடிப்படையாகும்.
சீகன்பால்குவின் காலத்தில் தமிழகம் வந்த (௧௭0௯) வீரமாமுனிவர் தமிழ் கற்று பல்வேறு வகையான கிறித்தவ இலக்கியங்களைப் படைத்தார். அவற்றுள் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்தது தேம்பாவணியாகும். இதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் கிறித்தவக் காப்பியம் ஆகும். இக்காப்பியத்தால் தமிழுக்கும் பெருமை, கிறித்தவ இலக்கியத்திற்கும் பெருமை.

கிறித்தவக் காப்பியங்கள்

இலக்கிய வகைகளுள் காப்பியம் உயர்வான ஒரு வகையாகும். தமிழில் சிலப்பதிகாரம் முதல் காப்பியமாகத் தோன்றி, இன்று ஆதியாகம காவியம் வரை காப்பியம் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கிறித்தவ இலக்கியம் தோன்றிய காலச்சூழலிலேயே கிறித்தவக் காப்பியமும் தோன்றியது கிறித்தவ இலக்கியத்திற்குக் கிடைத்த பெருமையாகும். கிறித்தவ இலக்கியத்தின் முதல் காப்பியமான தேம்பாவணியைத் தொடர்ந்து பல விதமான பா வடிவிலும், மரபிலும் பல காப்பியங்கள் தோன்றியுள்ளன. இவற்றில் சில இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் நற்செய்தி நூல்களின் அடிப்படையில் விவரிப்பதாகவும், சிலகாப்பியங்கள் இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாளின் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும், சில காப்பியங்கள் விவிலியம் முழுவதிலுமுள்ள செய்திகளைச் சுருக்கமாகச் சொல்வதாகவும், சில காப்பியங்கள் விவிலியத்திலுள்ள மாந்தர்களை மட்டும் (யோசேப்பு, எஸ்தர், யூதித்து, பவுல்) விரித்துரைப்பதாகவும், சில காப்பியங்கள் இயேசு கிறிஸ்துவின் அடியவர்களை(புனித சவேரியார், அன்னை தெரேசா, தேவசகாயம் பிள்ளை) விவரிப்பதாகவும் அமைந்துள்ளன. கிறித்தவக் காப்பியங்களின் இரு கண்களாகப் போற்றப்பட்டுவரும் தேம்பாவணியும் இரட்சணிய யாத்திரிகமும் தழுவல் காப்பியங்களாகும். மொழிபெயர்ப்புக் காப்பியமாக பூங்காவனப் பிரளயம் காணப்படுகிறது. இன்றைக்குக் கிறித்தவக் காப்பியங்களின் எண்ணிக்கையைப் பலரும் பலவிதமாகக் குறிப்பிட்டாலும் கீழ்க் குறிப்பிடப்படும் காப்பியங்களைக் குறிப்பிடத்தக்க கிறித்தவக் காப்பியங்கள் எனலாம். அவை பின்வருமாறு:

௧. தேம்பாவணி – வீரமாமுனிவர் (௧௭௨௬)
௨. யோசேப்புப் புராணம் – கூழங்கைத் தம்பிரான்
௩. கிறிஸ்தாயனம் – ஜான்பால்மர் (௧௮௬௫)
௪. ஞானாதிக்கராயர் காப்பியம் – சாமிநாதர் (௧௮௬௫)
௫. திருவாக்குப் புராணம் – கனகசபைப் புலவர் (௧௮௬௬)
௬. ஞானானந்த புராணம் – தொம் பிலிப்பு நாவலர் (௧௮௭௪)
௭. அர்ச். சவேரியார் காவியம் – அந்தோனிமுத்து (௧௮௭௭)
௮. பூங்காவனப் பிரளயம் – சாமுவேல் வேதநாயகம் தாமஸ் (௧௮௮௭)
௯. கிறிஸ்து மான்மியம் – ஸ்தொஷ் ஐயர் (௧௮௯௧)
௧0. இரட்சணிய யாத்திரிகம் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை (௧௮௯௪)
௧௧. சுவிசேட புராணம் – சுகாத்தியர் (௧௮௯௬)
௧௨. திருச்செல்வர் காவியம் – பூலோகசிங்க அருளப்ப நாவலர் (௧௮௯௬)
௧௩. திருஅவதாரம் – மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் (௧௯௪௪)
௧௪. இரட்சகராகிய இயேசு நாதர் – ஞானாபரணம் (௧௯௫0)
௧௫. நசரேய புராணம் – ஜே.எஸ். ஆழ்வார் பிள்ளை
௧௬. சுடர்மணி – ஆரோக்கியசாமி (௧௯௭௬)
௧௭. இயேசு காவியம் – கண்ணதாசன் (௧௯௮௧)
௧௮. அருளவதாரம் – வி. மரிய அந்தோனி (௧௯௮௩)
௧௯. மீட்பதிகாரம் – பவுல் இராமகிருட்டிணன் (௧௯௮௬)
௨0. இயேசு புராணம் – ஈழத்துப் பூராடனார் (௧௯௮௬)
௨௧. எஸ்தர் காவியம் – இராபின்சன் குரூசோ (௧௯௮௬)
௨௨. மோட்சப்பயணக் காவியம் – ஏ.த. ஜோதிநாயகம் (௧௯௯௧)
௨௩. அன்னை தெரேசா காவியம் – துரை. மாலிறையன் (௧௯௯௬)
௨௪. அருள்நிறை மரியம்மைக் காவியம் – துரை. மாலிறையன் (௧௯௯௬)
௨௫. அருட்காவியம் – மதலை முத்து (௧௯௯௯)
௨௬. மீட்பரசி – லோட்டஸ் எடிசன் (௨00௨)
௨௭. பவுலடியார் பாவியம் – ம. யோவேல் (௨00௩)
௨௮. உலகஜோதி – இறையரசன் (௨00௫)
௨௯. திருத்தொண்டர் காப்பியம் – சூ. இன்னாசி (௨00௭)
௩0. ஆதியாகம காவியம் – சா. சாமிமுத்து (௨00௮)

இவைகள் புராணம், காப்பியம், காவியம், பாவியம் எனப் பலப் பெயர்களை உடையனவாகக் காணப்படுகின்றன.

௧௮ ஆம் நூற்றாண்டுக் கிறித்தவக் காப்பியங்கள்

வீரமாமுனிவர் தழுவல் முறையில் தேம்பாவணி என்னும் காப்பியத்தை ௧௭௨௬ ஆம் ஆண்டு படைத்தருளினார். வீரமாமுனிவர் திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய தமிழ் இலக்கியங்களில் தோய்ந்தமையால் தேம்பாவணியைக் காப்பியமாகப் பாட முடிந்தது. தேம்பாவணி வீரமாமுனிவரது காலத்தில் நூலாக வெளியிடப்படாவிடினும், தேம்பாவணி பற்றிய செய்தி தமிழகம் மட்டுமன்றி இலங்கைக்கும் சென்று பரவியது. கிறித்தவக் காப்பியங்கள் படைப்பவர்களுக்குத் தமிழ்க் காப்பியங்கள் மட்டுமன்றி தேம்பாவணியும் அடிப்படையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேம்பாவணியைத் தொடர்ந்து இலங்கையில் கூழங்கைத் தம்பிரான் என்பவர் யோசேப்புப் புராணம் என்னும் நூலை இயற்றினார். இப்புராணம் முழுமையாகக் கிடைக்கவில்லை. இப்புராணம் ௧௭௯௫ ஆம் ஆண்டிற்கு முன் எழுதப்பட்டதாகும்.

௧௯ ஆம் நூற்றாண்டுக் கிறித்தவக் காப்பியங்கள்

௧௮௬௫ ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மயிலாடி என்னும் ஊரைச் சார்ந்த ஜான் பால்மர் என்னும் கவிஞர் கிறிஸ்தாயனம் என்னும் காப்பியத்தை இயற்றினார். இக்காப்பியம் தமிழ் நாட்டைச் சார்ந்த ஒருவரால் எழுதப்பட்ட முதல் கிறித்தவக் காப்பியமாகும்.இக்காப்பியம் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தொடர்ந்து ௧௮௬௫ ஆம் ஆண்டிலேயே புதுச்சேரியைச் சார்ந்த சாமிநாதர் என்பவர் ஞானாதிக்கராயர் காப்பியத்தை இயற்றினார். இக்காப்பியம் ஞானாதிக்கராயர் என்பவரின் வாழ்க்கையைப் பாடுவதாக அமைந்தாலும், காப்பியத்தின் சில காதைகளில் விவிலியச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. ௧௮௬௬ ஆம் ஆண்டு இலங்கையைச் சார்ந்த கனகசபை என்பவர் திருவாக்குப் புராணம் என்னும் காப்பியத்தை எழுதினார். இக்காப்பியத்தின் முதல் பாகம் மட்டுமே வெளிவந்துள்ளது. இரண்டாம் பாகம் வெளிவரும் என முதல் பாகத்தின் முடிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இரண்டாம் பாகம் வெளிவரவில்லை. எனவே இது ஒரு முற்றுப் பெறாத காப்பியமாகவே உள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள தெல்லிப்பழையைச் சார்ந்த தொம் பிலிப்பு நாவலர் என்பவர் ௧௮௭௪ இல் ஞானானந்த புராணம் என்னும் காப்பியத்தை இயற்றினார். இக்காப்பியம் கிறித்தவ சமயத்தின் விளக்க நூலாக உள்ளது. இக்காப்பியத்திற்கு விசுவாச விளக்கம் என்னும் பிறிதொரு பெயரும் உண்டு.

கேரளாவிலுள்ள பாலக்காடு மாவட்டத்திலுள்ள அந்தோனிமுத்து ௧௮௭௭ ஆம் ஆண்டு அர்ச். சவேரியார் காவியத்தைப் படைத்தார். இக்காப்பியம் இந்தியாவிற்கு வந்து கோவா மற்றும் கன்னியாகுமரிப் பகுதிகளில் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் புரிந்த புனித சவேரியாரின் பணிகளை விளக்கும் வகையில் இக்காப்பியம் அமைந்துள்ளது. ஜான் மில்டனின் Pஅரதிஸெ ளொஸ்த் என்னும் ஆங்கிலக் காப்பியத்தின் முதலிரு பகுதிகளையும் ௧௮௮௭ ஆம் ஆண்டு பூங்காவனப் பிரளயம் என்னும் பெயரில் சாமுவேல் வேதநாயகம் தாமஸ் மொழிபெயர்த்து வெளியிட்டார். கிறித்தவக் காப்பியங்களில் இது ஒன்றே மொழிபெயர்ப்புக் காப்பியமாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்தவ இறைத்தொண்டர்கள் பலர் தமிழகத்தில் இறைப்பணியும் சமூகப்பணியும் கல்விப்பணியும் ஒருங்கேயாற்றி வந்தனர். குறிப்பாக, தரங்கம்பாடியில் செர்மன் நாட்டைச் சேர்ந்த இறைத் தொண்டர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அருள்திரு. ஸ்தொஷ் என்பவராவார். இவர் கிறிஸ்து மான்மியம் என்னும் காப்பியத்தை ௧௮௯௧ ஆம் ஆண்டு இயற்றினார். இக்காப்பியம் நான்கு நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டதாகும்.

இதைத் தொடர்ந்து கிறித்தவக் கம்பன் என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை அவர்கள் இரட்சணிய யாத்திரிகம் என்னும் முற்றுருவகக் காப்பியத்தை ௧௮௯௪ ஆம் ஆண்டு படைத்தார். இக்காப்பியம் ஜான் பனியனின் பில்கிரிம்ஸ் புராகிரஸ் என்னும் நூலைத் தழுவி இயற்றப்பட்டதாகும். இரட்சணிய யாத்திரிகமும் தேம்பாவணியும் கிறித்தவக் காப்பியங்களின் இரு கண்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மதுரையில் இறைத்தொண்டு புரிந்து வந்த அமெரிக்க மிஷனெரி அருள்திரு. ஸ்காட் என்னும் பெயரையுடைய சுகாத்தியர் ௧௮௯௬ ஆம் ஆண்டு சுவிசேட புராணம் என்னும் காப்பியத்தை எழுதினார். இக்காப்பியம் நான்கு நற்செய்தி நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அயல்நாட்டவர்கள் மூவர் (வீரமாமுனிவர், ஸ்தொஷ், சுகாத்தியர்) தமிழில் கிறித்தவக் காப்பியங்கள் படைத்துள்ளமை கிறித்தவக் காப்பிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பழையைச் சார்ந்த பூலோகசிங்க அருளப்ப நாவலர் ௧௮௯௬ ஆம் ஆண்டு திருச்செல்வர் காவியத்தைப் படைத்தார். இது ஒரு தழுவல் காப்பியமாகும். இக்காப்பியத்தின் சில படலங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவரது அருளுரை, அவர் செய்த அற்புதங்கள், பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய செய்திகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. திருச்செல்வரின் கதையைக் கூறினாலும் விவிலியச் செய்திகள் கிளைக்கதை போன்று இடம் பெற்றுள்ளன.

இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவக் காப்பியங்கள்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிறித்தவக் காப்பியங்கள் வெளிவரவில்லை. ௧௯௪௪ ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டோனாவூரின் அருகிலுள்ள சூரங்குடியைச் சார்ந்த மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் அவர்கள் திருஅவதாரம் என்னும் காப்பியத்தையும் ௧௯௫0 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஞானாபரணம் பண்டிதர் இரட்சகராகிய இயேசு நாதர் என்னும் காப்பியத்தையும் படைத்துள்ளனர். இலங்கையிலுள்ள ஜே.எஸ். ஆழ்வார் பிள்ளை என்பவர் ௧௯௫0 களில் நசரேய புராணம் என்னும் காப்பியத்தைப் படைத்துள்ளார். இவரது நூலில் காப்பியம் எழுதப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை. எனினும் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ௧௯௫0 களில் இக்காப்பியத்தை எழுதியிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. ௧௯௭௬ ஆம் ஆண்டு விழுப்புரத்தைச் சார்ந்த ஆரோக்கியசாமி என்பவர் சுடர்மணி என்னும் காப்பியத்தையும், ௧௯௮௧ ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் இயேசு காவியம் என்னும் நூலையும் எழுதினார்கள். இவ்விரண்டு காப்பியங்களும் கத்தோலிக்கத் திருமறையை அடிப்படையாகக் கொண்டவையாகும். விவிலியம் முழுவதையும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த பேராசிரியர் வி. மரிய அந்தோனி அவர்கள் அருளவதாரம் என்னும் பெயரில் ௧௯௮௩ ஆம் ஆண்டு காப்பியமாகப் படைத்துள்ளார். இக்காப்பியம் விவிலியத்தின் சுருக்கமாகக் காணப்படுகிறது. இக்காப்பியம் கத்தோலிக்கத் திருச்சபையினர் பயன்படுத்தும் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டது. இக்காப்பியம் ௨00௬ ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்தது.

௧௯௮௬ ஆம் ஆண்டு பேராசிரியர் பவுல் இராமகிருட்டிணன் மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியத்தைப் படைத்துள்ளார். இக்காப்பியம் ௨0௧௧ ஆம் ஆண்டில் நூலாக வெளிவந்துள்ளது. இலங்கையிலுள்ள ஈழத்துப் பூராடனார் என்னும் கவிஞர் விவிலியம் முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு இயேசு புராணம் என்னும் காப்பியத்தை ௧௯௮௬ ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இக்காப்பியம் விவிலியத்தின் பாகு எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலுள்ள எஸ்தர் என்னும் பெண்மணியை காப்பியத் தலைவியாகக் கொண்டு ௧௯௮௬ ஆம் ஆண்டு எஸ்தர் காவியம் உதகமண்டலத்தைச் சார்ந்த இராபின்சன் குரூசோ அவர்களால் படைக்கப்பட்டது. எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஜான்பனியனின் நூலை ஆதாரமாகக் கொண்டு இரட்சணிய யாத்திரிகத்தைப் படைத்தது போன்று மோட்சப் பயணக் காவியம் என்னும் நூலை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஏ.த. சோதி நாயகம் ௧௯௯௧ இல் எழுதினார். இதைத் தொடர்ந்து பாண்டிச்சேரியைச் சார்ந்த துரை. மாலிறையன் என்பவர் ௧௯௯௬ ஆம் ஆண்டில் அன்னை தெரேசா காவியத்தையும், ௧௯௯௮ ஆம் ஆண்டில் அருள்நிறை மரியம்மைக் காவியத்தையும் படைத்துள்ளார். ௧௯௯௯ ஆம் ஆண்டு பா. மதலை முத்து என்பவர் அருட் காவியத்தை இயற்றியுள்ளார். அருட் காவியம் நற்செய்தி நூல்களை ஆதாரமாகக் கொண்டதாகும்.

இருபத்தோராம் நூற்றாண்டுக் கிறித்தவக் காப்பியங்கள்

மரபிலக்கண அடிப்படையில் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் கிறித்தவக் காப்பியங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இருபத்தோராம் நூற்றாண்டில் வெளிவந்த காப்பியங்களான லோட்டஸ் எடிசன் அவர்களால் எழுதப்பட்ட மீட்பரசி (௨00௨), ம. யோவேல் அவர்களால் எழுதப்பட்ட பவுலடியார் பாவியம் (௨00௩), பேராசிரியர் இறையரசன் அவர்களால் எழுதப்பட்ட உலக ஜோதி (௨00௫), முதுமுனைவர் சூ. இன்னாசி அவர்களால் எழுதப்பட்ட திருத்தொண்டர் காப்பியம் (௨00௭), முனைவர் ச. சாமிமுத்து அவர்களால் எழுதப்பட்ட ஆதியாகம காவியம்(௨00௮) ஆகிய ஐந்தும் சிறப்புமிக்கன. இந்த ஐந்து காப்பியங்களும் வெவ்வேறு தன்மையின, கருப்பொருளின. புரட்சிப் பெண்ணாக விளங்கிய யூதித்துவின் வரலாற்றை மீட்பரசி என்னும் காப்பியம் எடுத்துரைக்கின்றது. இயேசு கிறிஸ்துவின் அடியவரான பவுலின் முழு வரலாற்றையும் பவுலடியார் பாவியம் விவரிக்கிறது. விவிலியத்திலுள்ள பழைய, புதிய ஏற்பாட்டுச் செய்திகளை உலக ஜோதி விளக்குகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் பாடுகள் பலபட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நீலகண்ட பிள்ளை என்னும் தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றைக் கூறுவதாகத் திருத்தொண்டர் காப்பியம் அமைந்துள்ளது. இவரது வரலாறு மக்களிடம் கதை வடிவிலும் கும்மி, சிந்து, அம்மானை, வாசகப்பா, தெருக்கூத்து என்னும் பல வடிவங்களிலும் காணப்பட்டு, இறுதியில் காப்பிய வடிவினைப் பெற்றுள்ளது. நாட்டுப்புறப் பாடலாக இருந்த கோவலன் கண்ணகி கதை, சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக மாறியதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். விவிலியச் செய்திகள் இக்காப்பியத்தில் கிளைக்கதைகளாக இடம்பெற்றுள்ளன. விவிலியத்திலுள்ள முதல் நூலான ஆதியாகமத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விரிவாக எழுதப்பட்டது ஆதியாகம காவியமாகும்.

இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள ௩0 காப்பியங்களின் பெயர்கள் பலதிறப்பட்டன. பன்னிரெண்டு காப்பியங்களின் பெயர்கள் பொதுவானவையாக உள்ளன. இவற்றுடன் காப்பியம் என்றோ அல்லது புராணம் என்றோ இணைக்கப்படவில்லை. மேலும் காவியம் என்னும் பெயரில் ஒன்பது நூல்களும் காப்பியம் என்னும் பெயரில் இரண்டு நூல்களும் பாவியம் என்னும் பெயரில் ஒரு நூலும் புராணம் என்னும் பெயரில் ஆறு நூல்களும் வெளிவந்துள்ளன. இவற்றுள் இலங்கையிலிருந்து வெளிவந்த காப்பியங்களின் எண்ணிக்கை ஆறு ஆகும். இவ்வாறில் ஐந்து நூல்கள் புராணம் என்றும் ஒரு நூல் காவியம் என்றும் பெயரிடப்பட்டுள்ளன.

தேவஅருள் வேதபுராணம் காப்பியமா?

இலங்கையில் வெளிவந்த கிறித்தவ இலக்கியம் தேவஅருள் வேதபுராணம் எனப்படுகிறது. இதன் ஆசிரியர் ௧௭ ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சாங்கோபாங்கர் கொன்சலாஸ் சுவாமிகள் (௧௬௭௬-௧௭௪௨) ஆவார். இவரது இன்னொரு பெயர் யாக்கோமே கொன்சலாஸ் சுவாமிகள் என்பதாகும். இவர் ௧௬௭௬ ஆம் ஆண்டு ஆனி மாதம் எட்டாம் நாள் இந்தியாவிலுள்ள கோவா மாநிலத்திலுள்ள திவாரி என்னும் ஊரில் கொங்கணி மொழி பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பிலேயே கத்தோலிக்கக் கிறித்தவராவார். கோவாவில் இறையியல் பட்டம் பெற்ற பின்னர் அழைப்பின் பேரில் இவருடன் மூன்று பேர்களும் சேர்ந்து இலங்கைக்கு இறைப்பணியாற்றச் சென்றனர். இவர் தமிழ் மொழியைக் கற்று கிறித்தவ நூல்கள் பல படைத்து இலங்கையில் ௨௭ ஆண்டு காலம் இறைப்பணியாற்றினார். இலங்கையில் ‘வியத்தகு விண்மீன்’ எனப் புகழப் பெற்றவர்.

சாங்கோபாங்கர் கொன்சலால் சுவாமிகளின் படைப்புகள் இலங்கையிலுள்ள கத்தோலிக்கக் கிறித்தவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. இவர் சுவிசேச விரித்துரைகள், சுகிர்த குறள், அற்புத வரலாறு, வியாகுலப் பிரசங்கம், தேவஅருள் வேதபுராணம், தர்ம உத்தியானம், ஞான உணர்த்துதல் என தமிழிலும் சிங்களத்திலுமாக சுமார் ௩௫ நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் தமிழ்-சிங்கள அகராதியும், போர்த்துக்கீஸ்- சிங்கள அகராதியும் தொகுத்துள்ளார். கொன்சாலஸ் சுவாமிகள் எழுதிய பழைய, புதிய ஏற்பாட்டுச் சரித்திரம் என்னும் நூலே தேவஅருள் வேதபுராணம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் ௧௭௨௫ ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

தேவஅருள் வேதபுராணம் இரண்டு காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை புராந்திம காண்டம், பச்சிம காண்டம் என்பனவாகும். புராந்திம காண்டம் ஏழு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை அனாதி யுகம், ஆதாமின் யுகம், நோவேயின் யுகம், ஆபிரகாமின் யுகம், மோயீசனின் யுகம், சாலமோனின் யுகம், திவ்ய சிருஷ்டிகரின் யுகம் என்பனவாகும். தேவஅருள் வேதபுராணமானது சருவேஸ்வராய நம எனத் தொடங்குகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளின் மகிமையை அறிவிப்பதுடன் தொடங்கி, கடவுள் ஒருவரே என நிரூபிக்கின்றது. இரண்டாம் அதிகாரம் கடவுளின் ஆறு இலட்சணங்களை விவரிக்கின்றது. அந்த அதிகாரத்தின் முடிவில் அது ஸ்தோத்திர விண்ணப்பமாக அமைந்துள்ளது.

கொன்சாலஸ் சுவாமிகள் இப்புராணத்தை சிங்கள மொழியில் தேவ வேத புராணய என்னும் பெயரில் எழுதியுள்ளார். வீரமாமுனிவர் தேம்பாவணியை எழுதி முடிப்பதற்கும் ஓர் ஆண்டிற்கு முன்னர் தேவஅருள் வேத புராணத்தை அடிகளார் எழுதியுள்ளார். சிலர் தேவஅருள் வேதபுராணத்தைக் காப்பியமாகக் கூறுகின்றனர். ஆனால் இப்புராணம் உரைநடையில் எழுதப்பட்டதாக இலங்கையிலுள்ள தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மட்டுமன்றி இலங்கையிலிருந்து படைக்கப்பட்டுள்ள கிறித்தவ இலக்கியம் தொடர்பான நூல்கள் தேவஅருள் வேதபுராணத்தைக் காப்பியமாகவோ, செய்யுள் நடையில் எழுதப்பட்ட ஒன்றாகவோ குறிப்பிடவில்லை. மேலும் சூ. இன்னாசி அவர்கள் தமது கிறித்தவத் தமிழ்க் கொடை என்னும் நூலின் முதல் பாகத்தில் (ப. ௭௭ & ௧௪௩) தேவஅருள் வேதபுராணம் உரைநடையில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராம்போலா மாஸ்கரேனஸ் அவர்களும் தமது கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள் என்னும் நூலில் தேவ அருள் வேத புராணத்தை வசன நடையிலுள்ள நூலாகவே குறிப்பிடுகிறார் (ப.௭௮). எனவே தேவஅருள் வேத புராணத்தைக் காப்பியமாகக் கொள்ள இயலாது.

காப்பிய இலக்கணம் முழுமையின்மை

பெரும்பாலான கிறித்தவக் காப்பியங்களில் காப்பிய இலக்கணம் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். கிறித்தவக் காப்பியங்கள் படைத்த அனைவருக்கும் காப்பியங்கள் பற்றிய இலக்கணம் தெரிந்திருந்தும், அவர்கள் காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றவில்லை. தேம்பாவணி, ஞானாதிக்கராயர் காப்பியம், அர்ச். சவேரியார் காவியம், இரட்சணிய யாத்திரிகம், திருத்தொண்டர் காப்பியம் என்னும் காப்பியங்களில் காப்பிய இலக்கணத்தைக் காணலாம்.

தமிழ்ப் பேரகராதி, காப்பியம் என்பதற்கு “நால்வகை உறுதிப் பொருளையும் கூறுவதாய்க் கதைப் பற்றி வரும் தொடர்நிலைச் செய்யுள்” என விளக்கம் தருகிறது. நாற்பொருள் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அதாவது நாற்பொருள் பயக்கும் நடைநெறி உடையதாக இருத்தல் வேண்டும். இவற்றுள் ஒன்றோ பலவோ குறைந்தால் அது சிறு காப்பியம் ஆகும் என்பது தண்டியலங்காரம் குறிப்பிடும் காப்பிய இலக்கணமாகும். கிறித்தவக் காப்பியங்களில் வீடுபேறு அடைதலே அடிப்படையான நோக்கம். அறம், பொருள் என்னும் இரண்டும் இயல்பாகவே இக்காப்பியங்களில் அமைந்துள்ளன. இன்பம் என்னும் பொருளினைப் பேரின்பப் பொருளாகவே காப்பியங்களில் காணமுடிகின்றது. காப்பியக் கவிஞனின் நோக்கம் பேரின்பமாகிய வீடுபேற்றினைக் காப்பியத்தின் மூலம் அடைதலாகும்.

காப்பியத்திற்குரிய இலக்கண முறைமைகளை முழுமையாகப் பின்பற்றாமல், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விவிலியப் பின்னணியில் கவிநயம்படக் காப்பிய வடிவில் பாடியுள்ளனர். இதன் மூலம் இலக்கியத்திற்காக உவமை, உருவகம், பிற அணிகள் முதலிய அழகியல் கூறுகளை வலிந்து உருவாக்காமல் விவிலியத்தின் போக்கில் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றையும், அதன் ஊடாக நற்செய்தியைக் கூறுவதையுமே காப்பிய ஆசிரியர்கள் தங்களது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை உணரமுடிகிறது. கவிதையின் அழகுக்காகக் கவிஞர்கள் பயன்படுத்தும் அணிகள், காப்பியப் பின்னணியாகிய நாடு, நகர், மலை, ஆறு, ஞாயிறு, திங்கள் ஆகியவற்றின் வருணனைகள் முதலியவற்றை ஆன்ம ஈடேற்றங் கருதி எழுதிய தம் நூலில் ஆசிரியர்கள் படைக்கவில்லை. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் எழுதிய நான்கு நற்செய்தி நூல்களிலுள்ள நிகழ்வுகளைக் கோவைப்படுத்தி, திருமறை வாக்குகளின் பின்னணியில் எளிமையான கவிதைகளாக்கி நூலைப் படைத்துள்ளனர்.

காப்பியம் – காவியம் – புராணம் – பாவியம்

காப்பியம், காவியம் என்னும் இரு சொற்களும் கதை தழுவிய இலக்கிய வகைமைக்குப் பெயராக வழங்குகின்றன. இவற்றுள் காவியம் என்னும் சொல் காவிய என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் என்பர். வடமொழியில் இலக்கியம் என்னும் பொதுப்பொருளில் ஆளப்படும் இச்சொல் தமிழில் இலக்கிய வகைமை ஒன்றிற்கு மட்டும் உரியதாக வழங்குகின்றது.
காப்பியம் என்னும் சொல் தொடக்கத்தில் இனக்குழு ஒன்றின் பெயராக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. காப்பியம் என்னும் சொல் சிலப்பதிகாரத்தில் “காப்பியத் தொல்குடி கவின்பெற வளர்ந்து” (௩0:௮௩) எனவும், மணிமேகலையில் “நாடகக் காப்பிய நன்னூ னுனிப்போர்” (௧௯:௮0) எனவும், பெருங்கதை “காப்பியக் கோசமுங் கட்டிலும் பள்ளியும்” (௧-௩௮; ௧௬௭), எனவும், “காப்பிய வாசனை கலந்தவை சொல்லி” (௪-௩:௪௨) எனவும் இடம்பெற்றுள்ளது. காப்பிய குடி என வழங்கிய அக்குடி சார்ந்த பிறப்பினர் காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார், தொல்காப்பியர் எனப் பெயர் வழங்கப் பெற்றனர். தொல்காப்பியர் இயற்றிய இலக்கண நூல் தொல்காப்பியம் எனப் பெயர் பெற்ற பின்னர், அச்சொல் இலக்கிய நூல்களுக்கும் உரியதாகத் தமிழில் வளர்ந்து வந்த மரபை அறிய முடிகிறது.

காவியம் என்னும் சொல் வடமொழிச் செல்வாக்குத் தமிழில் பெருமளவு சேர்ந்த காலத்திலேயே இச்சொல் இலக்கிய வகைமைக்கு தமிழில் ஆகி வந்திருத்தல் வேண்டும். ஏனெனில் சங்க மருவிய காலப்பகுதியில் தொடர்நிலைச் செய்யுள், பாட்டுடைச் செய்யுள் ஆகிய வழக்குகளே கதை தழுவிய இலக்கிய வகைமைக்குப் பெரிதும் வழங்கியதை சிலம்பு, மேகலை ஆகிய நூல்கள் காட்டுகின்றன.

வடமொழியிலுள்ள காவ்யதர்சத்தின் தமிழாக்கமாகக் கருதப்படும் தண்டியலங்காரமே காப்பியக் கூறுகளை முதலில் வரையறுத்துக் கூறியது. தண்டியின் அணியிலக்கண நூல் தமிழில் பெருவழக்குற்ற பின்னரே, இவ்வகை இலக்கியப் படைப்பிற்கு கட்டமைப்பு முறை உருப்பெற்று இடைக்காலக் காப்பியங்கள் உருவாயின. பெரியபுராணம் இவ்வமைதிக்குள் இல்லாத நிலையாலேயே அது காவியமா? என்பது குறித்த மாறுபட்ட கருத்துகளும் எழுந்துள்ளன.

ஆகவே காப்பியம் என்ற தமிழ்ச் சொல் தொடக்கத்தில் குடியின் பெயராக விளங்கி, இலக்கிய வகைமைக்குப் பெயராய் பிற்காலத்தில் ஆயிற்று என்பதையும், வடமொழிச் சொல்லான காவியம் தமிழில் ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்கு மட்டும் ஆகி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
காப்பியம் என்னும் தமிழ்ச்சொல், காவ்யம் என்னும் வடமொழிச்சொல், காப்பியம் எனப் பொருள் தரும் ஏபிச் என்னும் ஆங்கிலச் சொல் ஆகியன ஒரே பொருளைக் குறிப்பனவாகும். காப்பியம் என்பது தூய தமிழ்ச் சொல்லாகும். தொடர்நிலைச் செய்யுள் வடிவத்தில் ஒரு வரலாற்றை முழுமையாகக் கூறுவனவற்றை காப்பியம் அல்லது காவியம் அல்லது புராணம் அல்லது பாவியம் எனக் குறிப்பிடுகின்றனர். காப்பியம், காவியம், புராணம், பாவியம் ஆகிய அனைத்தும் ஒரே தன்மையின. ஆனால் பெயர்கள் வேறு வேறாக உள்ளன. இவற்றைத் தற்காலத்தில் ஒன்றாகவே கருதுகின்றனர்.

பல்லவர் காலத்திற்குப் பின்னர் காப்பியத்திற்கான கட்டமைப்பு கூறப்படுகிறது. இலக்கணத்தைத் தழுவி ஐம்பெருங்காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் பகுக்கப்படுகிறது. ஏதாவது ஒன்று குறைவுபட்டால் ஐஞ்சிறு காப்பியம் என்கின்றனர். மேலும் அளவில் சிறியதையும் சிறுகாப்பியம் என்கின்றனர். புராணம் என்பதற்கு பழைய, தொன்மையான என்பது பொருளாகும். அதாவது விரிவான கதை என்பதாகும். திருத்தொண்டர் புராணம் எனச் சேக்கிழார் பெயர் சூட்டினார். இப்புராணத்தில் சுந்தரர் காப்பியத் தலைவர். அவர் கதையைச் சொல்லி பிறருடைய கதையையும் சொல்வதால் பெரியபுராணத்தைக் காப்பியம் என்பர். காவியம் தமிழ்ச் சொல் அல்ல என்பதால் பாவியம் எனக் காப்பியத்தைக் குறித்தனர். பாவியம் என்பது தமிழ்ப் பெயர். பாவால் அதாவது செய்யுளால் இயம்பப்படும் கதை பாவியம் எனப்படும்.

முதுமுனைவர் இன்னாசி அவர்கள் தமது கிறித்தவத் தமிழ்க் கொடை என்னும் நூலில் (பக். ௧0௯, ௧௩௩, ௧௪0, ௧௪௪) காப்பியம் என்பதற்கு இலக்கணக் கட்டுக் கோப்புடைய கதைக்கருக் கொண்ட தொடர்நிலைச் செய்யுள் என்றும், காவியம் என்பதற்கு ஒரு கதையைச் செய்யுள் வடிவில் கூறுவது என்றும் புராணம் என்பதற்கு சமயத் தொடர்பான வரலாறுகளைச் செய்யுளில் விரித்துக் கூறுவது என்றும் பாவியம் என்பதற்கு வாழ்வியலைக் கூறும் செய்யுள் நூல் என்றும் விளக்கம் அளிக்கிறார். இவ்விளக்கங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது தொடர்நிலைச் செய்யுளின் அடிப்படையில் விவரிக்கப்படும் கதைகளைக் காப்பியம் அல்லது காவியம் அல்லது புராணம் அல்லது பாவியம் எனலாம்.

கிறித்தவ இலக்கியங்களில் காப்பியம், காவியம், புராணம், பாவியம் என்னும் பெயர்களுடனும் இப்பெயர்கள் இல்லாமலும் கிறித்தவக் காப்பிய இலக்கிய வகை காணப்படுகிறது.

குறுங்காப்பியங்கள்

கிறித்தவ இலக்கியத்தில் ஏராளமான குறுங்காப்பியங்கள் உள்ளன. இக்குறுங்காப்பியங்களும் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்பட்டுள்ளன. எனினும் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் காப்பிய அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு குறுங்காப்பியம் என்னும் வகையினை ஏற்படுத்தியுள்ளனர். சான்றாகச் சில கிறித்தவ குறுங்காப்பியங்களை இங்கே சுட்டலாம். ௧௮௮௩ ஆம் ஆண்டில் சீவானந்தம் பிள்ளை அவர்கள் யோசேப்பின் சரிதை என்னும் குறுங்காப்பியத்தைச் சென்னையில் வெளியிட்டுள்ளார். இந்நூல் யோசேப்பின் வரலாற்றை ௨௮௫ பாடல்களில் விவரிக்கிறது. ௧௯௨௬ ஆம் ஆண்டு தவயோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் இயேசு நாதர் சரிதை என்னும் குறுங்காப்பியத்தைப் படைத்துள்ளார். இக்காப்பியம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை காப்பு, வணக்கம், ஏசுநாதர் பெருமை, மரியாள் மாண்பு, ஏசுநாதர் பிறப்பு, முனிவர் மூவர், கொடிய ஏரோது உள்ளிட்ட ௨௫ தலைப்புகளில் விவரிக்கின்றது. இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ௧௫0 ஆகும். எஸ். மோட்சக்கண் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சிலுவைநாதர் திருச்சரிதம் என்னும் நூலில் விவரித்துள்ளார். ச.து. சுப்பிரமணிய யோகி என்பவர் மேரிமக்தலேனா என்னும் குறுங்காப்பியத்தைப் படைத்துள்ளார். விவிலியத்தில் இடம்பெற்றுள்ள மகதலேனா மரியாளின் வாழ்வு நிகழ்வுகளை இக்குறுங்காப்பியம் விளக்குகிறது. இந்நூல் காட்சிப் படலம், வருகைப் படலம் என்னும் இரு படலங்களால் ஆனது. காட்சிப் படலத்தில் ௫௮ பாடல்களும் வருகைப் படலத்தில் ௫௪ பாடல்களுமாக மொத்தம் ௧௧௨ பாடல்களைக் கொண்டது.

௧௯௭௬ ஆம் ஆண்டு வை.அ. பொன்னையா அவர்கள் யோபுவின் வரலாற்றை விவரிக்கும் சூறாவளி நடுவே என்னும் குறுங்காப்பியத்தைப் படைத்துள்ளார். இந்நூல் ஐந்து பகுதிகளையும் ௪௨ உட்தலைப்புகளையும் உடையதாக உள்ளது. இந்நூல் சென்னை ஐக்கிய ஆலய வெளியீடாக வெளிவந்தது. ௧௯௭௯ ஆம் ஆண்டு வெளிவந்த குறுங்காப்பியம் கிறிஸ்து வெண்பா என்பதாகும். இக்குறுங்காப்பியத்தை கி.மு.ம. மரியந்தோனி நாடார் படைத்துள்ளார். இந்நூல் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை ௧000 வெண்பாக்களில் விவரிக்கின்றது. அருள்திரு. முனைவர் தி. தயானந்தன் பிரான்சிஸ் அவர்கள் ௧௯௮௧ ஆம் ஆண்டு யோவான் எழுதிய நற்செய்தி நூலை ஆதாரமாகக் கொண்டு வாழ்வளிக்கும் வள்ளல் என்னும் குறுங்காப்பியத்தைப் படைத்துள்ளார். ௧௯௮௩ ஆம் ஆண்டு அ. ஜெபமணி அவர்கள் புரட்சித் துறவி மார்ட்டின் லுத்தர் என்னும் குறுங்காப்பியத்தைப் படைத்துள்ளார். இந்நூல் மார்ட்டின் லுத்தரின் வாழ்வியலை ஆறு பகுதிகளில் விளக்குகிறது. இந்நூல் ஆற்காடு லுத்தரன் திருச்சபைத் தொடர்பு மையத்தின் மூலம் வெளியிடப்பட்டது. ௧௯௮௫ ஆம் ஆண்டு கவிஞர் கார்முகில் என்பவர் சிலுவையின் கண்ணீர் என்னும் குறுங்காப்பியத்தை பண்ணுருட்டியிலுள்ள முத்தமிழ்ப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ௧௯௮௬ ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகக் கிறித்தவ மூன்றாவது தமிழ் மாநாட்டில் திருமதி அன்பம்மாள் ஏசுதாஸ் எழுதிய மகிமையின் மைந்தன் என்னும் குறுங்காப்பியம் வெளியிடப்பட்டது. ௧௭௯ பக்கங்களாலான இந்நூல் இரண்டு பாகங்களால் ஆனது. இந்நூலின் முதலாம் பாகம் உலகத்தின் தோற்றம் முதல் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு வயது வரையிலான நிகழ்வுகளைக் கூறுகிறது. இந்நூலின் இரண்டாம் பாகம் இயேசு கிறிஸ்து பரலோகம் சென்றது வரையிலான நிகழ்வுகளை விவரிக்கின்றது.

௧௯௮௭ ஆம் ஆண்டு த. பத்திநாதன் அவர்கள் கன்னிமரி காவியம் என்னும் நூலை வெளியிட்டார். இக்குறுங்காப்பியம் கன்னிமரியின் வரலாற்றை ௨௭ தலைப்புகளில் விவரிக்கின்றது. ௧௯௯௧ ஆம் ஆண்டு பேராசிரியர் அ. இயேசுராஜா என்பவரால் கல்வாரிக் காவியம் இயற்றப்பட்டது. கல்வாரிக் காவியம் ௧௧௨ பாடல்களைக் கொண்டது. இந்நூல் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதையைப் பாடுவதனை முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பினும், அறிமுகநோக்கில் பல இடங்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வையும் எடுத்தியம்புகின்றது. பிள்ளை வெண்பா என்னும் தெய்வ சகாயன் திருச்சரிதை என்னும் நூலை தஞ்சாவூரைச் சார்ந்த புலவர் சூ. தாமஸ் படைத்துள்ளார். இக்குறுங்காப்பியம் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றைக் கூறுவதாகும். இந்நூல் மறைபெறு காண்டம், சூழ்வினை காண்டம், முடிபெறு காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் ௨௮௧ வெண்பாக்களையும் உடையது. ௧௯௯௭ ஆம் ஆண்டு எம்மார். அடைக்கலசாமி இயேசு தரிசனம் என்னும் குறுங்காப்பியத்தை இயற்றியுள்ளார். இக்குறுங்காப்பியம் மூன்று பிரிவுகளையும் ௨௩ உட்தலைப்புகளையும் கொண்டது.
௨000 ஆம் ஆண்டில் இராச. அருளானந்தம் நற்செய்திக் காவியம் என்னும் நூலைப் படைத்துள்ளார். இந்நூல் ௪௩ பகுதிகளை உடையது. ௨00௧ ஆம் ஆண்டு வெளிவந்த குறுங்காப்பியம் இதோ மானுடம் என்பதாகும். இந்நூலை புலவர் ம. அருள்சாமி எழுதியுள்ளார். இக்குறுங் காப்பியம் நான்கு நற்செயதி நூல்களின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை விவரிக்கின்றது. இந்நூல் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், முழங்கினார், போராடினார், வென்றார் என்னும் ஆறு பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவும் பல உட்பிரிவுகளைக் கொண்டது. இக்குறுங்காப்பியம் ௨௧௫ பாடல்களை உடையது. ௨00௨ ஆம் ஆண்டு பொன். தினகரன் அவர்கள் அருள் மைந்தன் மாகாதை என்னும் குறுங்காப்பியத்தை வெளியிட்டார். இக்குறுங்காப்பியம் திருப்பிறப்புக் காண்டம், அருட்பணிக் காண்டம், மீட்புக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களை உடையது. இதில் ௩௩௩ பாடல்கள் ௩0 உட்பிரிவுகளின் கீழ் இடம்பெற்றுள்ளன. இது போன்று இன்னும் ஏராளமான குறுங்காப்பியங்கள் உள்ளன. அவற்றினைப் பற்றிக் குறிப்பிட்டால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

புதுக்கவிதைக் காப்பியங்கள்

புதியன புகுதல் கிறித்தவ இலக்கியத்திலும் காணப்படுகின்றது. தற்கால இலக்கியத்தில் புதுக்கவிதைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. இப்புதுக்கவிதைகள் பல்வேறு உத்திகளைக் கொண்டு படைக்கப்பட்டாலும் படிப்பதற்கு மிகவும் எளிமையானவைகளாகக் காணப்படுகின்றன. கிறித்தவ இலக்கியத்தில் பல புதுக்கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. இப்புதுக்கவிதைகள் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை விவரிப்பதைக் காட்டிலும் சிலுவையின் சிறப்பு மற்றும் கிறித்தவச் சமுதாயத்தில் காணலாகும் சீர்கேடுகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லனவாகத் திகழ்கின்றன. புதுக்கவிதை வடிவத்தில் கிறித்தவக் காப்பியங்கள் என்று சொல்லும் வகையில் அன்ன பூரண மேரியின் விவிலியக் கவிதைகள், நிர்மலா சுரேஷின் இயேசு மாகாவியம், அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரையின் புதிய சாசனம், சேவியரின் இயேசுவின் கதை என்னும் நூல்களைக் குறிப்பிடலாம்.

௧௯௯௩ ஆம் ஆண்டு அன்ன பூரண மேரியால் எழுதப்பட்டு விண்ணேற்ற ஆண்டவர் ஆலய வெளியீடாக வெளிவந்துள்ள காப்பியம் விவிலியக் கவிதைகள் என்பதாகும். இந்நூல் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்னும் இரு பகுதிகளை உடையது. பழைய ஏற்பாடு என்னும் பகுதியில் ௪௬ உட்தலைப்புகளில் பழைய ஏற்பாட்டுச் செய்திகளையும் புதிய ஏற்பாடு பகுதியில் எட்டு உட்தலைப்புகளில் புதிய ஏற்பாடு செய்திகளையும் இக்காப்பியம் விவரிக்கிறது. இயேசு மாகாவியம் சென்னையிலுள்ள இதயம் பதிப்பகத்தின் மூலம் ௨00௧ ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் வரலாற்றையும் அவரது ஊழியங்களையும் ௧௪௪ தலைப்புகளில் ஆசிரியர் பாடியுள்ளார். புதிய சாசனம் ௨00௨ ஆம் ஆண்டில் வெளியானது. இந்நூலில் பத்து இயல்களில் ௧௨௨ பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் செக்கரியாவுக்கு வானதூதர் வாக்களித்தது முதல் இயேசு கிறிஸ்து பரலோகம் சென்றது வரையிலான செய்திகள் இடம்பெற்றுள்ளன. ௨00௫ ஆம் ஆண்டு யாளி பதிவு வெளியீட்டின் மூலம் வெளிவந்த இயேசுவின் கதை என்னும் காவியம் முந்நூற்று ஐம்பத்திரண்டு பக்கங்களில் புதுக்கவிதை வடிவில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்புகின்றது. இந்நூல் இளமை, போதனைகள், புதுமைகள், இறைமகனின் விளக்கங்கள், உவமைகள், சில நிகழ்வுகள், இறுதி நாளுக்கான எச்சரிக்கைகள், வேதனைக் காலம், உன்னதரின் உயிர்ப்பு, துவக்கத்தின் முடிவுரை என்னும் பத்துத் தலைப்புகளில் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இயேசு கிறிஸ்து யார் என்பதை அறியாத மக்களுக்காக அவரை எளிமையாக, அழுத்தமாக அறிய வைக்க வேண்டும் என்னும் நோக்கில் இந்நூல் படைக்கப்பட்டிருத்தல் சிறப்பிற்குரியது.

புதுக்கவிதைக் குறுங்காப்பியங்கள்

புதுக்கவிதை வடிவில் காப்பியங்களை விட குறுங்காப்பியங்களே அதிக அளவில் வெளிவந்துள்ளன. அவற்றில் சில நூல்கள் இங்கு சான்றாகத் தரப்படுகின்றன. ௧௯௯௬ ஆம் ஆண்டு வெளிவந்த குறுங்காப்பியம் மண்ணில் இருக்குது மோட்சம் என்பதாகும். இந்நூல் விவிலியம் முழுவதையும் உள்ளடக்கி, படைப்புத் தொடக்கமாக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வரையிலான செய்திகளைத் தருகிறது. ௧௯௯௮ ஆம் ஆண்டு அரக்கோணம் ஜெயக்கொடி பதிப்பகத்தின் மூலம் கண்ணாடிச் சிதறல்கள் என்னும் குறுங்காப்பியம் வெளிவந்தது. இக்குறுங் காப்பியம் ௧௨௩ பக்கங்களையும் ௩௭ பிரிவுகளையும் கொண்டது. விவிலியத்தில் காணலாகும் யோபுவின் வரலாற்றை இக்குறுங்காப்பியம் விவரிக்கிறது. ௨00௧ ஆம் ஆண்டு வெளிவந்த குறுங்காவியம் ஒரு சிங்கம் கர்ஜிக்கிறது என்பதாகும். இந்நூல் சகரியா – எலிசபெத் தம்பதியினருக்குப் பிறந்த யோவானைப் பற்றி விவரிக்கிறது. இம்மூன்று புதுக்கவிதை வடிவிலான குறுங்காப்பியங்களும் தே. சுவாமிநாதன் அவர்களால் படைக்கப்பட்டவையாகும். ௨00௯ ஆம் ஆண்டு கவிஞர் ஜோரா எழுதி வெளியிட்ட புனித பவுல் புதுக்காவியம் ௧௬ தலைப்புகளில் புனித பவுலின் வாழ்வை புதுக்கவிதை வடிவில் தருகிறது. மலேசியா நாட்டில் ௨0௧௧ ஆம் ஆண்டு ஏ.எஸ். பிரான்சிஸ் அவர்கள் விடியல் விண்மீன்-ரூத், மனதில் விழுந்த மழைத்துளி-எஸ்தர் என்னும் இரண்டு புதுக்கவிதைக் காப்பியங்களைப் படைத்துள்ளார்.

காப்பிய வளர்ச்சிக்கு இலங்கையினரின் பங்கு

கிறித்தவ இலக்கிய வளர்ச்சியில் இலங்கைக் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. காப்பியம், சிற்றிலக்கியம், கீர்த்தனைகள், நாடகம், புனைகதை, மொழிபெயர்ப்பு என அவர்களது இலக்கியப்பணி விரிவானது. வீரமாமுனிவர் தேம்பாவணி எழுதியதைத் தொடர்ந்து இலங்கையினர் கிறித்தவக் காப்பியங்கள் இயற்றத் தொடங்கினர். இலங்கையினரால் எழுதப்பட்ட கிறித்தவக் காப்பியங்களின் எண்ணிக்கை ஆறு ஆகும். இவற்றில் யோசேப்புப் புராணம் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. திருவாக்குப் புராணம் முழுமையடையாத கிறித்தவக் காப்பியம். திருச்செல்வர் காவியம், ஞானானந்த புராணம் ஆகிய காப்பியங்களில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகின்றன. திருச்செல்வர், ஞானானந்தன் ஆகியோரது வாழ்வினைக் கூறுமிடத்து, விவிலியச் செய்திகள் கிளைக்கதைகளாகவே இடம் பெற்றுள்ளன. நசரேய புராணம் பழைய, புதிய ஏற்பாட்டிலுள்ள செய்திகளைச் சுருங்கச் சொல்லுகிறது. இலங்கையிலிருந்து வெளிவந்த கிறித்தவக் காப்பியங்களுள் சிறப்பானது இயேசு புராணம் என்பதாகும். இக்காப்பியம் விவிலியம் முழுவதையும் காப்பிய வடிவில் விரிவாகத் தருகிறது. எனவே இக்காப்பியத்தை விவிலியத்தின் பாகு எனக் குறிப்பிடுகின்றனர்.

கிறித்தவக் காப்பியங்களின் மையப்பொருள்

கிறித்தவக் காப்பியங்கள் கடவுளின் வல்லமையையும் இறைமகனின் மேன்மையினையும் எடுத்தியம்புகின்றன. விவிலியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக மக்களின் கைகளில் கிடைத்த சூழலில் வீரமாமுனிவர் பலவகையான கிறித்தவ இலக்கியங்களை எழுதினார். சீகன்பால்கு மொழிபெயர்ப்பில் அதிக கவனம் செலுத்தியதால் அவரால் கிறித்தவ இலக்கியங்களைப் படைக்கமுடியவில்லை எனலாம். தேம்பாவணியைத் தொடர்ந்து காப்பியம் படைத்தவர்களில் பெரும்பாலானோர் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு காப்பியங்கள் படைத்ததால் காப்பிய இலக்கணத்திற்குரிய சில இலக்கணங்களைப் பின்பற்றவில்லை. இதை ஒரு குறையாகச் சுட்டமுடியாது. காரணம், வருணனை, உவமை போன்றவற்றைப் பயன்படுத்தும்போது ஆசிரியரின் நோக்கம் சிதைய வாய்ப்புள்ளது. மேலும் காப்பியத்தின் மையப்பொருள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படலாம். எனவே பெரும்பாலான கிறித்தவக் காப்பியங்களிலும் மையப்பொருள் இயேசு கிறிஸ்து. அவரே காப்பியத் தலைவராவார். இயேசு கிறிஸ்துவைக் காப்பியத் தலைவராகக் கொண்டிராத சில காப்பியங்களில் கிளைக்கதைகளாக இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை விவரிக்கப்படும்.

எவை கிறித்தவக் காப்பியங்கள்?

கிறித்தவக் காப்பியங்களின் பட்டியல் நீளமாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் கிறித்தவ இலக்கிய நூல்களில் பலவற்றை இதில் சேர்க்க இயலாது. மேலும் நூல்களைப் பார்க்காமலே கிறித்தவக் காப்பியங்கள் எனப் பட்டியலில் சேர்க்க முடியாது. இப்பட்டியலில் சேர்க்க வேண்டுமெனின் ஓரளவு காப்பியம் என்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாகக் காணப்படவேண்டும். உதாரணமாக இலங்கையில் படைக்கப்பட்ட தேவ அருள் வேத புராணம் உரைநடையில் எழுதப்பட்டது. அதைப்போன்று திலகவதி பால் எழுதி கிறித்தவ இலக்கிய சங்கத்தால் வெளிவந்த அறநெறிபாடிய வீரகாவியம் என்னும் நூல் உரைநடையில் எழுதப்பட்டதாகும். காவியம் எனப் பெயர் இருப்பதால் அது காவியமாகாது. ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் எழுதிய Pஅரதிஸெ ளொஸ்த், Pஅரதிஸெ றெக்ஐநெத் என்னும் நூல்களைத் தழுவி, அருள்திரு. வேதக்கண் என்பவர் ஆதிநந்தாவனப் பிரளயம், ஆதிநந்தாவன மீட்சி என்னும் கீர்த்தனை நாடகங்களாகத் தமிழில் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் காப்பியமாகா. எனவே தேவ அருள் வேதபுராணம், அறநெறிபாடிய வீர காவியம், ஆதிநந்தாவனப் பிரளயம், ஆதிநந்தாவன மீட்சி ஆகியனவற்றைக் கிறித்தவக் காப்பியங்களாக ஏற்றுக் கொள்ளவியலாது. இத்தகு பிழையான வகைப்பாடுகள், அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள சிலநூல்களில் இடம் பெற்றுள்ளதைத் தெளிவுக்காக இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதத் தொடங்கப்பட்ட கிறித்தவக் காப்பியங்கள் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வளர்ந்து வருவது கிறித்தவப் படைப்பாளர்களின் புலமைக்கும் இறைப்பற்றுக்கும் ஊழியவாஞ்சைக்கும் சிறந்த சான்றாகும். கிடைக்காத பழைய கிறித்தவக் காப்பியங்களைப் பதிப்பித்தல் கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். தேம்பாவணி பல அறிஞர்களின் உரையுடன் வெளிவந்துள்ளது. திருச்செல்வர் காவியம் இலங்கையில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. அதுபோன்று கிறிஸ்தாயனம் சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனத்தின் மூலம் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. கிறித்தவக் காப்பியங்கள் உரையுடன் வெளிவந்தால் காப்பியத்தின் நுட்பத்தினை படிப்பவர்களால் அறிந்து கொள்ள முடியும். தேம்பாவணி தொடங்கி ஆதியாகம காவியம் வரை வளர்ந்துள்ள கிறித்தவக் காப்பிய வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் போற்றுதலுக்குரியது.

Comments are closed.