இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால், அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்?” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
இறைவன் வரும் நாளை எதிர்நோக்க வல்லவர்களாக நாம் இருக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர்.” என செக்கரியாவைப் பற்றி வாசித்தோம்.
விசுவாசமின்மை ஆண்டவருக்கு சினத்தையும், அதனால் தண்டனையையும் வருவிக்கும் என்பதை உணர்ந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இந்த திருவருகைக் காலத்தில் நமது உணவு, உடைகளை இல்லாதவர்களோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இந்த திருவருகைக் காலத்தில் நமது பாவங்களுக்கு மனம் வருந்தி இறைவனின் இரக்கப் பெருக்கத்தை நாடி நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனத்தை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.