கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை கிறிஸ்து பிறப்பு விழா உணர்த்துகிறது

யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி
2021ஆம் ஆண்டின் கிறிஸ்து பிறப்பு பெருவிழா இன மத நிற மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் இவ்வேளை முதலில் பாலக இயேசுவின் அன்பும் அருளும் ஆசீரும் என்றும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக என வாழ்த்துகிறோம்
வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார் (யோவான் 1:1-14) என யோவான் நற்செய்தியாளர் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையைத் தெளிவு படுத்துகிறார். கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையை சிறப்பாக உணர்த்தும் காலம் கிறிஸ்து பிறப்பு விழா காலமாகும்.
கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையையும் கிறிஸ்து பிறப்பின் ஒளியையும் மகிழ்வையும் நம்பிக்கையையும் எமது எந்தத் துன்பமான அல்லது இக்கட்டான அனுபமும் எதுவும் என்றும் ஒருபோதும் குறைத்துவிட முடியாது.
நீங்கள் உங்கள் வீடுகளிலும் பொது இடங்களிவும் அமைக்கும் கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் குடிலும் அதனோடு இணைந்த கிறிஸ்மஸ் மரமும் சோடினைகளும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையான நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும்.
இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தை தாண்டிச் சென்று அவற்றின் வழியாக வெளிப்படுத்தப்படும் இறை இருப்பiயும் இறை அன்பை மனமகிழ்வையும் உங்கள் மனதுகளில் முழுவதுமாக உணர்ந்து இயன்றவரை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்றைய இக்கட்டான நிலையில் உங்களால் இயன்ற வரை இயலாமையில் வாடுவோர் – தேவையில் இருப்போர் – துன்பத்தை அனுபவிப்போர் – வைத்திய சாலையில் துன்பப்படுவோர் – சிறைச்சாலைகளில் வாடுவோர் போன்ற அனைவருக்கும் அன்புக்கரம் நீட்டுங்கள்.
இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்பதாகும் (லூக்காஸ் 2:13-14)
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்ற வார்த்தைகளை எமதாக்கி வாழ அழைப்பு விடுத்து இறையாசீருடன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்

Comments are closed.