இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.” என அன்னா கூறுவதை வாசித்தோம்.

வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் ஆண்டவருக்கு செலுத்த வேண்டிய நேர்ச்சைகளை நினைவுகூர்ந்து அவற்றை நாம் முழுமையாக நிறைவேற்றிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் எடுக்கப்பட்ட 1சாமு.2:7-ல், “ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றா; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்!” என கூறப்பட்டுள்ளது.

நம் வாழ்விலும், தாழ்விலும் எல்லாத் தருணத்திலும் நாம் இறைவனைத் துதிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இன்றைய நாள் முழுவதும் நமது சொல்லிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை வழிநடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தியில், “தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;” என அன்னை மரியாள் கூறியதை நாம் வாசித்தோம்.

ஏழைகள், நோயுற்றோர், துன்புறும் மக்கள், மன அழுத்தத்தில் இருப்போர் ஆகிய மக்களை ஆண்டவர் இத்திருவருகைக் காலத்தில் நலன்களால் நிரப்ப வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

நமது உள்ளத்திலும், இல்லத்திலும் பிறக்க இருக்கும் இயேசு பாலனை வரவேற்க இந்த திருவருகைக் காலத்தில் நம்மையே நாம் முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.