டிசம்பர் 23 : நற்செய்தி வாசகம்
திருமுழுக்கு யோவானின் பிறப்பு.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————-
“இக்குழந்தையின் பெயர் யோவான்”
திருவருகைக் காலம் நான்காம் வாரம் வியாழக்கிழமை
i மலாக்கி 3: 1-4; 4: 5-6
II லூக்கா 1: 57-66
“இக்குழந்தையின் பெயர் யோவான்”
இயேசுவின் பெயரை வைத்துக்கொண்டு ஒருவர் நாத்திகராகவும் இருக்கலாம்:
ஒரு சிற்றூரில் இருந்த இளைஞன் ஒருவன் நாத்திகம் பேசிக்கொண்டு திரிந்ததைக் கண்டு பலரும் வியப்படைந்தனர். இன்னும் ஒருசிலர் அவன் நாத்திகம் பேசிக்கொண்டு திரிந்ததை விடவும், அவனுக்கு வைக்கப்பட்டிருந்த பெயரைக் கண்டு வியப்படைந்தனர். ஏனெனில் அவனுக்கு இயேசு என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து அந்த இளைஞனுக்கு அறிமுகமான ஒருவர் அவனிடம் கேட்டபோது, “என்னுடைய பெற்றோர் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். மேலும் நான் இயேசு பிறந்த டிசம்பர் 25 அன்று பிறந்தேன். அதனால்தான் என்னுடைய பெற்றோர் எனக்கு இயேசு என்று பெயர் வைத்தனர். மற்றபடி இயேசுவின்மீது எனக்கு நம்பிக்கையும் கிடையாது; அவருக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது” என்று பளீரெனப் பதில் அளித்தான் அந்த இளைஞன்.
ஒருசிலர் இப்படித்தான் பெயருக்கு ஏற்ப வாழாமல், அதற்கு முற்றிலும் மாறாக வாழ்வார்கள். இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானுக்குப் பெயர் சூட்டும் சடங்கு நடைபெறுகின்றது. யோவான் என்ற பெயரின் பொருள் என்ன, அவர் தன் பெயருக்கு ஏற்ப வாழ்ந்தாரா? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத், தம் முதிர்ந்த வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். இச்செய்தியை அறிந்த அவருடைய அண்டை வீட்டார், ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டியிருக்கின்றார் என்று வீட்டிற்குச் சென்று, அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். பிறகு அந்தக் குழந்தைக்கு அதன் தந்தையின் பெயர் சூட்டப்படுவதற்குப் பதில் யோவான் எனச் சூட்டப்பட்டதை கண்டு வியப்படைக்கின்றனர்.
யோவான் என்றால் ஆண்டவர் இரக்கமுள்ளவர்; அவர் இரக்கம் காட்டினர் என்பது பொருள். யோவான், தன்னுடைய பெற்றோருக்கு முதிர்ந்த வயதில் பிறந்ததால் வானதூதர் சொன்னது போன்று அவருக்கு இப்பெயர் சூட்டப்படுகின்றது. யோவானும் தன்னுடைய பெயருக்கேற்ப, இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்படுவது போல, ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்து, மக்களை மனமாற்றத்திற்கு அழைத்து, அவர்களுக்குக் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் பெற்றுத் தந்தார். இவ்வாறு யோவான் தம் பெயருக்கு ஏற்ப வாழ்ந்து, மக்களை ஆண்டவரிடம் திரும்பினர், அவர்களுக்கு அவருடைய அருளையும் இரக்கத்தையும் பெற்றுத் தந்தார்.
திருமுழுக்கு வழியாகப் பெயரைப் பெறுகின்ற நாம், அந்தப் பெயருக்கு ஏற்ப வாழ்ந்து, மக்களுக்கு ஆண்டவரின் அருளைப் பெற்றுத் தருகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
பெயர் என்பது ஒருவரின் அடையாளம். இலாசர் பெயரோடு இருப்பதையும் செல்வந்தர் பெயரின்றி இருப்பதையும் இந்தப் பின்னணியில் வைத்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பெயர் சொல்லும் பிள்ளைகளாக வாழ்வதே பெற்றோருக்கும் கடவுளுக்கும் பெருமை சேர்க்கும்.
யோவான் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றவராய், மக்களை ஆண்டவரிடம் கொண்டு வந்தார். நாம் கிறிஸ்துவைப் பற்றி அறியாத மக்களை அவரிடம் கொண்டு வருகின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்களை விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5:16) என்பார் இயேசு. எனவே, நாம் உலகிற்கு ஒளியாய் இருந்து, மக்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.