ஏழைகளை நோக்கி திறந்த இதயத்துடன் முன்னோக்கிச் செல்வோம்
சமுதாயத்தின் பார்வைக்குத் தெரியாமல் பல்வேறு துயர்களை அமைதியாக எதிர்கொண்டுவரும் நான்கு விதமான மக்களை கிறிஸ்மஸ் சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் Mediaset என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருத்தந்தை, வேலை இழந்து குடும்ப வன்முறையால் துன்புறும் ஜொவான்னா என்ற தாய், வீடற்ற மரியா என்ற பெண், பெருந்தொற்று காலத்தில் முடங்கிப்போயிருக்கும் மரிஸ்டெல்லா என்ற 18 வயது பெண், 25 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் பியெர்த்தொனாத்தோ என்பவர் ஆகியோரின் துயர்நிலைகளுக்குச் செவிமடுத்து அவர்களோடு கலந்துரையாடினார்.
ஜொவான்னா என்ற பெண்மணி, தன் கணவரின் கைகளில் கொடுமைகளை அனுபவித்துவருவதைப் பற்றிக் குறிப்பிட்டபோது, குடும்பங்களில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையும் உரிமை மீறல்களும், அவமானத்தைத் தருவதுடன், மனித மாண்பை இழக்க வைக்கப்பதாகவும் உள்ளன என உரைத்தார்.
ஏழைகள் மீது இந்த சமுதாயம் ஏன் கடுமையாக நடந்துகொள்கிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை, மற்றவர்களின் தேவை குறித்து ஒரு சமுதாயம் கண்டுகொள்ளாமல் செல்லும்போது, புறக்கணிப்பு எனும் கலாச்சாரத்திற்குள் நுழைகிறது என்ற கவலையை வெளியிட்டார்.
இரக்கம், நெருக்கம், மற்றும் கனிவு நிரம்பியிருக்கும் இறைவன், எப்போதும் நம் அருகில் உள்ளார் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையுடனும், ஏழைகளை நோக்கி திறந்த இதயத்துடனும், முன்னோக்கிச் செல்வோம் என்ற அழைப்பையும் விடுத்தார்
Comments are closed.