#வாசக_மறையுரை (டிசம்பர் 13)

திருவருகைக் காலம் மூன்றாம் வாரம்
திங்கட்கிழமை
I எண்ணிக்கை 24: 2-7, 15-17a
II மத்தேயு 21: 23-27
இயேசுவின் (சமயோசித) ஞானம்!
ஞானத்தோடு செயல்பட்ட இளைஞன்:
தன்னிடமிருந்த கையளவு நிலத்தில் பெரியவர் ஒருவர் ஒவ்வோர் ஆண்டும் உருளைக் கிழங்குகளைப் பயிரிட்டு, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார். பெரியவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன்தான் அவருக்கு நிலத்தை உழுது தருவான்.
இப்படியே ஆண்டுகள் உருண்டோடின. ஓராண்டு பெரியவரால் தன்னுடைய நிலத்தில் உருளைக் கிழங்குகளைப் பயிரிட முடியவில்லை. காரணம், வழக்கமாக நிலத்தை உழுதுதரும் அவருடைய மகன் சிறையில் இருந்தான். இதனால் பெரியவர் தன்னுடைய நிலையை எடுத்துரைக்கும் வகையில், சிறையில் இருந்த தன்னுடைய மகனுக்கு ஒரு கடிதம் எழுதி, அனுப்பி வைத்தார்.
தன் தந்தையிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்துப் பார்த்ததும் மகன், “அப்பா! இந்த ஆண்டு நிலத்தில் எதையும் பயிரிட வேண்டாம். ஏனெனில், அதில் நான் துப்பாக்கிகளைப் புதைத்து வைத்திருக்கின்றேன்” என்றொரு தந்தி அனுப்பி வைத்தான். மகன் அனுப்பிய தந்தியை வாசித்து, அது தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் காவல்துறையினர் பெரியவரின் வீட்டிற்கு வந்து, “உங்களுடைய நிலத்தில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம், அது உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க விரும்புகின்றோம்” என்று அவருடைய நிலத்திற்குச் சென்று, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின் எதுவும் கிடைக்கததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிட்டனர்.
நடந்த யாவற்றையும் பெரியவர், தன் மகனுக்குக் கடிதம் மூலம் தெரிவித்ததும், மகன் தன் தந்தையிடம், “அப்பா! இப்பொழுது நிலம் உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கு ஏதுவாக இருக்கும். அதனால் சீக்கிரம் நிலத்தில் உருளைக் கிழங்கைப் பயிரிடுங்கள்” என்று மீண்டுமாக ஒரு தந்தியை அனுப்பி வைத்தான். அதைப் படித்துப் பார்த்துவிட்டுப் பெரியவர் தன் மகனின் ஞானத்தையும் அறிவையும் எண்ணி வியந்தார்.
ஆம், தான் சிறையில் மாட்டிகொண்டதால், தன் தந்தையால் உருளைக் கிழங்குகளைப் பயிரிட முடியாத நிலையை அறிந்த மகன், தன்னுடைய சமயோகித அறிவினால், ஞானத்தில் தன் தந்தைக்கு நிலத்தில் உருளைக்கிழங்குகளைப் பயிரிட உதவியது உண்மையில் பாராட்டுதற்குரியது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சமயோகித ஞானத்தால், அறிவினால் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் எதுவும் பேச முடியாமல் செய்தது குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு, எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்து, அதைத் தூய்மைப்படுத்தியதும், அவரிடம் வரும் தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும், “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?” என்று கேட்கிறார்கள். எருசலேம் திருக்கோயில் இயேசுவின் தந்தையின் இல்லம். அதனால் அதைத் தூய்மைப்படுத்துதற்கு அவருக்கு எல்லா அதிகாரமும் இருந்தது. இயேசு இதைச் சொன்னால், தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பர்களும் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என்பதால், இயேசு அவர்களிடம், “யோவானுக்குத் திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்.
இதுதான் இயேசுவின் சமயோகித ஞானம் அல்லது அறிவு. இயேசுவின் இக்கேள்விக்கு அவர்கள் எப்படிப் பதில் சொன்னாலும் மாட்டிக்கொள்வார்கள் என்பதால், அவர்கள் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூற மாட்டேன்” என்கிறார்.
மெசியாவாம் இயேசு கிறிஸ்துவைக் குறித்து இறைவாக்கினர் எசாயா முன்னறிவிக்கும்போது, “ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம் மெய்யுணர்வு…. இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்” (எசா 11:2) என்பார். நற்செய்தியில் இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” (லூக் 2:52) என்று வாசிக்கின்றோம். இவையெல்லாம் இயேசு ஞானத்தோடு இருந்தார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன. இப்படி ஞானத்தோடு இருந்த இயேசு தலைமைக்குருக்களும் மக்களின் முப்பர்களும் கேட்க குதர்க்கமான கேள்விகளுக்கு ஞானத்தோடு அல்லது சமயோகித அறிவோடு பதிலளித்து, அவர்களை வாயடைக்கச் செய்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களைச் சபிக்க வந்த போலி இறைவாக்கினர் (இச 23: 3-6) பாலாம், யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்!” என்று ஆசி வழங்கிவிட்டுச் செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். ஆம், யாக்கோபிலிருந்து உதித்த விண்மீனாம் இயேசு ஞானத்தோடு செயல்பட்டார். நாமும் கடவுள் அருளிய தூய ஆவியாரின் துணையால் ஞானத்தோடு செயல்படுவோம்.
சிந்தனைக்கு:
 ஒன்றைத் தெரிந்துகொள்வதற்காகக் கேள்வி கேட்பவர்களை விட, குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகக் கேள்வி கேட்பவர்கள் பலர் இங்கு உண்டு.
 கடவுளோடு ஒன்றித்திருப்பவர்களுக்குக் கடவுள் தன் ஞானத்தை அபரிமிதமாய் வழங்குகின்றார்.
 சாலமோனைப் போன்று இறைவனிடம் ஞானத்தைக் கேட்போம்.

Comments are closed.