நவம்பர் 4 : நற்செய்தி வாசகம்
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10
அக்காலத்தில்
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.
பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா?
கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.
அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————
லூக்கா 15: 1-10
பாவிகளைத் தம்மிடம் நெருங்கி வரச் செய்த இயேசு
நிகழ்வு
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன்னுடைய வீட்டிற்கு மிக அருகில் இருந்த கோயிலில் நடைபெற்று வந்த ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குச் செல்லாமல், சற்றுத் தொலையில் இருந்த ஒரு கோயிலில் நடைபெற்று வந்த மறைகல்வி வகுப்பிற்குச் சென்று வந்தான்.
இதைக் கூர்ந்து கவனித்து வந்த, அந்தச் சிறுவனுக்கு மிகவும் அறிமுகமான ஒருவர், “நீ ஏன் உன்னுடைய வீட்டிற்கு மிக அருகில் இருக்கின்ற கோயிலில் நடைபெறும் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குச் செல்லாமல், எங்கோ இருக்கின்ற கோயிலில் நடைபெறுகின்ற ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குச் செல்கின்றாய்…?” என்று கேட்டார். சிறுவன் ஒருநொடி அமைதியாக இருந்துவிட்டு சொன்னான்; “அங்கு ஞாயிறு மறைக்கல்வி நடத்துகின்றவர் என்னை மிகவும் அன்புசெய்கின்றார். அதனால்தான் நான் சிரமம் பார்க்காமல் அங்கு நடைபெறும் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குச் செல்கிறேன்.”
சிறுவன் சொன்ன அந்த ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர் வேறு யாருமல்ல, புகழ்பெற்ற மறைப்பணியாளரான டி.எல்.மூடி (D.L.Moody) என்பவரே ஆவார். டி.எல்.மூடி தன்னிடம் வந்த எல்லாரையும் மிகவும் அன்புசெய்தார். அதனால்தான் அவர் நடத்திய ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்கும் வழிபாட்டிற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள்.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வதைக் கேட்க வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் அவரை நெருங்கிச் சென்றனர் என்று வாசிக்கின்றோம். இதற்குக் காரணமென்ன…? இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியை என்ன…? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பாவிகளை அன்புசெய்த இயேசு
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வதைக் கேட்க வரிதண்டுவோரும் பாவிகளும் அவரை நெருங்கி வந்ததாக வாசிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் மட்டுமல்லாது, நற்செய்தியின் பல இடங்களில் இதுபோன்ற செய்தியினை வாசிக்கின்றோம். இதற்கு முக்கியமான காரணம், அவர் பாவிகளை மிகவும் அன்புசெய்தார் என்பதுதான்.
இயேசு பாவங்களை வெறுத்தார். ஆனால், பாவிகளை மிகவும் அன்பு செய்தார். இயேசு பாவிகளை அன்பு செய்ததால்தான் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத் 9:13) என்றும் இழந்துபோனதைத் தேடிமீட்கவே மானிடமகன் வந்திருக்கின்றார் (லூக் 19:10) என்றும் கூறினார். இவ்வாறு கூறியதோடு மட்டுமல்லாமல், அவர் அவர்களை அதிகமாக செய்தார். இன்னுமோர் உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இந்த உலகில் பிறந்த யாரும் பாவிகள்தான். இயேசுவின் காலத்தில் வாழ்ந்துவந்த பரிசேயக் கூட்டத்திற்கு இந்த உண்மை புரியவில்லை. அதனால்தான் அந்தக் கூட்டம் தன்னை நேர்மையானது என நினைத்துக்கொண்டு, இயேசு அளிக்கவந்த மீட்பினைப் பெற்றுக்கொள்ளாமலே போனது.
இயேசு பாவிகளை மிகவும் அன்பு செய்ததாலும் அவர்களைத் தேடிச் சென்றதாலும்தான், அவர்கள் அவரைத் தேடி வந்தார்கள்; அவருடைய போதனையை, அவர் சொல்வதைக் கேட்க, அவரை நெருக்கி வந்தார்கள். இது மறுக்க முடியாத உண்மை.
Comments are closed.