வாசக மறையுரை (நவம்பர் 04)
பொதுக்காலம் முப்பத்து ஒன்றாம் வாரம்
வியாழக்கிழமை
1 உரோமையர் 14: 7-12
II லூக்கா 15: 1-10
நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரியிடம் குற்றம் காண்பவரா?
ஒருவரை முழுமையாக அறியாமல் தீர்ப்பிடும் மனிதர்கள்!
ஒரு நகரில் கருத்தமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து நாள்கள் நடைபெற இருந்த, அந்தக் கருத்தமர்வில் பேசுவதற்கு பெரிய பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். கருத்தமர்வில் கலந்துகொள்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தார்கள்.
கருத்தமர்வின் முதல் நாளில் பேச்சாளர் ஒலிவாங்கியின் முன் வந்து பேசத் தொடங்கினார். அவர் ஆர்வமாய்ப் பேசிக்கொண்டிருக்கையில் முன் வரிசையில் இருந்த ஒருவர் தூங்கி வழிந்துகொண்டிருந்தார். ‘களைப்பாய் இருக்கும்போல, அதனால்தான் இவர் இப்படித் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றார்’ என நினைத்துக் கொண்டு பேச்சாளர் தொடர்ந்து பேசினார்.
இரண்டாம் நாள் வந்தது. அன்றும் பேச்சாளர் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில், முன் வரிசையில் இருந்த அந்த நபர் தூங்கி வழிந்தார். மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாள் வந்தபோதும் பேச்சாளர் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் முன் வரிசையில் இருந்த அந்த மனிதர் தூங்கி வழியத் தொடங்கினார். இது பேச்சாளருக்கு எரிச்சலை வரவழைத்தது. ‘இங்கு வந்து தூங்குவதற்குப் பதில், பேசாமல் இவர் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே! இவர் கருத்தமர்வில் கலந்துகொள்ளவில்லை என்று யார் கவலைப் பட்டது?’ என்று பேச்சாளர் தன் மனத்திற்குள்ளே தூங்கி வழிந்து கொண்டிருந்த அந்த மனிதரைத் திட்டித் தீர்த்தார்.
ஒரு வழியாக ஐந்து நாள் கருத்தமர்வு நிறைவு பெற்றது. கருத்தமர்வு நிறைவுற்றதும், பேச்சாளரைப் பார்க்க ஒரு பெண்மணி வந்தார். அவர் பேச்சாளரிடம், “நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் முன் வரிசையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாரே, அவருடைய அம்மாதான் நான்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அந்தப் பெண்மணி பேச்சாளரிடம், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் என் மகனுக்குக் கடந்த வாரம்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் அவன் அடிக்கடி தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்தமர்வில் நீங்கள் பேச வருவதாக அவன் கேள்வி கேள்விப்பட்டான். அவன் உங்களுடைய மிகப்பெரிய இரசிகர். அதனால் அவன் உங்களுடைய பேச்சை ஒருமுறையாவது நேரில் வந்து கேட்க வேண்டும் என்று இங்கு வந்தான். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் தூங்கி வழிந்தது உங்களுக்கு எரிச்சலைத் தந்திருக்கும். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.
இதைக் கேட்டதும் அந்தப் பேச்சாளர், ‘காரணம் தெரியாமல் அந்த மனிதர்மீது எரிச்சல் பட்டுவிட்டேனே!’ என்று வருத்தப்பட்டார்.
ஆம், பலரும் ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் தீர்ப்பிடுகின்றோம், குற்றம் காண்கின்றோம். இத்தகைய போக்கு தவறு என்பதை இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
வயது வித்தியாசம் இல்லாமல், பலரும் செய்கின்ற மிகப்பெரிய தவறு, அடுத்தவரிடம் குற்றம் காண்பது அல்லது அடுத்தவரை இழிவாகக் கருதுவது. இது குறித்து இன்றைய முதல் வாசகத்தில் பேசும் பவுல், “…..நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?” என்கிறார். இதன்மூலம் பவுல் கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பிடும் அதிகாரம் இருக்கின்றது என்பதால், ஒருவருக்கு அடுத்தவரைப் பற்றித் தீர்ப்பிட எந்தவோர் அதிகாரமும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்கின்றார்.
நற்செய்தியில் பரிசேயர்கள் சிலர், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே!” என்று இயேசுவை முன்னிட்டு முணுமுணுக்கிறார்கள். இப்படி இயேசுவைக் குறித்து முணுமுணுத்த பரிசேயர்களும் ஒருவகையில் பாவிகள்தான் என்பதை அவர்கள் உணராமலேயே இருந்ததுதான் வேதனையான செய்தி.
ஒருவரிடம் இருக்கும் குறைகளை மட்டுமே கண்டு, அவரைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தால், அவரை அன்பு செய்வதற்கு நேரமில்லாமல் போய்விடும்’ என்று கொல்கொத்தா நகர் புனித தெரசா மிக ஆணித்தரமாகக் கூறுவார். எனவே, தீர்ப்பிடும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உரியது என்பதை உணர்ந்தவர்களாய், ஒருவர் மற்றவரைக் குறை நிறைகளோடு ஏற்றுக்கொண்டு அன்பு செய்து வாழ்வோம்.
சிந்தனைக்கு:
குற்றம் இல்லாதவர் எனத் தேடத் தொடங்கினால், இவ்வுலகில் யாரும் மிஞ்ச மாட்டார்.
குறைகளை அல்ல, நிறைகளைப் பார்ப்பவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இறுதி நாளில் ஒவ்வொருவரும் கடவுளின் நடுவர் இருக்கைக்கு முன் இருப்போம் என்பதை மறந்து விட வேண்டாம்.
Comments are closed.